வசீம் தாஜுத்தீன் கொலை, மகிந்தவின் பிள்ளைகள் கைதாகுவதை மைத்திரி தடுக்கிறார் - சிங்கள ஊடகம்
தாஜுதீன் கொலை விவகாரத்தில் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள சாட்சிகளின் அடிப்படையில் நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோரை கைது செய்வதற்கு சந்தர்ப்பம் இருந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழுத்தம் காரணமாக தடுக்கப்பட்டுள்ளது என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் குற்றத்துடன் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்புபட்டிருப்பதோடு அவர்களைக் கைது செய்யப்போவதாக ஊடகங்கள் தெரிவித்த போதும் அந்தக் கைதுகள் ஜனாதிபதியின் அழுத்தம் காரணமாக இடம்பெறவில்லை என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தாஜுதீன் கொலை விவகாரத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட CCTV காட்சிகளில் இருள் காரணமாக ஆட்களை சரியான முறையில் அடையாளம் காணமுடியவில்லை என அதனை ஆய்வு செய்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணணிப் பிரிவின் முகாமையாளர் எஸ்..ஐ.எம். பி அத்தநாயக்க கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸுக்கு நேற்று அறிவித்துள்ளார்.
அந்தக் காட்சிகளை வெளிநாட்டு ஆய்வாளர்களையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி ஆய்வு செய்யுமாறும் அவர் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினர் மீது FCID யினால் மேற்கொள்கின்ற விசாரணைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அழுத்தம் கொடுக்கப்படுவதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளைத் துணி (சில்துணி) வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்கவை FCID க்கு விசாரணைக்காக அழைத்தமைக்கு FCID க்குப் பொறுப்பாகவுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி வைத்தியலங்காரவை ஜனாதிபதி தொடர்பு கொண்டு திட்டியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு ஷிராந்தி ராஜபக்சவின் சிரிலிய கணக்கு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளும் ஜனாதிபதியின் தலையீட்டினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் FCID யின் பொறுப்பதிகாரியாக செயற்படுகின்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி வைத்தியலங்காரவை அந்தப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு ஜனாதிபதியின் இரகசிய நண்பரான, இரவு நேரங்களில் இரகசியமான முறையில் ஜனாதிபதியுடன் பயணம் செய்கின்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ் விக்ரமசிங்கவின் நெருங்கிய ஒருவருக்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் இரகசிய தகவல்கள் தெரிவிப்பதாக இந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் என்.கே இலங்ககோன் ஓய்வு பெற்ற பின்னர் அந்த இடத்திற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ் விக்ரமசிங்கவை நியமிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தனக்கு நெருக்கமான சிலரைப் பயன்படுத்தி FCID மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்குமாறு கூறியிருப்பது ஜனாதிபதி FCID யை தனக்கு தேவையான விதத்தில் இயக்கிக் கொள்வதற்காக என அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்தைச் சேர்ந்த சந்தேகநபர்களுக்கு வரலாற்றில் என்றும் இல்லாதவாறு ஜனாதிபதியின் அனுமதியுடன் இராணுவம் சட்டம் சார் அணுசரனைகளை வழங்குவதால் அதற்கு சிவில் அமைப்புக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
எக்னலிகொடவின் விவகாரத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் வாதிடுகின்ற அரச தரப்பு சட்டத்தரணியான திலிப் பிரிஸை அந்த வழக்கிலிருந்த அகற்றுமாறு பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாரச்சியினால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக சிவில் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான சமன் ரத்னப்பிரிய இன்று தெரிவித்துள்ளார்.
இராணுவத்தைச் சேர்ந்த சந்தேகநபர்களுக்கு இராணுவத்தினால் சட்ட ஆலோசனை வழங்கப்படுவதற்கு சட்டத்தரணி திலிப் பிரிஸ் எதிர்ப்பை வெளியிடுவதோடு இவ்வாறு செய்யக்கூடாது என்ற கொள்கையில் இருந்து வழக்கை முன்னெடுத்துச் செல்கின்றவர்.
எக்னலிகொட விவகாரத்தில் இராணுவ வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற அதேவேளை, யுத்தம் செய்ததற்காக கொலை செய்வதற்கு யாருக்கும் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
ரதுபஸ்வெல துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பொறுப்புக் கூறவேண்டிய பிரிகேடியர் தற்போது நாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவருக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கு உத்தரவிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்கு வெளியிட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று வரை அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதோடு அவரைப் பாதுகாப்பதற்கான காரணம் என்னவென்றும் கண்டறியப்படவில்லை என்றும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
"Yahapalanaya" is showing its true colour.
ReplyDeleteமான்புமிகு ஜனாதிபதியின் நல்லாட்சியில் நீதிதுரைக்கு சுதந்திரமாக செயல்படவாய்பு கொடுத்திருந்தும் அந்த ஜனாதிபதியே இதில் குருக்கீடும் செய்கின்ரார் என்பதில் எந்தலவு உன்மையுள்ளது என்பதனை அவரே உருதிசெய்யட்டும்
ReplyDeleteமகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் தற்போதைய ஜனாதிபதி அவர்கைளை ஒப்பீடு செய்கையில் இவர் எந்த பிரச்சினைக்கும் இதுவரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை அத்துடன் இவரும் ஒரு சராசரி அரசியல் வாதியாகத்தான் தென்படுகின்றார். அரசியல் அமைப்பு மாற்றப்படும் என்றார் அரசியல் மேடைகளில் அதுவும் ஐந்து வருடங்களுக்கு தள்ளிப் போய் உள்ளது. ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது ஊடகங்களில் கலர்ஸ் காட்டுவதைத் தவிர வேறெதுவும்.
ReplyDelete