Header Ads



ஜனாதிபதியாக இருந்தால் என்ன, பிரதமராக இருந்தால் என்ன. தட்டிக் கேட்க தயங்கமாட்டோம் - றிசாத்

நமது நாட்டில் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த கதை போன்று தற்போது கொண்டுவரப்படும் புதிய யாப்பும் இருக்கக் கூடாது என்றும், சிறுபான்மை மக்களின் நலன்களை பேணும் வகையில் உத்தேச யாப்பு அமைவதன் மூலமே நமது வெற்றி தங்கியுள்ளது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

தேர்தல் திருத்தச் சட்டத்திலும், அரசியல் யாப்பு திருத்தத்திலும் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் எமது கட்சி அதனைத் தட்டிக் கேட்கும் என்றும் அவ்வாறான ஏற்பாடுகளை எதிர்க்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.  அரசியல் அமைப்பு திருத்தச் சட்ட மூல விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது அமைச்சர் றிசாத் தொடர்ந்து உரையாற்றுகையில்,

1947 ஆம் ஆண்டு பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட சோல்பரி யாப்பில் பல குறைபாடுகள் இருந்ததாக அப்போது கூறப்பட்டது. பல்லின மொழி, மத, கலாசாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த நாட்டின், பன்மைத் தன்மையை சோல்பரி யாப்பு கொண்டிருக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த யாப்பின் 29 ஆவது சரத்தின், 2 ஆம் உப பிரிவில் சிறுபான்மை மக்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என பெரும்பான்மை இனத்தின் ஒருசாரார் குற்றஞ்சாட்டிய அதேவேளை ஒற்றை ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்ட இந்த யாப்பு சிறுபான்மை இனத்தின் நலன்களை பாதிப்பதாக சிருபன்மை மக்கள் குறைபட்டனர்.

இலங்கையில் மாறி மாறி வந்த அரசுகளான ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் காலத்துக்கு காலம் தமது வசதிக்கும், கொள்கைக்கும் ஏற்ப யாப்புக்களை மாற்றியதே இந்த நாட்டின் வரலாறாகிவிட்டது. 1972 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தலைவியான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையில், மக்கள் ஐக்கிய முன்னணி அரசு கொண்டு வந்த முதலாவது குடியரசு யாப்பு தொடர்பிலும் பெரும்பான்மையும், சிறுபான்மையும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை வெளிப்படுத்தினர். 

அந்தக் காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் அவதியுற்ற சிங்கள இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் கிளர்ச்சிகளை உருவாக்கியதும் இந்த யாப்பின் விளைவே. அதேபோன்று தமிழ் இளைஞர்கள் தமது இனம் மோசமான முறையில் அடக்கியொடுக்கப்படுவதாக கூறி ஆயுதப் போராட்டத்தை இந்த காலகட்டத்தில் ஆரம்பித்ததை நாம் மறந்துவிட முடியாது. 1976 ஆம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணி, வட்டுக் கோட்டையில் தமிழீழத்  தீர்மானத்தை நிறைவேற்றி அகிம்சை வழிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததும் இதன் பின்பே. அகிம்சை போராட்டம் தோற்றதன் விளைவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்க காரணமாக அமைந்தது. இந்த யாப்பும் தோல்வியில் முடிந்தது.  

1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர் அரசு 2 ஆம் குடியரசு அரசியல் யாப்பை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதுடன்  நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையையும்  கொண்டுவந்தது.  இந்த யாப்பில் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த போது, மாமனிதர் அஷ்ரப் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கிணங்க 12 வீதமாக இருந்த சிறுபான்மை பிரதிநிதித்துவ வெட்டுப்புள்ளி 5 வீதமாக குறைக்கப்பட்டு சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை வரலாறு. 

