Header Ads



மன்னார் வைத்தியசாலைக்கு, சவூதி அரேபிய செலவந்தரின் உதவியில் குடிநீர், 5 நேர தொழுகைக்கும் ஏற்பாடு


தண்ணீர் என்பது ஒவ்வொரு பொது மகனுக்கு அத்தியவசமாயனதொன்று. தேவைக்குத் தண்ணீரில்லை எனில் அதன் கஷ்டத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இந்நிலையில் தான் நாட்டிலுள்ள சகல மக்களுக்கு இன, மத, சமய, பிரதேச எல்லை,  மொழி  ஆகிய வேறுபாடுகளுக்காப்பால் தேவையான இடங்களை கண்டறிந்து நீர் விநியோகங்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என்று தைபா சமூக நல மற்றும் மனித வள அபிவிருத்தி அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஜே. எம். ரிஸ்வான் மதனி தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருட நிறைவை முன்னிட்டு சவூதி அரேபிய நாட்டுத் செல்வந்த ஒருவரின் நிதி உதவியின் கீழ் தைபா சமூக நல மற்றும் மனித வள அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு குடி நீர் வழங்கி வைக்கும் நிகழ்வு 08-01-2016 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தைபா சமூக நல மற்றும் மனித வள அபிவிருத்தி அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஜே. எம். ரிஸ்வான் மதனி அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

அல்லாஹ்வுதலாவின் படைப்புக்களில் மிகவு அற்புதமான படைப்புத் தான் தண்ணீர். சுத்தமான நீரை வானில் இருந்து இறக்கி வைத்துள்ளோம் என்பது அல்குர்ஆனின் கூற்றாகும். தண்ணீர் என்பது அல்லாஹ்வின் மிகப் பெரும் அருட் கொடையாகும்.  அது மட்டுமன்றி  படைப்பினங்கள் அனைவருக்கும் சொந்தமான பொதுச் சொத்தாகும்.  மனிதனின் உயிர் வாழ்க்கைக்கு மிக மிக அத்தியவசியமான ஒன்றாகும்.  வைத்தியசாலை என்பது ஒரு பொதுவான இடம் . சிகிச்சைக்காக சகல இன மக்களும் வருகை தருவார்கள். இங்கு அவரவர்களுடைய சமய வழிபாட்டுக்களைப் பேணி நடடிப்பதற்காக கோவில், பள்ளிவாசல் என்பன இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 

இந்த மக்களுடைய தேவையை நலன் கருதியும் வைத்தியசாலைக்கு வருகை தரும் மக்களின் நலன் கருதியும் எம்முடைய நீர் விநியோகத் திட்டத்தின் கீழ் முடிந்தளவு  ஒரு சவுதி அரேபிய செல்வந்தர் ஒருவரின் நிதி உதவியின் கீழ் இந்த வைத்தியசாலைக்கு தண்ணீர் வசதியை பெற்றுக் கொடுப்பதையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன். இதற்குச் சந்தர்ப்பம் அளித்த பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் அதற்குத் துணை நின்ற யாவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிப்பதாக மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மன்னார் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய  கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த வைத்தியசாலையில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கும் மற்றும் வைத்தியசாலைக்கும் தண்ணீர் வசதியைப் பெற்றுத் தந்தமைக்கு நான் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த வைத்தியசாலைக்கு வரும் முஸ்லிம் மக்களுக்கு இங்குள்ள பள்ளிவாசல் ஐந்து நேரத் தொழுகையுடன் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையும் தாராளமாகத் தொழ முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வைத்திய சாலையின் நிர்வாக உத்தியோகஸ்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


No comments

Powered by Blogger.