13 பாடங்களை படிக்க வேண்டிய நிலை - ஜனாதிபதி மைத்திரி கவலை
இலங்கையில் மாணவர்களுக்கான அழுத்தங்களை குறைக்கும் வகையில் கல்வியில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக ஐந்தாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோரும் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் மற்றும் 6 வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் பாடங்களின் எண்ணிக்கை குறித்த அழுத்தங்கள் பற்றி கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த அழுத்தங்களை குறைக்கும் வகையில் கல்வி முறைமையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர் கல்வி அமைச்சை சேர்ந்தவர்களிடம் கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் பிபிசியிடம் கூறினார்.
நல்ல பள்ளிக்கூடங்களில் அனுமதி பெறும் நோக்கில் 5 ஆம் வகுப்புக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களும், பெற்றோரும் அதிக கவனம் செலுத்துவதாக தம்மிடம் கூறிய ஜனாதிபதி, அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பரீட்சைக்கான அழுத்தங்களை குறைக்க நடவடிக்கை எடுப்பதுடன், வெறுமனே பரீட்சையை மாத்திரம் மாணவரின் தகமையை அறியும் சாதனமாக கொள்ளாமல், அவர்களது ஏனைய திறமைகளையும் கணிக்கும் வகையில் கல்விமுறையில் மாற்றம் செய்யுமாறும் அதிகாரிகளை கேட்டதாகவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
6 ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் சுமார் 13 பாடங்களை தற்போது படிக்க வேண்டிய நிலை இருப்பதாக கவலை தெரிவித்த ஜனாதிபதி, அதற்கு பதிலாக தேவையான பாடங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனையவற்றின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார்.
அதேவேளை கணினி மற்றும் தொழில்நுட்பக் கல்வி போன்றவற்றிலும் அதிக கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அவர்களை கேட்டிருக்கிறார்.
இந்த சீர்திருத்தங்கள் குறித்த ஒரு அறிக்கையை தனக்கு ஒரு மாதகாலத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி தேசிய கல்வி நிறுவன ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Follow the japan education system.japan was developed country.follow the basic way .then only w3 can acheive our target
ReplyDeleteVery good PROPOSAL.
ReplyDelete