Header Ads



சிறையில் அடைக்கப்பட்ட ஞானசார, மீட்டுச்செல்ல பிக்குகள் குழு தீவிர முயற்சி (முழு விபரம் இணைப்பு)

ஹோமாகம நீதிமன்றத்திற்குள் இன்று மாலை வரை சிக்குண்டிருந்த கலகொட அத்தே ஞானசார தேரர் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் இன்று நன்பகல் ஹோமாகம நீதிமன்றம் ஞானசார தேரருக்கு பதினான்கு நாள் விளக்கமறியல் தண்டனை விதித்திருந்தது. எனினும் அவரை விளக்கமறியலுக்கு அழைத்துச் செல்வதில் சிறைச்சாலை அதிகாரிகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தனர்.

நீதிமன்ற கட்டிடத்தைச் சுற்றிலும் சூழ்ந்து நின்ற பெருமளவான பௌத்த பிக்குகள் ஞானசார தேரரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல விடாமல் தடுப்பதில் கடும் தீவிர போக்குடன் நடந்து கொண்டிருந்தனர்.

அவ்வாறு ஞானசார தேரரை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றால் தான் பெற்றோல் ஊற்றி கொளுத்திக் கொள்ளப் போவதாக கிரம தேவிந்த தேரர் என்பவர் அச்சுறுத்தியிருந்தார்.

அத்துடன் நீதிமன்றக் கட்டிடத்திற்குள்ளிருந்து ஞானசார தேரரை பலவந்தமாக மீட்டெடுத்துச் செல்லவும் பிக்குகள் குழுவொன்று தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்ததது.

எனினும் நீதிமன்றக் கட்டிடத்தை சுற்றிலும் 500க்கும் மேற்பட்ட பொலிசாரும், கலகம் அடக்கும் பிரிவினரும் நிலை கொண்டிருந்த காரணத்தினால் பிக்குகளின் முயற்சி வெற்றியளிக்கவில்லை. அதே நேரம் பிக்குகளின் ஆவேசமான நடத்தை காரணமாக ஞானசார தேரரும் நீதிமன்றக் கட்டிடத்திற்குள்ளேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் இன்று மாலை நான்கரை மணியளவில் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

அதன் பின்னர் சிறைச்சாலை ஆணையாளரின் சொகுசு வாகனம் நீதிமன்றத்திற்கு அருகில் கொண்டு வரப்பட்டு ஞானசார தேரர் பலத்த பாதுகாப்புடன் இன்று மாலை ஆறுமணியளவில் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது பிக்குகள் சிலர் கற்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் கொண்டு விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசாரைத் தாக்கியுள்ளனர்.

தற்போது ஹோமாகம நீதிமன்றம் அருகே கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் பிக்குகள் கலைந்து செல்லத் தொடங்கியிருக்கும் அதே வேளை,  ராஜகிரியவில் ஞானசார தேரர் தங்கியிருந்த விகாரை அருகே நேற்றிரவு போன்று இன்றும் பெருந்திரளான பொதுமக்கள் ஒன்று கூடத் தொடங்கியுள்ளனர்.

4 comments:

  1. நீதிமன்றச் சுவர்களிலும் சுற்று மதில்களிலும் வானரங்கள்போல ஏறியும் கூத்தாடியும் பொலீசாரின் தொப்பிகளைப் பிடுங்கி வீசியும் பிக்குகள் மூர்க்கத்துடன் கேவலமாக நடந்துகொண்டதை தொலைக்காட்சியில் பார்த்தபோது, 'நானும் ஒரு பௌத்தன் என்பதற்காக தலைகுனிகின்றேன்' என்று பிரதமர் திரு. ரணில் விக்கிரமசிங்ஹ கூறியதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. என்ன காரணத்திற்காக இவர் சிறைக்கு அடைக்கப்பட்டார்

      Delete
  2. தலை மட்டும் தான் குணிய முடியும் வேறொன்றும் பிடுங்க முடியாது

    ReplyDelete
  3. Sir John Kotalawala should come again

    ReplyDelete

Powered by Blogger.