நியூசிலாந்தில் நடைபெற்ற சிறார்களின் கலை/கலாசார விழா
நியூசிலாந்து நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து நடாத்தும் ஸ்ரீ லங்கா சொசைட்டி ஒஃப் நியுச்சிலாட் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர்களுக்கான கலை/கலாச்சார விழா கடந்த வாரம் ஆக்லாந்து மௌன்ட் ரொஸ்கில் கிராமர் பாடசாலை அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நியூசிலாந்து வாழ் இளம் சிறார்களின் இலைமறைகாயாக மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் முயற்சியாக வருடா வருடம் SLSNZ அமைப்பினால் இந்த விழா ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றது.
சிறுவர்களின் வரவேற்பு "பைத்" ஓதும் நிகழ்ச்சியுடன் ஆரம்பமான நிகழ்வில், குர்-ஆன் மனனம், கிராத், இஸ்லாமிய மற்றும் சமூக பேச்சுக்கள், சிறுவர்கள் பங்கு பற்றிய நாடகங்கள், வினோத உடை போட்டிகள் என பலதரப்பட்ட போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. எல்லா நிகழ்ச்சிகளிலும் சிறார்கள் மிக உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் பங்குபற்றியமை பார்வையாளர்கள் அனைவரையும் மகிழச்செய்தது. நியூசிலாந்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் தமிழில் இஸ்லாமிய கீதங்களை இசைத்தமையும், இலங்கை என்பது நம் தாய் திரு நாடு என்ற பொப்பிசை பாடலை அழகாக பாடியதும், சிறுவர்களின் கராட்டே கண்காட்சி நிகழ்வுகளும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாக இருந்தன.
அமைப்பின் தலைவரான பாரூக் கலந்தர் அவர்களது வரவேற்புரை நிகழ்த்தும் போது இந்த கலை விழாவுக்காக குழந்தைகளை பயிற்றுவிப்பதற்காக பெற்றோர்கள் நேரம் காலம் பாராமல் ஒத்திகைகளில் ஈடுபட்டமையினாலேயே இவ்வாரானதொரு நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த முடிந்தது என தெரிவித்தார். அமைப்பின் செயலாளர் ஜெரீத் ஆப்தீன், உப செயலாளர் ரிஷார்ட் சுஹைர், உப தலைவர்களான முப்லிஷ் இஸ்மாயில், அனஸ் பளீல் கபூர் மற்றும் பொருளாலர் இஷ்ரத் ஆகியோரின் நெறியாள்கையில் நிகழ்ச்சிகள் திறம்பட ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான SLSNZ கடந்த பல வருடங்களுக்கும் மேலாக இலங்கை இஸ்லாமிய பிள்ளைகளின் கலை கலாச்சார விளையாட்டு துறைகளில் பெரும் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ்வமைப்பானது நியூசிலாந்துக்கு கல்விகற்க வரும் இலங்கை மாணவர்களுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்துவருவதும் இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
Post a Comment