குட்டித் தேனீயால் 4 மணி நேரம், அவதிப்பட்ட விமானப் பயணிகள்
தம்மாத்தூண்டு எறும்பு யானை காதுல பூந்து அம்மாம்பெரிய யானைக்கே ஆட்டம் காட்டும் தெரியுமா? என்று வரும் ஒரு பஞ்ச்(!!) டயலாக்கைப் போல், ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விநோத சம்பவம் பயணிகளிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலிருந்து கருடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், நேற்று காலை 156 பயணிகளுடன் இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவுக்கு செல்ல தயாராக இருந்தது.
விமானத்தை டேக் ஆப் செய்ய முயற்சிக்கும் போது, விமானத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதை உணர்ந்த பைலட் விமானத்தை டேக் ஆப் செய்வதை உடனடியாக கை விட்டார். தொழில்நுட்ப அதிகாரிகள் சோதனை செய்தபோது விமானத்தின் முக்கிய பகுதியான பிடாட் குழாயில் (காற்றின் வேகத்தை கணிக்க உதவும் பகுதி) குட்டித்தேனீ ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது உயிரோடு இருந்ததா அல்லது இறந்து விட்டதா என்ற தகவலை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
ஆனால் அந்த குட்டித் தேனியால் விமானத்தை கட்டுப்படுத்தும் பல முக்கிய சாதனங்கள் வேலை செய்யாததால் விமானி உட்பட 156 பயணிகளும் சுமார் 4 மணி நேரம் காத்திருந்தனர். குட்டித்தேனீ அகற்றப்பட்டு கோளாறு சரி செய்யப்பட்டதும் விமானம் மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "நாங்கள் பயணிகளின் பாதுகாப்பிற்கே முதன்மையான முக்கியத்துவம் அளிப்போம். அதனால்தான் இந்த தாமதம்" என்று தெரிவித்துள்ளார்.
இதே போல், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்டனிலிருந்து டப்ளின் நகருக்கு சென்று கொண்டிருந்த பிளைபி (Flybe) ஏர்லைன்சின் BE384 பயணிகள் விமானம், பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் விமானத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதை உணர்ந்த பைலட் விமானத்தை மீண்டும் விமான நிலையத்திற்கே திருப்பினார்.
விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்தபோது அதன் வால் பகுதியில் குட்டியாக ஒரு கருப்புத்தேனீ இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தின் வால் பகுதியில் உள்ள இறக்கையில் சிக்கிய அந்தத் தேனீதான் தொழில்நுட்பக் கோளாறுக்கு காரணமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது. அப்போது பயணி ஒருவர், தேனீ(bee) மோதியதால் flybe விமானம் flybee விமானமாகிவிட்டது என்று டைமிங் ஜோக் அடிக்க, பயணிகள் சிரித்தபடி பயணத்தை தொடர்ந்த சம்பவமும் அரங்கேறியது.
Post a Comment