Header Ads



மாடுகளால் வாக்களிக்க முடியாதென்ற உண்மையை, ஜனாதிபதி புரிந்துகொள்வாரா..?

-முஹம்மது நியாஸ்-

நமது நாட்டில் கடந்த சில மாதங்களாக அடக்கி வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்த மாட்டிறைச்சி சர்ச்சையானது தற்போது மீளவும் தலை தூக்க ஆரம்பித்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. மாடுகளை அறுப்பது தடை செய்யப்படவேண்டும் என்றும் மாட்டிறைச்சிக்கடைகள் மூடப்பட வேண்டும் எனவும் பலவாறான கோஷங்கள் ஆங்காங்கே ஒலித்துவருவதை நாம் காண்கிறோம்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இதற்காக பௌத்த சமய துறவி ஒருவர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் வைத்து தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்துகொண்ட வரலாறுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

இந்த விவகாரத்தை பொறுத்தவரைக்கும் இஸ்லாமிய எதிர்ப்புக்கொள்கை கொண்ட இனவாத குழுக்களே முன்னின்று மக்களை தூண்டிவிட்டு இதில் குளிர்காய முற்பட்டபோதிலும் அவ்வினவாதக்குழுக்களுக்கு முட்டுக்கொடுக்கும் விதமாக ஆளும் அரசாங்கமும் கூட அவ்வப்போது சில வெகுளித்தனமான அறிக்கைகளை வெளியிட்டு எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றமுனைகின்ற கோமாளித்தனத்தையும் நாம் காண்கிறோம்.

மாடு எனும் பிராணியானது குறித்த ஒரு சமயத்திற்கு புனிதமானதொரு உயிரினமாக கருதப்பட்டால் அந்த புனிதத்துவமானது குறித்த  அந்த சமயத்தோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவேண்டும். அந்த புனிதத்துவ(?)க்கோட்பாட்டை ஏனைய சமயங்களின் மீது திணிக்க முற்படுவது தேசிய ஜனானயகத்தை கேள்விக்குறியாக மாற்றும் என்பதை ஏனோ தெரியவில்லை இந்த அரசாங்கங்கள் புரிந்துகொள்ள மறுக்கின்றன.

உதாரணமாக ரமழான் மாதமென்பது முஸ்லிம்களுடைய புனிதமான காலப்பகுதி. அந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் கட்டாயமாக நோன்பு நோற்பார்கள். சில தனிப்பட்ட காரணங்களுக்காக நோன்பு நோற்காத முஸ்லிம்கள் எந்தவொரு உணவுப்பொருளையும் பகிரங்கமாக உட்கொள்ளக்கூடாது என்பது அந்த ரமழான் மாதத்தை கண்ணியப்படுத்தக்கூடிய ஒரு வழிமுறையாகும். அதற்காக நாட்டிலுள்ள ஏனைய சமயத்தவர்களையும் ரமழான் மாதத்தில் அவ்வாறு வெளிப்படையாக உணவு உட்கொள்ளக்கூடாது, நீரருந்தக்கூடாது என்று கட்டாயப்படுத்த முடியுமா? அவ்வாறு கட்டாயப்படுத்துவது ஏனைய சமயங்களை கண்ணியப்படுத்துவதாக அமையுமா? ஒருபோதும் இல்லை. மாறாக இஸ்லாமிய சமூகத்தினுடைய ஒரு புனிதத்துவத்தை ஏனைய சமூகத்தவர்கள் மீது கட்டாயப்படுத்தி திணிப்பதாகவே அமையும்.

அதுபோன்றுதான் மாடு என்பது ஒரு சமயத்தவர்களுடைய புனிதம் வாய்ந்த விலங்காகக்கருதப்பட்டால் அது அவர்களோடு மாத்திரம் நிறுத்திக்கொள்ளப்படவேண்டிய சமய சித்தாந்தமாகும். அதை இஸ்லாமியர்கள் என்னும் இன்னொரு சமூகத்தின் மீதும் திணிக்கமுற்படுவது அப்பட்டமானதொரு மத ரீதியான அடக்குமுறையே அன்றி வேறில்லை.

ஒரு வாதத்திற்கு இனவாதிகளுக்கு முதுகு சொறியும் விதமாக அரசாங்கம் அறிக்கை விடுவது போன்று இந்நாட்டில் மாடுகள் அறுக்கப்படுவதை தடை செய்து வெளிநாட்டில் இருந்து இறைச்சியை இறக்குமதி செய்வதாக இருந்தால் அந்த நடவடிக்கையின் பின்னரான எதிரொலிகளுக்கு முகம் கொடுக்க இந்த அரசாங்கம் தயாராக இருக்கிறதா?

மாடுகளை அறுப்பதை தடைசெய்வது எந்தவொரு நாட்டிலும் சாத்தியமற்ற அதேநேரம் பல்வேறு வகையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு முட்டாள்த்தனமான செயற்பாடென்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.

மாமிச உணவு மனித இனத்தின் இயல்பு.

பொதுவாக மனிதர்களால் உணவுக்காக உட்கொள்ளப்படுகின்ற ஆடு, மாடு, கோழி போன்ற எந்தவொரு பிராணியை எடுத்துக்கொண்டாலும் அவை ஒருகாலும் குறைந்துபோவதில்லை, அருகிப்போவதில்லை. மனிதர்கள் நாள்தோறும் உணவுக்காக கொல்கிறார்கள் என்பதற்காக அப்பிராணிகள் எதுவுமே இவ்வுலகில் இருந்தும் வழக்கொழிந்து போய்விடவில்லை. மாறாக மனிதனுடைய தேவைக்கேற்பவும் தேவைகளுக்கு மீதமாகவும் பல்கிப்பெருகுவதையே நாம் காண்கிறோம்.

அதேநேரம் எந்தவொரு சமய மக்களாலும் எந்தவொரு நாட்டிலும் ஒருபோதும் கொல்லப்படாத, உட்கொள்ளப்படாத விலங்கினங்களான சிங்கம், புலி போன்ற கொடிய விலங்கினங்கள் இவ்வாறு பல்கிப்பெருகுவதில்லை. மாறாக அவையனைத்துமே உலகாளவிய ரீதியில் அனைத்து நாடுகளிலும் காடுகளிலும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயேதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் அவற்றில் சில மிருக இனங்களை அருகிவரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்த்து சில நாடுகளில் மிகவும் பத்திர சிரத்தையோடு பாதுக்காக்கப்பட்டு வருவதையும் நாம் காண்கிறோம்.

அந்த வகையில் பார்க்கின்றபோது ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் அனைத்துமே மனிதனுடைய உணவுத்தேவையை மாத்திரம் பிரதான நோக்காகக்கொண்டு இறைவனால் படைக்கப்பட்டிருப்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

மாத்திரமன்றி
சிங்கம், புலி போன்ற பிராணிகளை நாம் எடுத்துக்கொண்டால் அவை ஒருபோதும் தாவர உணவுகளை உண்ணமாட்டாது. மாறாக மாமிசங்களை மாத்திரமே உண்டு உயிர்வாழக்கூடிய உயிரினங்களாக அவை காணப்படுகின்றன. அதேபோன்றுதான் ஆடு, மாடுகளும் மாமிச உணவுகளை உட்கொள்வதில்லை. மாறாக தாவர உணவுகளை மாத்திரமே அவை தம்முடைய உணவாக உட்கொள்ளுகின்றன.

ஆனால் மனிதன் மாத்திரமே தாவர உணவுகளையும் மாமிச உணவுகளையும் உட்கொண்டு வாழ்கிறான். மனித உடலின் உட்கட்டமைப்பானது இரண்டு வகையான உணவுகளையும் சரிசமமாக ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே இறைவனால் அமைக்கப்பட்டுள்ளது. காரணம் மனிதனுடைய அன்றாட தொழிற்பாடுகளுக்கு கீரை, மரக்கறி, கடலை, தானியங்கள் போன்ற தாவர உணவுகள் அவசியப்படுகின்ற அதேயளவுக்கு இறைச்சி, மீன், முட்டை போன்ற ஊன் உணவுகளும் அத்தியாவசியமானவையாகவே இருக்கின்றன.

ஆகவே மனிதன் இறைச்சியோ அல்லது ஏனைய மாமிச உணவுகளோ உட்கொள்ளக்கூடாது என்று வாதிடுவது மனிதப்படைப்பின் இயற்கைத்தன்மைக்கே முரண்பட்டதொரு முட்டாள்த்தனமான வாதமாகும்.

