Header Ads



மலேசியப் பிரதமரின் வங்கிக் கணக்கில் 681 மிலியன் டாலர்கள் - சவுதி அரசகுடும்பம் வழங்கியதாம்

மலேசியப் பிரதமர் நஜிப் ரஜாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்த பல கோடி டாலர் பணம் அவருக்கு சௌதி அரச குடும்பத்தினரால் வழங்கப்பட்ட பரிசு என்று மலேசிய அரச தலைமை வழக்கறிஞர் கூறி அவரை சர்ச்சையிலிருந்து விடுவித்திருக்கிறார்.

மலேசியப் பிரதமரின் வங்கிக் கணக்கிற்கு 2013ம் ஆண்டில், சுமார் 681 மிலியன் டாலர்கள் மாற்றப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து பல மாதங்கள் அரசியல் சர்ச்சை மலேசியாவில் நிலவி வந்தது. இந்த விஷயத்தில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நஜிப் ரஜாக் மறுத்தே வந்திருக்கிறார். ஆனாலும் அவர் பதவி விலகவேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டு வந்தது.

ஆனால், இது குறித்து ஆராய்ந்த மலேசிய அரச தலைமை வழக்கறிஞர், மொஹமத் அபண்டி அலி, இந்த விஷயத்தில் தவறு ஏதும் நடக்கவில்லை என்று தான் முடிவு செய்துள்ளதாகவும், லஞ்சம் ஏதும் தரப்படவில்லை என்றும் கூறினார்.

இந்த நன்கொடைக்குக் காரணம் ஏதும் தரப்படவில்லை , ஆனால் இந்தப் பணத்தில் பெரும் பகுதி சௌதி அரச குடும்பத்தினருக்கே திரும்பத் தரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தனது கணக்கில் வந்த 681 மிலியன் டாலர்களில் 620 மிலியன் டாலர்களை நஜிப் ரஜாக் திரும்பத் தந்துவிட்டாலும், மீதி 61 மிலியன் டாலர்கள் எங்கே போனது என்ற கேள்வி இன்னும் எழுவதாக பிபிசி செய்தியாளர் கரிஷ்மா வஷ்வானி கூறுகிறார்.

மலேசியப் பிரதமரை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்திருக்கும் இந்த அரச தலைமை வழக்கறிஞர் புதிதாக நியமிக்கப்பட்டவர் என்றும், அவருக்கு முன்பிருந்த அரச தலைமை வழக்கறிஞரை, நஜிப் ரஜாக், இதே சர்ச்சை தொடர்பாக பதவியிலிருந்து அகற்றிவிட்டார் என்றும் சில மலேசிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த சர்ச்சை மலேசியப் பிரதமர் நஜிப் ரஜாக்கின் 7 ஆண்டு அரசியல் தலைமையின் மீது ஒரு கரிய நிழலைப் படியச் செய்திருக்கிறது ஆனாலும், இந்த முடிவு அவரை இந்த சர்ச்சையிலிருந்து விடுவித்திருக்கிறது என்றும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

மலேசியாவில் 2013 மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் நஜிப் ரஜாக்கின் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனல் அவர் பெற்ற வெற்றி சொல்லிக்கொள்ளும் படியான அளவுக்குப் பெரிய வெற்றியாக இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

1 comment:

  1. WHERE MR. ANVER IBRAHIM? HE IS ONLY ELIGIBLE TO MALAYSIA FOR LEADERSHIP

    ReplyDelete

Powered by Blogger.