மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரியின், நூற்றாண்டு விழா
கொழும்பு, மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கல்லூரி 16/01/2016 திகதி தனது முதல் நூற்றாண்டில் கால்பதித்தது. இப்பாடசாலை 16/01/1916 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
மாளிகாவத்தை வாழ் முஸ்லிம் சமூகத்தின் அக்கறையின்மை மற்றும் கல்வியின் தேவைப்பாடு உணரப்படாமையினால் அவர்கள் சமூக பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்டிருன்தனர்
இவற்றிற்கு முற்றுபுள்ளிவைக்கும் வகையில் ஒரு முஸ்லிம் பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற தேவை உணரப்பட்டதன் பின்னணியில் சமுதாயநலன்விரும்பிகளின் உதவியால் 1916ம் ஆண்டு 3 ஆசிரியா்களும் 8 மாணவா்கள் மற்றம் 2 மாணவியா்களுடனும் ஒரு முஸ்லிம் கலவன் பாடசாலையொன்றின் உதயம் உருவானது.இவ் உதயத்திற்கு பிரபல வா்த்தகரும் சமுதாயநலன்களில் அக்கறை கொண்டிருந்தவருமான பெரியார் எம்.ஏ.ஸீ.முஹம்மத் என்பவர் வித்திட்டார் என்பதை இத்தருணத்தில் வெளிப்படுத்துவது நன்றிமறவாமையாகும். மேலும் 1917ம் ஆண்டு இப்பிரதேச்தில் முஸ்லிம் சங்கத்தினால் பிரதானகட்டிடம் அமைக்கப்பட்டு இவ்வாண்டில் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய சோ்.ஈ.பீ.டென்ஹாம் அவா்களை கெளரவிக்கும் முகமாக இப்பாடசாலை,டென்ஹாம் ஆங்கில பாடசாலையாக மாற்றம் பெற்றதுடன் கல்வி திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வருடாந்த கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டது.
திறமையான நிர்வாகத்தன் கீழ் இயங்கிய எமது பாடசாலையின் வளர்ச்சி கண்டு அரசாங்கம் 1933 ஆம் ஆண்டு உதவி நன்கொடை பெறும் பாடசாலைகள் வரிசையில் எமது பாடசாலையையும் சேர்த்துக்கொண்டது. கல்வித்துறை வளர்ச்சிக்கு பல வகையிலும் பூரண ஒத்தாசை வழங்கியது போலவே விளையாட்டு துறை வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு கிடைத்தது.
இலங்கை பாடசாலைகளின் உதைபந்தாட்ட குழுக்களிடையே முதல்தரமான குழுவாக எமது பாடசாலை அணி விளங்கியதை வரலாறு சுட்டிக்காட்ட மறக்காது.
1960ம் ஆண்டில் தனியார் பாடசாலைகளை அரசாங்கம் சுவீகரிக்கும் திட்டத்தின் பிரகாரம் எமது பாடசாலையும் சுவீகரிக்கப்பட்டது. சுமார் 350 பிள்ளைகள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் இட நெருக்கடி இருந்தமையால் இருநேர பாடசாலையாகவே இயங்கிவந்தது. எனவே இடவசதி இன்மையை சுட்டிக்காட்டி புதுக்காணியோன்ரை பெற கல்வியமைசிடம் முறையீடு செய்யப்பட்டதை அடுத்து அன்று காணியமைச்சராக இருந்த திரு.பீ.பீ.ஜீ.கலுகல்ல அவர்கள் 1964ம் ஆண்டில் காணி பெறுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியதோடு,உத்தரவையும் பிறப்பித்தார்.
பாடசாலைக்கென்று காணி பெற நிலம் இருந்தும்,அதனை வழங்க காணி சொந்த காரர்கள் இணங்கி இருந்தும்,எமது மக்களது கவனயீனத்தால் காணியை பாடசாலைக்கு பெற முடியாது போனது. இது உண்மையிலேயே ஒரு கசப்பான வரலாற்று சம்பவம் ஆகும்.
சுமார் 450 பிள்ளைகள் வரை கல்வி கற்ற எமது பாடசாலை மகா வித்தியாலயமாக 1967ல் தரம் உயர்த்தப்பட்டது. இதன் பிறகு “டென்ஹாம் ஆங்கிலப்பாடசாலை” என அழைக்கப்பட்ட எமது கல்விக்கூடம் “சாந்தியின் இல்லம்” எனும் பொருள் தரும் “தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயம்” எனப்பெயரையும் மாற்றிக்கொண்டது. 1967ல் ஆங்கில மொழி மூலமான வகுப்புக்கள் குறைக்கப்பட்டு தமிழ்,சிங்கள மொழி மூலமான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
மாணவர் தொகை அதிகரித்துக்கொண்டே வந்தமையினால் இடநெருக்கடி காரணமாக காளத்திக்கு ஏற்ப அதிபர்கள்,நலன் விரும்பிகளின் முயட்சியினாலும்,பெரும்தகைகளினது உதவியினாலும் பாடசாலைக்கு கட்டடங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன் அதிபர் U.L.கலீல் ரஹ்மானின் காலத்தில் உலக வங்கியின் ஆதரவில் பிரதேச மட்டத்தில் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ்(D.S.D) பெறப்பட்ட இருமாடிக்கட்டடத்தின் உதவியுடன் 1960ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கிவந்த மலைபாடசாலையை 2000ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவந்தார்.