விதிவிலக்காக ஒருசிலர் நாங்கள் தாவர உணவுகளை மாத்திரமே உட்கொள்வோம் என்று அதை ஒரு கொள்கையாக கடைப்பிடித்தால் அது அவர்களுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். அதில் ஏனையோர்கள் தலையிடுவதற்கு எந்தவொரு அதிகாரமும் யாருக்கும் இல்லை. அதேபோன்றுதான் ஏனையோர்கள் மாமிச உணவை உட்கொள்ள நாடினால் அதை குறைகாண்கின்ற உரிமையும் யாருக்கும் கிடையாது.

காரணம் ஒருவருடைய உணவுத்தட்டில் எத்தகையதொரு உணவு இருக்கவேண்டும் என்பதை அவரவர்களுடைய ரசனை, பொருளாதாரம், சமய சித்தாந்தங்கள் என்பவைகள்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர அருகிலிருக்கின்ற நபர்களுடைய ரசனைகள், நம்பிக்கைகள் தீர்மானிக்கக்கூடாது.

அதேபோன்று உயிர்வதை என்னும்போது அது மாட்டை மாத்திரம் இலக்கு வைக்கவேண்டியதன் அவசியம் என்ன?
இந்நாட்டில் உணவுக்காக மாடுகள் மட்டும் கொல்லப்படுவதில்லை. ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான ஆடுகள் கொல்லப்படுகின்றன. பல இலட்சக்கணக்கான கோழிகள் அறுக்கப்படுகின்றன. கோடிக்கணக்கான மீன்கள் இந்நாட்டு மக்களால் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. அவ்வாறிருக்கும்போது மாடுகளை மாத்திரம் இலக்கு வைத்து உயிர்வதைக்கோஷம் எழுப்பவேண்டியதன் அவசியப்பாடுதான் என்ன?

இனவாதமே இலக்கு.

மாடறுப்பதை தடைசெய்யும் கோஷமும் கோரிக்கையும் சாதாரண பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக அது சிங்களப்பேரினவாத இயக்கங்களால்தான் இந்நாட்டில் காலாதிகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஜனாதிபதி தற்போது விடுத்துள்ள அறிக்கை கூட அந்த இனவாதிகளை திருப்திப்படுத்தக்கூடிய வகையில்தான் அமைந்துள்ளது.

ஒரு நாட்டின் ஜனாதிபதி இந்நாட்டில் தேசிய பிரச்சினையாக மாறிப்போயுள்ள ஒரு விவகாரத்தில் தீர்மானத்தை அறிவிக்கும்போது அதில் இந்நாட்டு மக்களை அனைவரது இலாப, நஷ்டங்களையும், விருப்பு, வெறுப்புக்களையும் கருத்தில் கொண்டே முடிவெடுக்கவேண்டும். மாறாக இனங்களுக்கிடையிலான் நல்லுறவை சீரழித்து மீண்டும் ஒரு மூன்றாம் கட்ட யுத்தத்தை வேண்டி நிற்கின்ற பேரினவாதக்காடையர்களுடைய திருப்திகளை மாத்திரம் இலக்காகக்கொண்டு செயற்படுவது கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

கடந்த ஆட்சியில் வீற்றிருந்த தலைவர்கள் கூட இவ்வாறு இனவாதிகளுக்கு முதுகுசொறிந்த காரணத்தினால்தான் தற்போது தடம்தெரியாதவகையில் தொலைந்துபோனார்கள்.

மாத்திரமன்றி கடந்த பாராளுமன்றத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு நாடாளாவிய ரீதியில் பெரும்பான்மையின மக்களாலேயே சிறுபான்மையாக தோற்கடிக்கபட்டவர்கள் இந்த இனவாதகட்சிகள். அவ்வாறிருக்கின்றபோது இந்நாட்டில் மாடுகளை வைத்து பண்ணைத்தொழில் செய்து நடாத்துகின்ற பல இலட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன, மாடறுப்பதை வாழ்வாதாரமாகக்கொண்டு வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான இறைச்சி வியாபாரிகள் இந்நாட்டில் வாழ்கிறார்கள்.

