குவியும் குப்பைகள் - அரசாங்கம் பெரும் பிரச்சினைகளை, எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை
இலங்கை அரசிடம் முறையான கழிவகற்றல் கொள்கைத் திட்டங்கள் இல்லாத காரணத்தினால் எதிர்காலத்தில் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
தலைநகர் கொழும்பிலும் முக்கிய பெரு நகரங்களிலும் தினசரி சேருகின்ற குப்பைகளை முறையாக மீள்சுழற்சி செய்வதற்கோ அப்புறப்படுத்துவதற்கோ சரியான திட்டங்கள் எதனையும் அரசாங்கம் இன்னும் முன்னெடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் சேருகின்ற குப்பைகள் அதன் சுற்றுப் புறங்களில் உள்ள இடங்களிலேயே கொட்டப்பட்டுவருகின்றன.
இந்தக் குப்பை மேடுகள் பெரும் மலைகள் போல குவிந்து காணப்படுவதாலும் குப்பை கொட்டப்படும் பிரதேசங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகள் வரை தற்போது நீண்டுவருவதாலும் மக்கள் பெரும் சுகாதார கேடுகளை எதிர்நோக்கி வருவதாகவும் இலங்கையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியத்தின் இயக்குநர் எஸ். விஸ்வலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
கொழும்பிலும் அண்டிய பகுதிகளிலிருந்தும் சேரும் குப்பைகளில் தினசரி சுமார் 700 மெட்ரிக் டன் அளவானவை மீதொட்டமுல்ல என்ற இடத்தில் மக்கள் குடியிருப்பை அண்டிய பெரும் பிரதேசம் ஒன்றில் கொட்டப்பட்டுவருகின்றன.
மலைபோல் குவிந்துள்ள இந்தக் குப்பைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கோரி அப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
ஆனால், இந்தக் குப்பைகளை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் மாற்றுத் திட்டங்களை கொண்டுவருவது அவசியம் என்று விஸ்வலிங்கம் தெரிவித்தார்.
குப்பைகளை மீள்சுழற்சி செய்யக்கூடிய முறைகளையும் பொலித்தீன் பாவனைக்கு மாற்றாக வேறு பொருட்களை பயன்படுத்துவதற்கான வழிகளையும் அரசாங்கம் நீண்டகால திட்டங்களின் அடிப்படையில் கொண்டுவர வேண்டும் என்று விஸ்வலிங்கம் கூறினார்.
Post a Comment