இஸ்ரேலுக்கு நன்கொடை வழங்குவதற்கு, எதிராக அமெரிக்காவில் வழக்கு
இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் இஸ்ரேல் இராணுவத்திற்கு இலாப நோக்கற்ற குழுக்களால் வரிவிலக்கு நன்கொடைகள் வழங்கப்படுவதை நிறுத்தக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கருவூல திணைக்களத்திற்கு எதிராக கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி அமெரிக்க பிரஜைகள் சிலரால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் சுமார் 150 இலாப நோக்கற்ற குழுக்களால் 280 பில்லியன் டொலர்களுக்கு அதிகமான நன்கொடைகள் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டிருப்பதாக அந்த வழக்குத் தாக்கலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இஸ்ரேலுக்கு நன்கொடை வழங்கும் அமைப்புகளுக்கு வரி விலக்கு அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு நன்கொடை அளிக்கும் தரப்புகளில் அமெரிக்காவின் கசினோ வர்த்தகத்தின் பெரும் புள்ளியான ஷெல்டன் அடல்சன் உட்பட பல்வேறு இஸ்ரேல் ஆதரவு வர்த்தகர்களின் பெயர்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு வழக்கு தொடுத்திருப்பவர்களில் ஒருவரான சுசான் அபுல்ஹவா, பலஸ்தீன மக்களுக்கு நீதி தேடிக்கொடுக்கவே வழக்குத் தொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கிற்கு பதிலளிக்க கருவூல திணைக்களத்திற்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment