தமிழ் பேசும் சமூகம் அபிவிருத்தியிலும், முன்னேற்றமடைய வேண்டிய தேவையுள்ளது - றிசாத்
நிரந்தரத் தீர்வொன்றை எதிர்பார்த்திருக்கும் தமிழ் பேசும் சமூகம் அபிவிருத்தியிலும் முன்னேற்றம் அடைய வேண்டிய தேவை உள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் கூட்டம் வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற போதே அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் வவுனியா மாவட்டத்தில் நடைபெற்ற முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மற்றைய இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன். பாரளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்கவில்லை. முதலமைச்சர் சார்பாக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுல ராஜா கலந்துகொண்டார். சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் செல்வம் அடைக்கலநாதன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியதாவது,
கடந்த அரசாங்க காலத்தில் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டோம். யுத்தத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்ட இந்த மாவட்டம் வடக்கின் வசந்தம் மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டது. புனரமைப்புப் பணிகள் பலவற்றை மேற்கொண்டோம். கல்விப் பிரச்சினை பாடசாலை வளப்பற்றாக்குறை, சுகாதாரக் குறைபாடுகள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் ஆகியவை அவற்றுள் சிலவாகும். நாம் மேற்கொண்ட பணிகளுக்கு அரச அதிகாரிகளும் மக்களும் ஒத்துழைத்தனர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற குரல்கள் சகல தரப்பிலிருந்தும் மேலோங்கி இருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான இந்த அரசு தமிழ்ப் பேசும் மக்களுக்கு விடிவைப் பெற்றுத்தருமென நாம் இன்னும் நம்புகின்றோம். தமிழ்க் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் மலையகக் கட்சிகள் அனைத்துமே புதிய அரசாங்கத்துக்கு தமது பூரண ஆதரவை நல்கி வருகின்றன. அத்துடன் நாம் அரசாங்கத்தின் நல்ல பணிகளுக்கும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றோம். அபிவிருத்திப் பணிகளுக்கும் சகல கட்சிகளும் ஒத்தாசை வழங்குகின்றன. வரவு, செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தமிழ் பேசும் கட்சிகள் அனைத்துமே ஒட்டுமொத்தமாக இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்து தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தன. இந்த நல்லுறவு நீடிப்பதன் மூலமே நமது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென அமைச்சர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்தி, வீதிப் பிரச்சினை, மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம், வாழ்வாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டன. சில பிரச்சினைகளுக்கு அந்தக் கூட்டத்திலேயே தீர்வும் காணப்பட்டது.
Post a Comment