தற்போது நடைமுறையில் உள்ள யாப்பிலே 19 சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 30 வருட கொடூர யுத்தத்தினால் இந்த நாடு தத்தளித்து இலட்சக்கணக்கான உயிர்களை காவுகொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை நாம் அறிவோம். இலங்கை மக்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டது. இனங்களுக்கிடையிலான நல்லுறவு சீர்குலைந்தது. சிங்கள - தமிழ் என்று தோற்றம் பெற்ற முரண்பாடுகள் பின்னர் தமிழ் - முஸ்லிம், சிங்கள – முஸ்லிம்  என்ற முரண்பாடுகளாக விரியத் தொடங்கின.
ஒரு நல்ல அரசியல் யாப்பு சிறந்த அடிப்படை பண்புகளை கொண்டிருக்க வேண்டும். ஆனால் மாறி மாறி வந்த அரசியல் யாப்புக்கள் இனங்களுக்கிடையே குரோத உணர்வுகளை வளர்க்க பயன்பட்டதே தவிர சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவில்லை. தேசிய பொருளாதாரத்தை கட்டிளுப்பவுமில்லை. தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கவுமில்லை. அரசியல், சமூக, பொருளாதார உயர்வுக்கு வழி  வகுக்கவுமில்லை. 

தற்போது நாம் கொண்டுவர எண்ணியுள்ள புதிய அரசியல் யாப்பு இனப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை ஏற்படுத்தி, ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமே மூன்றினங்களும் நிம்மதியாக வாழ முடியும். சிறுபான்மை மக்கள் தன்மானத்துடனும் கௌரவத்துடனும், அச்சமின்றியும் வாழும் சூழலை இந்த யாப்பு ஏற்படுத்துமேயானால் நாம் இந்த சீர் திருத்தத்துக்கு பூரண ஒத்துழைப்பை  வழங்குவோம். அதேபோன்று தேர்தல் சீர் திருத்தத்திலும், உள்ளூராட்சி தேர்தல் முறையிலும் இனங்களுக்கிடையிலான அரசியல் பிரதிநிதித்துவ சமநிலை பேணப்பட வேண்டுமென நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். 

ஜனாதிபதியாக இருந்தால் என்ன, பிரதமராக இருந்தால் என்ன  எமக்கு அநியாயம் இழைக்கப்பட்டால் நாம் தட்டிக் கேட்க தயங்கமாட்டோம்.

இந்த நாட்டிலே ஒரு புதிய அரசியல் கலாசாரம் ஏற்பட்டுள்ளது. தேசிய நல்லிணக்க அரசாங்கத்தில் எதிர்கட்சித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பணியாற்றுகின்றார். ஐயா சம்பந்தன் அவர்களே! உங்களிடம் உருக்கமாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றேன். அரசியலமைப்புச் சீர்திருத்தம், தேர்தல் முறை மாற்றம் என்பவை தொடர்பில் சிறந்த கருத்துக்களை பாராளுமன்றத்திலும், மக்கள் அரங்குகளிலும் முன் வைக்கும் நீங்கள், உங்களுடன் வாழ்ந்த இன்னொரு சகோதர இனமான முஸ்லிம் சமூகத்தின்  துன்பங்களையும் மனக்கண் முன் நிறுத்திப் பார்க்க வேண்டும். அகதி முகாம்களில் இன்னுமே அடிப்படை வசதியின்றி, அவலங்களுடன் வாழும் இந்த மக்கள் மீளக் குடியேறுவதில் ஏற்படும் தடைகளை நீங்கள் தட்டிக் கேட்க வேண்டும். அதில் தலையிட வேண்டும். உங்கள் அமைப்பிலுள்ள ஒரு சிலர் இந்த மக்களின் குடியேற்றத்துக்கு இன்னும் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். அண்மையில் மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகிய எம்.பிக்களிடம் எமது மனக் குறைகளை வெளிப்படுத்தினோம்.

எனவே மனிதாபிமானத்துடன் இந்தப் பிரச்சினைக்கு உதவுங்கள் என நான் அன்பாக வேண்டிகொள்கின்றேன்.

6 comments:

  1. I like your leadership quality towards muslim community. I wish you for long life.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அழகான பேச்சு மேலான அல்லாஹ் உங்களுக்கு மன தைரியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டும் எதிரிகளின் சூச்சிகளில் இருந்தும் அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக ஆமீன்

    ReplyDelete
  3. குறைந்தபட்சம் இப்போதாவது நமது அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்புகள் என்று ஒன்று தமக்கு இருப்பது நினைவுக்கு வருவது ஆரோக்கியமான மாற்றம்தான்

    ReplyDelete
  4. Enter your comment...this comment is not suitable for rishad.becaues rishad has spoken in cabinet surveral time.

    ReplyDelete
  5. Masha allah gread leader for muslims rishad badiudeen mp

    ReplyDelete

Powered by Blogger.