அவ்வாறானவர்களுடைய ஜீவனோபாயத்தைபற்றிய சிந்தனையென்பது சிறிதளவும் இல்லாமல் இந்நாட்டையே கெடுத்து குட்டிச்சுவராக்க எத்தனிக்கின்ற இனவாதிகள் என்றும் தேச விரோதிகளின் தலைகளை வருடிக்கொடுத்து பொதுமக்களின் வயிற்றிலடிப்பது ஒரு நீதமான அரச நிருவாகத்திற்கு ஏற்புடைய ஒன்றல்ல.

மேலும் இந்நாட்டில் பண்ணைத்தொழிலாளர்களாக தங்களுடைய வாழ்வாதாரத்தை பேணிவருகின்ற பல இலட்சக்கணக்கான மக்களுடைய எதிர்காலம் இங்கே மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படவேண்டும். மாத்திரமன்றி மாடறுப்பதை தொழிலாக மேற்கொண்டு வருகின்ற பொதுமக்களையும் பல்லாயிரக்கணக்கான இறைச்சி விற்பனையாளர்களுடைய ஜீவனோபாயமும் இங்கே கவனத்தில் கொள்ளப்படவேண்டிய மிகமுக்கியமான பிரச்சினைகளாக இருக்கின்றன.

எனவே மாடறுப்பதை தடைசெய்யும் விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் எடுத்துள்ள இந்த ஏறுக்கு மாறான தீர்மானத்தை வாபஸ் பெறவேண்டும். இனவாதிகள் மாடறுப்பதை தடை செய்யும்படி கோரிக்கை விடுப்பதும் கோஷங்களை எழுப்புவதும் எத்தகைய பின்னணியை கொண்டதொரு ஈனச்செயல் என்பதனை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கண்டறிந்துகொள்ள  வேண்டும்.

மனித உடலுக்கும் வாழ்க்கைக்கும் ஊறு விளைவிக்கக்கூடிய சிகரட், மதுபானம் போன்ற நச்சுப்பொருட்கள் இந்நாட்டில் அரச அங்கீகாரத்துடன் விற்பனையாகின்றன, பொதுமக்களால் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்கள் மீது கொண்ட அக்கறையில்தான் மாடுகள் அறுக்கப்படுவதை தடைசெய்வதாக இருந்தால் உயிர்களிலேயே முதல்நிலைப்படுத்தப்படவேண்டிய உயிர் மனித உயிர்தான். அந்த மனித உயிர்களை அநியாயமாகக்காவு கொள்கின்ற சாராயத்தையும் சிகரட்டையும் முதலில் தடைசெய்யவேண்டும். அதன்பிறகுதான் மாடுகளுடைய உயிரைப்பற்றி கரிசனை(?) கொள்ளவேண்டும்.

மாடுகளிடம் மாத்திரம் தங்களுடைய ஜீவா காருண்யத்தை காண்பிப்பதை விடுத்து மனிதர்களிடமே அந்த ஜீவகாருண்யத்தை முதன்மைப்படுத்த வேண்டும். காரணம் ஒரு அரசாங்கத்தை தீர்மானிப்பது நாட்டிலுள்ள மனிதர்களே தவிர மாடுகள் அல்ல. ஏனெனில் மாடுகளால் இறைச்சியையும் பாலையும் மாத்திரமே வழங்கமுடியும். தேர்தலில் வாக்களிக்க முடியாதென்ற உண்மையை ஜனாதிபதியவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

5 comments:

  1. Yes you are 100% correct.....
    Also they will bring the meet from abroad for the animals eating meats from all the jungles....My3 will hunt the Jungle animals and BBS will feed them by the abroad meats...

    ReplyDelete
  2. மைத்திரியின் குரலும் ஞானர்களின் குரலாகி விட்டதே! அந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றி இதுதானோ?

    ReplyDelete
  3. இவ்வாறுதான் DB விஜேயதுங்க ஜனாதிபதியாக இருக்கும்போது வாய்க்கும் தலைக்கும் சம்மந்தம் இல்லாமல் இந்த நாட்டில் வாழும் சிறு பான்மை இனத்தவர்கள் பெரிய மரத்தை சுத்தி இருக்கும் கொடிளைப்போன்றவர்கள் என்று துவேசத்தை கக்கி சந்திரிக்காவிடம் படுதோல்வி அடைந்தார் என்பது வரலாறு

    ReplyDelete
  4. Maithri has no creative thinking to drive this country in the right direction. This good-governance gradually becomes an unwanted element to the public.

    ReplyDelete

Powered by Blogger.