"எதேச்சாதிகாரமாக ஆட்சிசெய்ய ரணில் முயற்சி, அரசாங்கத்திற்குள் பாரிய குழப்பநிலை"
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் எதேச்சாதிகார போக்கினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணைக்கு புறம்பான வகையில் நாட்டை எதேச்சாதிகாரமாக ஆட்சி செய்ய ரணில் முயற்சிக்கின்றார். இதனால் அரசாங்கத்திற்குள் பாரிய குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் ஆளும் கட்சி கூட்டங்களை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.
30 ஆண்டு கால போரை நிறைவுக்குக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த தலைவரான மஹிந்த ராஜபக்ச தோல்வியடைவார் என நாம் கருதவில்லை.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது, மஹிந்த தோல்வியடைந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சி அமைக்க மக்கள் ஆணை வழங்கவில்லை.
தற்போது கூட்டாட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டாட்சி அமைக்கப்பட்டு ஓராண்டு கடக்க முன்னதாகவே பாரியளவில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன.
நாட்டின் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமரே நாட்டை ஆட்சி செய்கின்றார்.
ஆளும் கட்சியின் தலைவராக ஜனாதிபதி காணப்பட்டாலும், அரசியலமைப்பு திருத்தங்களை பிரதமரே கொண்டு வருகின்றார்.
மக்கள் வழங்கிய ஆணைக்கு புறம்பான வகையில் நாட்டை ஆட்சி செய்ய பிரதமர் ரணில் முயற்சிக்கின்றார்.
அரசாங்கத்திற்குள் நிலவு வரும் பாரியளவான பிளவு எப்போது வெடிக்கும் என்பதனை சொல்ல முடியாது என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment