Header Ads



"மாடுகளின் மனங்களை குளிரவைப்பது"

/மொஹமட் பாதுஷா/ 

இறைச்சிக்காக மாடுகளை அறுத்தல், ஒரு தேசிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது. அஃறிணைகள் மீதான அக்கறை என்ற பெயரில் வேறு ஏதோவொரு நகர்வு இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. மறுபக்கமாக, மாட்டிறைச்சி இல்லை என்றால் தம்முடைய சாப்பாட்டின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் என்ற அளவுக்கு முஸ்லிம்கள் இவ்விடயத்தை சிந்திக்கத் தொடங்கி இருக்கின்றனர். பல்லின நாடு என்ற வகையில், இலங்கையில் மாடறுத்தல் என்பது எப்போதும் ஒரு பிரச்சினையாக இருந்து வந்திருக்கின்றது. இதன் கடைசிக் கட்டம், இரண்டு வருடங்களுக்கு முன்னர் அரங்கேறியது. இலங்கையில் மாடு அறுப்பதையும் மாட்டிறைச்சிக் கடைகளையும் தடை செய்ய வேண்டும் என்று 2014 பெப்ரவரி மாதத்தில், பொது பல சேனா அமைப்பு பாரிய எதிர்ப்பு பிரசாரம் ஒன்றை மேற்கொண்டிருந்தது. மஹிந்த அரசு இனவாதிகளுக்கு அப்போது ஒத்து ஊதிக் கொண்டிருந்தாலும் கூட, இம் முயற்சி கடைசியில் வெற்றியளிக்கவில்லை.   இப்போது நல்லாட்சி ஏற்பட்டிருக்கின்றது. அல்லது அவ்வாறு நம்பிக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறான ஒரு காலப்பகுதியில், 'உள்நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதைத் தடை செய்து, வெளிநாட்டில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக' ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில், கட்டுங்கடங்காமல் போய்க்கொண்டிருந்த இனவெறுப்பு பிரசாரத்தையும் இனவாத செயற்பாட்டையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே, தற்போதைய ஜனாதிபதிக்கு முஸ்லிம்களும் தமிழர்களும் வாக்களித்தனர். தாம் தாமாக வாழ்வதற்கான ஜனநாயக உரிமையின் விடிவெள்ளியாக ஜனாதிபதியை சிறுபான்மை முஸ்லிம்கள் கருதியிருந்தனர். ஆயினும், அவரே இன்று மாடறுப்பைத் தடை செய்யப் போவதாக கூறியுள்ளமை முஸ்லிம்களிடையே உள்மன சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள், தம்முடைய உணவில் பிரதான கறியாக மாட்டிறைச்சியை சேர்த்துக் கொள்கின்றனர். முஸ்லிம்கள் மட்டுமல்ல கணிசமான சிங்களவர்களும் ஒருதொகுதி தமிழர்களும் கூட மாட்டிறைச்சிப் பிரியர்களாக இருக்கின்றனர் என்பது மறந்துவிடக் கூடாது. விலங்குகளை துன்புறுத்தலையும் வதை செய்தலையும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் பின்பற்றுகின்ற இஸ்லாமிய மார்க்கமானது, 'புல், பூண்டுகளில் கூட அக்கறை காட்டுமாறு' அறிவுறுத்தியிருக்கின்றது. இருப்பினும், மனிதர்களே இவ்வுலகின் உயரிய படைப்புக்கள் என்ற அடிப்படையில், அவர்கள் சாப்பிடுவதற்காக இஸ்லாம் மார்க்கம் சில உணவுகளை ஆகுமானதாக ஆக்கியுள்ளது. அதில் ஒன்றுதான் மாட்டிறைச்சியும். அதைத்தவிர, மாட்டிறைச்சியை கட்டாயமாக சாப்பிட வேண்டும் என்ற எந்த கட்டளையும் இஸ்லாத்தினால், முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கப்படவில்லை என்பதை மாற்றுமத