Header Ads



மனிதனை அடிமைப்படுத்தும் 3 உணவுகள்

ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் நாம், உணவு போதை பற்றி அதிகம் அறிந்திருப்பதில்லை. காரணம்... நாம்  உணவை போதையாகப் பார்ப்பதில்லையே! 

பீட்சா போன்ற அதிகம் பதப்படுத்திய உணவுகளை அடிக்கடி உண்பதால், சாப்பிடுவதில் கோளாறுகள் (Eating disorders) ஏற்படுவதோடு, அவற்றுக்கு அடிமையாகவும் (Addiction) வாய்ப்பு உள்ளதாக ஓர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.மிச்சிகன் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பருமன் ஆராய்ச்சி மையம் மனிதனை அடிமைப்படுத்தும் உணவுகளை கண்டறியும் சோதனையை மேற்கொண்டது. 

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 120 மாணவர்கள் மற்றும் 400 இளைஞர்களிடத்தில் 35 வகை உணவுகளைக் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக் குழுவின் தலைவரும், மனநல நிபுணருமான ஆஷ்லே கெய்ஹார்ட் ‘ஃபுட் அடிக்‌ஷன் அளவுமானி’ மூலம் இவர்களிடம் சோதனை செய்ததில், போதை உணவுகளின் வரிசையில் சாக்லெட் முதல் இடம் பிடித்தது. அடுத்த இரண்டு இடங்களை ஐஸ்க்ரீமும் பீட்சாவும் பிடித்தன. 

இந்தப் பட்டியலில் பிரெஞ்ச் ஃப்ரை, குக்கீஸ், சிப்ஸ், சிக்கன் ஃப்ரை என எண்ணெயில் பொரித்த மற்றும் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளே அதிக இடம் பிடித்தன. இவை அனைத்தும் நடத்தைக் கோளாறுகளுக்கு காரணமானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எப்படி?

மனிதனின் மகிழ்ச்சி மற்றும் புத்துணர்ச்சி போன்ற உணர்வுகளுக்கு காரணமான ஹார்மோன்களை சுரக்கச் செய்வதில் உணவின் பங்கு அதிகம். குறிப்பாக டோபமைன் (Dopamine) மற்றும் அட்ரினலைன் (Adrenaline) ஹார்மோன்கள் சுரப்புக்கு உணவு காரணமாகிறது. உதாரணமாக சாக்லெட், ஐஸ்க்ரீம், மைதா உணவுகளான பீட்சா, பர்கர் மற்றும் சோளமாவு, உருளைக்கிழங்கு, மது போன்றவற்றை உட்கொள்ளும் போது மகிழ்ச்சி உணர்வை ஏற்படுத்தும் டோபமைன் ஹார்மோன் சுரக்கிறது. சிலர் காபி, டீ குடிக்கும்போதும் சிகரெட் பிடிக்கும்போதும் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு கிடைப்பது போல உணர்வார்கள். கஃபைன், புகையிலைப் பொருட்கள் ஆகியவையும் சுறுசுறுப்பு தரும் அட்ரினைல் ஹார்மோன் சுரப்புக்குக் காரணமாகின்றன.

‘‘ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கும் கட்டாயத்தில் இருக்கும் போதோ, அந்த வேலை சலிப்பூட்டும் போதோ,  மகிழ்ச்சி யையும் சுறுசுறுப்பையும் தரும் உணவுகளை உண்ண ஆரம்பிக்கும் நீங்கள், நாளடைவில் உங்களை அறியாமலேயே அந்த உணவுகளுக்கு அடிமையாகி விடுகிறீர்கள். சில வருடங்கள் இந்தப் பழக்கத்தை தொடரும்போது மூளையின் நரம்பு மண்டலத்தை தாக்கி உங்கள் செயல்களை முடக்கிவிடுகிறது. கட்டுப்பாட்டை இழக்கும் மூளை சுயநினைவை இழக்கிறது. பதற்றம், விரக்தி போன்ற விபரீத செயல்பாடுகளுக்கும் தூண்டப்படுகிறீர்கள்’’ என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்!

1 comment:

  1. *ALWAYS LOOK INGREDIENTS... HERE COMES HALAL ISSUE.....DON'T EAT HARAM DUA WILL NOT BE ACCEPTED*

    ReplyDelete

Powered by Blogger.