40 பில்லியன் ரூபா செலவில், 15 ஆண்டு ”மெகா பொலிஸ்” வேலைத்திட்டம் ஆரம்பம்
கொழும்பு நகரை அடிப்படையாகக்கொண்டு ஒட்டுமொத்த மேல் மாகாணத்தையும் பெரு நகரமாக அபிவிருத்தி செய்யும் மேல் மாகாண பெருநகர அபிவிருத்தித்திட்டம் எனும் ”மெகா பொலிஸ்” வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (29) முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கி மேல் மாகாணத்தை ஒரே நகரமாக சரியான ஒரு திட்டத்தின்கீழ் அபிவிருத்தி செய்தல் மேல் மாகாண பெருநகர அபிவிருத்தித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
15 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படும் இவ் அபிவிருத்தித்திட்டம் மூன்று கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்பார்க்கப்படும் செலவினம் 40 பில்லியன் ரூபாவாகும்.
பொருளாதார சுபீட்சம், சமூக சமத்துவம், சூழல் பாதுகாப்பு மற்றும் ஆன்மீக ரீதியிலான மனிதனை உருவாக்குதல் ஆகிய நான்கு பிரதான நோக்கங்களின் கீழ் இக்கருத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நோக்கங்களின் அடிப்படையில் 10 பிரதான தொனிப்பொருளில் மொத்தம் 150 கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மேல் மாகாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் இப் பெருநகர அபிவிருத்தித்திட்டமானது எதிர்காலத்தில் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில் உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களது அறிவினை பயன்படுத்தி மக்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகள் ஆகியன கருத்திற் கொள்ளப்பட்டு இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ் வைபவத்தின்போது உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், மகிழ்ச்சியாக வாழும், ஒழுக்கம் நிறைந்த பிரஜைகளை எதிர்கால இலங்கையில் காண்பதே இவ்வனைத்து அபிவிருத்தி திட்டங்களதும் எதிர்கால எதிர்பார்ப்பாகுமெனக் குறிப்பிட்டார்.
மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி அவர்களது வாழ்வினை சுபீட்சமடையச் செய்யும் அதேவேளை, அவர்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய ஒரு சூழலை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
பெருநகர அபிவிருத்தித்திட்டத்தினை ஆரம்பித்து வைப்பதையொட்டி நாக மரக்கன்று ஜனாதிபதி அவர்களினால் நடப்பட்டது.
சர்வமத கிரியைகளுக்கு மத்தியில் வைபவம் ஆரம்பிக்கப்பட்டதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டு வெளிநாட்டு தூதுவர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2016.01.29
Post a Comment