Header Ads



தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின், வெட்டுப் புள்ளிகளை 1 புள்ளியால் குறைக்க தீர்மானம்

கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய பிரதான பாடசாலைகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த வெட்டுப் புள்ளிகளை ஒரு புள்ளியால் குறைப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானம் காரணமாக புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அதிகளவான மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் சேர்வதற்கற்கான வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய கொழும்பு றோயல் கல்லூரிக்கு அனுமதிக்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை 180 இல் இருந்து 220 ஆக அதிகரிக்க முடியும் என கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

றோயல் கல்லூரியில் தரம் 7 இல் இருந்து மேலதிக வகுப்பொன்று சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்த மேலதிக வகுப்பை தரம் 6 இல் இருந்து ஆரம்பித்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மேலும் 40 மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் இந்த தீர்மானத்தினால் பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் ஒரு புள்ளியால் குறைக்கப்பட்டு மாணவர்கள் அந்தப் பாடசாலைகளில் சேர்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

அரசியல் அழுத்தங்கள் மற்றும் தவறான வழியில் மாணவர்கள் கடந்த காலங்களில் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்டதாக கல்வி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது தெரிவந்துள்ளது.

இந்த நிலைமையை மாற்றி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீ்ட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அதிக சந்தர்ப்பத்தை வழங்குமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.