Header Ads



ஞானசாரர் குறித்து நீதிமன்றத்தில் முறையிட்ட, அரச சட்டத்தரணி பதவி நீக்கம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கை நடத்திய வந்த அரச சட்டவாளர் திலீப் பீரிஸ் இன்று (26) காலை திடீரென அந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பதில் சட்டமா அதிபர் சுகத கம்லத் இதுபற்றி இன்று காலை அறிவித்துள்ளார்.

நேற்று இந்த வழக்கு ஹோமகம நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்துக்கு வந்திருந்த பொதுபல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர் நடந்து கொண்ட முறை குறித்து, அரசசட்டவாளர் திலீப் பீரிசும், சட்டவாளர் உபுல் குமார பெருமவும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தனர்.

இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் ஞானசார தேரரை கைது செய்ய நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த பின்னணியிலேயே, அரச சட்டவாளர் திலீப் பீரிஸ் இன்று காலை எக்னெலிகொட வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்குத் தொடர்பாக அரச சட்டவாளர் திலீப் பீரிசுக்கும், சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையில், கடந்த சில வாரங்களாகவே பனிப்போர் நீடித்து வந்தது.

விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை சிறிலங்கா இராணுவம் தரவில்லை என்று அரசசட்டவாளர் திலீப் பீரிஸ் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தார். இதனால் சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு நெருக்கடிகள் ஏற்பட்டன.

இந்தநிலையில், அரசசட்டவாளர் திலீப் பீரிசை இந்த வழக்கில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா இராணுவ சட்டப்பிரிவு அதிகாரியான கேணல் ஒருவர், முன்னாள் சட்டமா அதிபரிடம் நேரடியாக கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரகீத் எக்னெலிகொட வழக்கில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசசட்டவாளர் இந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயமாக நோக்கப்படுகிறது.

4 comments:

  1. Mr.Sugath Gamlath is a dangerous man. He will do that type of work

    ReplyDelete
  2. அப்போ திலீப் எக்நலியை கூடிய சீக்கிரம் சந்தித்து விடுவாரோ?

    ReplyDelete
  3. இதிலிருந்து விளங்க வேண்டும். பொதுபல சேனா,அரசாங்கத்தால் போசிக்கப் படுகின்ற ஒரு குண்டர் குழு..

    ReplyDelete
  4. இதிலிருந்து விளங்குகிறது மஹிந்தையை எதிர்த்து மைத்திரிக்கு அரசாங்கம் நடத்த முடியாது.ஏன் மகிந்தவின் ஆள் ஞானசார.

    ReplyDelete

Powered by Blogger.