சகோதரர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இதை விட அருவருப்பான, நாம், 'நஞ்சு' எனக் கருதக்கூடிய பல வகையான மிருகங்கள், ஊர்வன, பூச்சிகள் எல்லாம் வேறு பல நாடுகளில் உணவுக்காக பயன்படுத்தப்படுவதை நாம் அறிவோம். அந்தந்த நாட்டின் கலாசாரம், பண்பாடு, மதநம்பிக்கைகள் எல்லாம், அவ் உணவுகளை ருசியானவையாகவும் ஆரோக்கியமானவையாகவும் ஆக்கியிருக்கின்றன. இதைத்தவிர வேறெந்த காரணமும் இல்லை. எனவே, தமக்கு விருப்பமான உணவை சாப்பிடுவதற்கு ஒவ்வொரு இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்களுக்கும் உரிமை இருக்கின்றது. இது ஒருவகையில் அவர்களது அடிப்படை உரிமை என்றும் சொல்லலாம். அவ் உணவு உடலுக்குக் கேடு விளைவிப்பதாக இல்லாத பட்சத்தில் அதை தடைசெய்வது நியாயம் இல்லை. அப்படிப் பார்த்தால், இலங்கையைப் பொறுத்தவரை அரசாங்கம் சுகாதார காரணங்களுக்காக  அன்றி, மிருகவதை என்ற அடிப்படையிலேயே மாடு அறுப்பதை தடைசெய்ய நினைக்கின்றது. 'உயிரினங்கள் மீதான வதை' என்ற விடயததுக்கு வருவோம். இது உண்மையிலேயே உலகளவில் இன்று மிகவும் முக்கியமான ஒரு பிரசாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் சில விடயங்களை உள்வாங்கிக் கொள்ளவே வேண்டும். ஆனால், கிழக்கில் புலிகளால், முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், வடக்கில் இராணுவத்தால் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்ட போதும், சிங்கள ஆட்சியாளர்களுக்கு வராத உயிர்கள் மீதான அக்கறை, இன்று மாடுகள் மீது வந்திருப்பது மிகவும் ஆச்சரியமளிக்கின்றது. உங்களுக்கு ஞாபகமிருக்கும் - வடபுல குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் யுத்தத்தால் சிதறுண்டு போயிருந்த காலத்தில், பால்குடிமறவா இரண்டு யானைக் குட்டிகள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டமைக்காக கவலைப்பட்ட சிங்கள தேசியத்தின் பண்புகள், சில வேளைகளில் நல்லாட்சியிலும் வெளித்தள்ளுகின்றதோ என்ற சந்தேகம் உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. உண்மையாகவே, இலங்கையில் மாடறுப்பைத் தடை செய்வது மிருக வதையைத் தடை செய்வதற்கு என்றால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது பிரச்சினையில்லையா, இலங்கையில் வாழும் மக்களுக்காக நமது நாட்டில் அல்லாமல் கண்ணுக்கு தெரியாத ஒருநாட்டில் மாடுகளை அறுத்தால் அது வதை இல்லையா என்ற கேள்வி எழுகின்றது. உடனடியாக அறுக்கப்பட்ட மாட்டிறைச்சியிலேயே பல நுண்ணங்கிககள் இருக்கின்ற போது, பல நாட்களுக்கு முன்னர் பொதி செய்யப்பட்ட மாட்டிறைச்சியை நம்பி சாப்பிட முடியுமா? முஸ்லிம்கள் மாடுகளை வதை செய்து அறுப்பது இல்லை. ஒரு வேளை அவ்வாறு வைத்துக் கொண்டாலும், மாடறுப்பது மட்டும்தான் மிருக வதையா, மாடு மட்டும்தான் உயிரினமா,  கோழியும் ஆடும் உயிரினங்கள் இல்லையா? மரக்கறிகள், இலைக்கறிகளுக்குக் கூட உயிர் இருக்கின்றது. எனவே, மரக்கறி சாப்பிடுவதும் ஒருவிதத்தில், ஓர் உயிரைக் கொன்றுதான் நிகழ்கின்றது. மாடு அறுக்கும் போது, அது