Header Ads



இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 14 நாடுகளில் ஒரே சமயத்தில் ஆர்ப்பாட்டம்

ஐரோப்பாவில் இஸ்லாமிய குடியேற்றம் நடைபெறுவதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிப்ரவரி 6-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த "பெகிடா' அமைப்பு திட்டமிட்டுள்ளது.

 14 நாடுகளில் ஒரே சமயத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

 மேற்கத்திய நாடுகளை இஸ்லாமிய மயமாக்குதலுக்கு எதிரான ஐரோப்பிய பற்றுள்ளவர்கள் அமைப்பான "பெகிடா' ஜெர்மனியில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு வெளிநாட்டவருக்கு எதிரான எதிர்ப்பு இயக்கம் ஆகும். 

 தற்போது, ஐரோப்பாவில் இஸ்லாமிய குடியேற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, வரும் பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. 

 செக் குடியரசு, எஸ்டோனியா, பின்லாந்து, ஜெர்மனி, போலந்து, ஸ்லோவேக்கியா, ஸ்விட்ஸர்லாந்து உள்ளிட்ட 14 ஐரோப்பிய நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

 அகதிகளுக்கு இடமளிக்கும் ஐரோப்பாவின் கொள்கை முட்டாள்தனமானது மட்டுமின்றி தற்கொலைக்கு சமமானது என அந்த அமைப்பின் செக் குடியரசுப் பிரிவுத் தலைவர் மார்ட்டின் கோன்விச்கா தெரிவித்துள்ளார்.

 ஜெர்மனியில் அண்மையில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது பெண்களிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இதற்கு, அரபு நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இளைஞர்கள்தான் காரணம் என "பெகிடா' அமைப்பு குற்றம் சாட்டியது.

 இதையடுத்து அவர்களுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை அந்த அமைப்பு தொடர்ந்து முன்னின்று நடத்தி வருகிறது. 

 கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபரில் "பெகிடா' அமைப்பு முதன்முதலாக ஃபேஸ்புக்கில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், சில நூறு பேர் மட்டுமே அதில் உறுப்பினராக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.