மிகப்பழமை வாய்ந்த இப்பாடசாலை 100 வருடங்களையும் கடந்து மிகச்சிறப்பாக செயற்பட்டு வருகிறது.அதன் வரலாற்றை புரட்டிப் பார்க்கும்பொழுது பாடசாலையின் சிறப்பான படிமுறை வளர்ச்சியையும் மாளிகாவத்தை பிரதேசத்தின் கல்வித்துறையில் இப்பாடசாலையின் பங்களிப்பும் மறுக்க முடியாத உண்மையே.
அன்று முதல் பாடசாலை பல்வேறு படித்தரங்களாக பிரதேச பெரும்தளைகளின் உழைப்பினால் தொடர்ந்தும் வளர்சிகண்டு வருகிறது.மாணவர்களின் இடைவிடாத முயற்சியும்,பெற்றோர்கள் வழங்கும் ஊக்கமும்,ஆசிரியர்களின் கற்பித்தல் திறமையும்,அதிபரின் வழிநடாத்தலும் பாடசாலையின் வளர்ச்சிக்கு பிரதான காரணமாக அமையும் அதேவேளை இதற்கு தேவையான வளங்களையும்,வசதிகளையும் அமைத்துக்கொடுக்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பழைய மாணவர் சங்கம் என்பனவையே சாரும்.
இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை பழைய மாணவர் சங்கம் பாடசாலையின் பல்வேறு தேவைகளை இனம் கண்டு அதனை நிவர்த்தி செய்யவேண்டிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கான போதுமான வகுப்பறைகள் இல்லாமை பெரும் குறைபாடாகவே காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஒரே வகுப்பில் இட நெருக்கடிகளுடன் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் துர்பாக்கிய நிலை இங்கு காணப்படுகின்றது
விஞ்ஞான ஆய்வு கூடமும் வகுப்பறையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் மாணவர்கள் பூரணமாக விஞ்ஞான ஆய்வு கூடத்தை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.பாடசாலைக்கு கட்டிடங்களை கட்ட போதியளவு நிலப்பரப்பு இல்லாததால் பழைய கட்டிடங்கள் மூன்றையும் அகற்றி மாடிக்கட்டிடங்கலாக கட்ட வேண்டிய தேவை உணரப்பட்டமையினால் முதல் கட்டமாக பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியினால் ஊர் பிரமுகர்கள்,தனவந்தர்கள்,அரசியல் தலைவர்கள் மற்றும் செரண்டிப் பாடசாலை அபிவிருத்தி சங்கம், உலக மேமன் சங்கம் என்பனவற்றின் உதவியோடு பாடசாலை அலுவகத்தின் முன்னாள் அமைந்துள்ள கட்டடம் அகற்றப்பட்டு 8 வகுப்பறைகளையும், ஒரு கணினிஅறை அடங்கிய மூன்று மாடிகளைக்கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு (05/09/2014) அன்று அதிபர் ஜனாபா எம்.ஏ.ஸீ.யூ. சஹாபான் அவர்களின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
மீதமுள்ள இரண்டு கட்டிடங்களும் அகற்றப்பட்டு பாடசாலை மண்டபம்,நூலகம்,உள்ளடங்கலான மாடிக்கட்டங்களை கட்டி மாணவர்களுக்கு போதுமான வகுப்பறைகளை பெற்றுக்கொடுப்பதில் பழைய மாணவர் சங்கம் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறது. அதனோடு தரம் 5 புலமைப்பரிசில்,(கா.போ.தா) சாதாரண மற்றும் உயர் தர மாணவர்களுக்கான பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்கோடு மேலதிக வகுப்புக்களையும் நடாத்தி வருகிறது. மேலும் கல்வி,விளையாட்டு,சாரணியம்,கலை இலக்கிய மன்றங்கள் மற்றும் கல்வித்துறைசார் இதர செயட்பாடுகளையும் சிறந்த முறையில் நடாத்திச்செல்ல பழையமாணவர் சங்கம் பாடசாலை அதிபர் முஹம்மத் நலீப் ரபாfய்டீன் மற்றும் வினைத்திறன் மிக்க ஆசிரியர் குழாத்துடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எமது பாடசாலை 16/1/2016 ஆம் திகதியிலிருந்து தனது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை நூற்றாண்டு விழாக்கோலம் எனும் தொனிப்பொருளில் மிகப்பெருமையுடன் ஆரம்பிக்கின்றது. அதன் முதல் கட்டமாக ஜனவரி 18 மற்றும் 19ஆம் திகதிகளில் பாடசாலை கண்காட்சி நடக்கவிருக்கும் அதேவேலை 25ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் பாடசாலை மண்டபம் உட்பட 3 மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுண்டன் தெரிவித்துகொள்கிறோம்.
ஊர்வாசிகள்,பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள், சேவை உள்ளம் படைத்த தனவந்தர்கள், புத்திஜீவிகள், பிரதேச அரசியல் தலைவர்கள் கட்சி பேதமின்றி சமூகத்தின் வளர்ச்சிக்காகவும்,சிறந்த நட்பிரஜைகளையும்,புத்திஜீவிகளையும்,அறிஞ்சர்களையும் மாளிகாவத்தை பிரதேசத்தில் உருவாக்குவதற்காகவும் எங்களுக்கு உறுதுணையாக வரவேண்டுமென்ற நியாயமான எதிர்பார்ப்புடன் எமது சேவை தொடர்ந்துகொண்டே இருக்கும் இன்ஷா அல்லாஹ்.. அன்று முதல் இன்று வரை தாருஸ்ஸலாம் கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்காற்றிய அனைவருக்குமாய் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக.
குறிப்பு:- கொழும்பிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் நூற்றாண்டை பூர்த்தி செய்யும் மூன்றாவது பாடசாலை இதுவாகும்
 
இப்படிக்கு பழைய மாணவர் சங்கம்
Post a Comment