அலறுவது நமது கண்களுக்குத் தெரிகின்றது. ஆனால், மரக்கறிகளை வெட்டும்போது அதன் வலி தெரிவதில்லை. அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால், இரண்டு இடங்களிலும் ஓர் உயிரினம் - கறி ஆகின்றது என்பதை மறந்து விடக் கூடாது. இது இவ்வாறிருக்க, மாட்டிறைச்சியை அதிகமாக சாப்பிடுபவர்கள் முஸ்லிம்கள் என்றாலும், மாடுகளை வளர்ப்போரும் அதை வைத்து தொழில் செய்வோரும் பெருமளவில் முஸ்லிம்கள் அல்லர். இலங்கையில் தற்போதைய நிலவரப்படி இறைச்சிக்காக மாடுகளை வளர்ப்போரில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் ஒரு நாளைக்கு 6,000 ஆயிரம் வரையான மாடுகள் அறுக்கப்படுகின்றன என்று எடுத்துக் கொள்வோம். இந்நிலையில், மாடறுப்பு தடை செய்யப்பட்டால் மாதமொன்றுக்கு ஒரு இலட்சத்து எண்தாயிரம் மாடுகள் அறுக்கப்பட மாட்டாது. ஒரு வருடத்திற்கு 21 இலட்சம் மாடுகள் அறுக்கப்படாமல் பண்ணைகளில் தேங்கிக் கிடக்கும். இதனால் நேரடியாக சிங்கள மாட்டுப் பண்ணையாளர்களின் வியாபாரம் ஸ்தம்பிதமடையும். அதுமட்டுமன்றி இவ்வாறு மாடுகள் பெருகுவதால் அவற்றிற்கு பல இலட்சம் லீட்டர் தண்ணீரும், தீனியும் தேவைப்படும். இம்மாடுகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல், ஐந்து வருடங்கள் நிலைமை இவ்வாறே தொடர்ந்தால் வீதிகளில் ஆட்களைப் போல மாடுகள் நடமாடும். மாடறுப்பு தடை அமுலுக்கு வந்தால், இறைச்சிக் கடைகளில் இருந்தான வரி வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைக்காது. மறுதலையாக, இறக்குமதி செலவினம் அதிகரித்து சென்மதி நிலுவைப் பிரச்சினை ஏற்படும். ஒன்றில், மாடுகளின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தி ஒவ்வொரு வீட்டுக்கும் இத்தனை கிலோ கிராம் இறைச்சிதான் வழங்கப்படும் என்ற அடிப்படையில் பங்கீட்டு (கூப்பன்) அட்டைகளை விநியோகிக்க வேண்டிய நிலை உருவாகும். அல்லது தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து 'வதையில்லாமல்' மாடுகளை அறுப்பதற்கு, அரசாங்;கமே பிரசாரம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை. முன்னைய அரசாங்கம் மாடறுப்பைத் தடை செய்வதாக பேச ஆரம்பிக்கும் போதே, அரசாங்கத்துக்கு நெருக்கமான 'புள்ளிகள்' பலர், பன்றிப் பண்ணைகளை உருவாக்கக் தொடங்கி விட்டதாக தகவல்கள் கசிந்திருந்தன. அவ்வாறு இந்த அரசாங்கமும் ஒரு தடையை கொண்டு வருமாக இருந்தால், பன்றி வியாபாரம் களைகட்டும், கோழி வியாபாரிகள் நன்றாக உழைப்பார்கள், தங்க விலைக்கு ஆட்டிறைச்சி விற்கப்படும். இதன் விளைவாக,  முஸ்லிம்களது உணவுப் பழக்கம் கட்டுக்குள் வரும். நோய்களும் குறைவடையலாம். மாடறுப்பைத் தடை செய்ய வேண்டுமென்று இனவாதிகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வந்தாலும், அவ்விடயத்தை இன்று நாட்டின் ஜனாதிபதியே கூறியுள்ளமை, முஸ்லிம்கள் மத்தியில் மனக் கிலேசத்தை தோற்றுவித்திருக்கின்றது. இதனை ஒரு தேசியப் பிரச்சினை போல் முஸ்லிம்கள் இப்போது பேசத் தொடங்கியுள்ளனர். இது முஸ்லிம்களை இலக்காக வைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்றால் அதற்காக பேச வேண்டிய கடப்பாடு எல்லோருக்கும் இருக்கின்;றது. மாடுதானே, என்று விட்டு விட முடியாது. ஆனால், ஜனாதிபதியும் பிரதமரும் முஸ்லிம்களின் மனம்கோணும்படி நடந்து கொள்வார்களா என்பதை சிந்திக்க வேண்டும். ஜனாதிபதி இவ்விடயத்தை என்ன கோணத்தில் பார்க்கின்றார், இதில் ஏதேனும் உயரிய நோக்கம் இருக்கின்றதா? என்பதை ஆழமாக நோக்க வேண்டும். இன்னுமொரு முக்கிய விடயத்தை முஸ்லிம்கள் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. அது என்னவெனில், மாட்டிறைச்சி முஸ்லிம்களுக்கு ஹலால் ஆக்கப்பட்ட உணவாக இருந்தாலும் ஹலாலாக்கப்பட்ட உணவு அதுமட்டுமல்ல. இன்னும் நிறைய உணவுகள் மீதமிருக்கின்றன. ஏனைய பல ஆரோக்கியமான, சத்துள்ள கறிகள் முஸ்லிம்களுக்கு சந்தையில் கிடைக்கக் கூடியதாக இருக்கின்ற போதிலும், மாட்டிறைச்சி மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள மோகம் அளவுக்கு அதிகமானதாகும். மாட்டிறைச்சி சமைக்காவிட்டால் உணவில் ஏதோ குறைந்து விட்டதைப் போன்ற மனநிலை ஏற்படுமளவுக்கு இறைச்சிக்கறி என்பது நம்முடைய உணவில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கின்றது. ஆனாலும், மாட்டிறைச்சி அளவுக்கதிகமாக சாப்பிடுவது உடலில் பல தேவையற்ற உபாதைகளுக்கு இட்டுச் செல்வதாக குடும்ப வைத்தியர்கள் கூறுகின்றனர். அதிலிருக்கும் ருசியின் அளவுக்கு, ஆரோக்கியம் இல்லை என்று தெரிய வந்ததால், சில முஸ்லிம்கள் அதை சாப்பிடும் பழக்கத்தை குறைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அநேகருக்கு அது சாத்தியமற்றுப் போயிருக்கின்றது. இன்னுமொரு விடயம் - மாட்டிறைச்சி அல்லது மாடறுத்தல் இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறியிருப்பதற்கு முஸ்லிம்ளின் பக்கத்திலும் பல தவறுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கட்டுப்பாடற்ற எண்ணிக்கையில் மாடுகளை அறுத்தல், பொதுச்சுகாதார அதிகாரிகளை கவனித்துவிட்டு ஆரோக்கியமற்ற மாடுகளை அறுத்தல், சட்டவிரோதமாக மாடுகளை கொண்டு செல்லல், மற்ற சமூகத்தவர் முகம்சுழிக்கும் விதத்தில் அறுத்தலும் விற்பனை செய்தலும், இறைச்சிக் கடைகளுக்கான கேள்விப்பத்திர (டென்டர்) போட்டியை வளர்த்துவிட்டு அதை ஒரு பெரிய வியாபரமாக காண்பித்தமை என பல தவறுகளை முஸ்லிம் வியாபாரிகள் மேற்கொண்டுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. எனவே, இவ்வாறான விடயங்களை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, மாடறுத்தல் மற்றும் இறைச்சிக்கடை வியபாரத்தை நெறிமுறைப்படுத்து மிக அவசியமான நடவடிக்கை என்பதில் மறுபேச்சுக்கே இடமில்லை. அவ்வாறில்லாமல் மேற்சொன்ன சிக்கல்களை எல்லாம் உண்டுபண்ணக் கூடிய மாடறுப்புத் தடையை அமுல்படுதுவதன் மூலம் சிறுபான்மை முஸ்லிம் மனிதர்களின் மனங்களை நோகவைத்துவிட்டு, மாடுகளின் மனங்களை குளிரவைப்பது நல்லதென நல்லாட்சி அரசாங்கம் கருதினால், மாடறுப்பு தடையை அமுல்படுத்தட்டும்.   

1 comment:

Powered by Blogger.