ஒலுவில் துறைமுகத்தை புனரமைத்துத் தருமாறு டென்மார்க்கிடம் றிசாத் கோரிக்கை.
ஒலுவில் துறைமுகத்தை உயிரோட்டமுள்ள துறைமுகமாக மாற்றுவதற்கு டென்மார்க் அரசாங்கம் உதவ வேண்டும். துறைமுக கப்பற் கூட்டுத்தாபன அமைச்சராக காலஞ்சென்ற அஷ்ரப் பணியாற்றிய போது அவர்களின் எண்ணத்தினாலும், முயற்சியினாலும் டென்மார்க்கின் உதவியுடன் இந்தத் துறைமுகம் உருவாக்கப்பட்டது என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
புதுடில்லியைத் தளமாகக் கொண்டு செயற்படும் இலங்கை – இந்தியாவுக்கான உத்தியோகபூர்வத் தூதுவர் பீற்றர் ரெக்சோ ஜென்சென் அவர்களை கைத்தொழில், வர்த்தக அமைச்சில் சந்தித்துப் பேச்சு நடத்தியபோது அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
முன்னாள் அமைச்சர் அஷ்ரபின் கருத்திட்டத்தில் உருவான ஒலுவில் துறைமுகம், அன்னாரின் மறைவு, ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் போன்ற காரணங்களால் சிறப்பாக இயங்க முடியாமல் போய்விட்டது.
அத்துடன் நிர்மாணப் பணிகள் தடைப்பட்டதனால் அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். கடலரிப்பு, மண்ணரிப்பு மற்றும் வெள்ளப் பெருக்கினால் கிராமத்துக்குள் நீர் உட்சென்று மக்கள் துன்பப்படுகின்றனர். எனவே, டென்மார்க் அரசு ஒலுவில் துறைமுகத்தை மீண்டும் புனரமைத்து அதனை சிறந்த துறைமுகமாக இயங்கவைக்க உதவ வேண்டும் என்றார்.
இலங்கையில் இப்போது நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. டென்மார்க் முதலீட்டாளர்கள் எமது நாட்டில் தாராளமாக முதலீடு செய்ய முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
டென்மார்க்கும், இலங்கையும் பரஸ்பர நட்பு நாடுகள் ஆகும். அத்துடன் வர்த்தகத்துறையில் பல்வேறு பண்டப் பரிமாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன.
இறப்பர், தேயிலை, வாசனைத்திரவியங்கள், தும்புப் பொருட்கள், விலங்குணவு, மட்பாண்டப் பொருட்கள், மரக்கறி, பழவகைகள் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர் டென்மார்க்கிலிருந்தும் பால் உற்பத்திப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை நாம் இறக்குமதி செய்கின்றோம்.
இத்துடன் மீன்பிடி, கைத்தொழில் துறைகளில் நவீன முறைகளைப் புகுத்துவதற்கு டென்மார்க் உதவ வேண்டுமென அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். இச் சந்திப்பின்போது இலங்கையின் முதல்தர வர்த்தகர் ஹரி ஜயவர்தன மற்றும் முன்னாள் ராஜதந்திரி சிக்கந்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment