Header Ads



‘சோனக மக்களின் முடிசூடா மன்னன்”

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தலைசிறந்த கல்விமானாகவும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்த சேர். ராஸிக் பரீத் அவர்களின் பிறந்த தினம் இன்றாகும்.

அரசியல்வாதியாக, கொடைவள்ளலாக, சமூகத் தொண்டனாக, கல்விமானாகப் புகழ்பெற்று விளங்கிய சேர். ராஸிக் பரீத் இன்றும் கூட இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமன்றி ஏனைய இன மக்களாலும போற்றி மதிக்கப்படுகின்றார்.

முஸ்லிம் சமூகம், சமய, கலாசார விடயங்களில் தனித்துவத்துடன் வாழ வேண்டுமெனக் கனவு கண்டு அதற்காகப் பாடுபட்டவர் மர்ஹும் ராஸிக் பரீத்.இலவசக் கல்வியின் தந்தையான சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்ரலா அவர்களால் முன்வைக்கப்பட்ட இலவசக் கல்வித் திட்டத்தை பாதிப்பு எதுவுமின்றி தொடர்ந்து முன்கொண்டு செய்வதில் அயராது பாடுபட்ட ஒருவராக ராஸிக் பரீத் விளங்குகிறார்.

சேர் ராஸீக் பரீத் அவர்களின் பெயரில் நாடெங்கும் இன்றும் கூட ஏராளமான பாடசாலைகள் இயங்கிக் கொண்டிருப்பது இதற்கான சான்றாகும்.முஸ்லிம் சமூகம் கல்வியைப் புறந்தள்ளி வைத்துவிட்டு வர்த்தகத்தை வாழ்வுடன் இணைத்துக் கொண்ட சமூகமாகவே அன்றைய காலத்தில் விளங்கியது. முஸ்லிம் சமூகத்தை கல்வியில் முன்னேற்ற வேண்டுமென்பதை இலட்சியமாகக் கொண்டு உழைத்த தலைவர்களில் சேர். ராஸீக் பரீத் அவர்களும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவராவார்.

முஸ்லிம்களின் கல்வி, சமய, சமூக விடயங்களில் அவர் கரிசனை செலுத்திய போதிலும் ஏனைய இனங்களையும் அவர் சமமாகவே மதித்தார். நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு இனத்துக்கும் தனித்துவங்கள், சம உரிமைகள் உண்டென்ற கொள்கை மிக்கவர் சேர் ராஸீக் பரீத்.

‘சோனக மக்களின் முடிசூடா மன்னன்” என அவர் போற்றப்பட்டார். சட்டக் கழகம், மக்கள் பிரதிநிதிகள் சபை, செனட் சபை ஆகியவற்றையெல்லாம் முப்பது வருட காலம் அலங்கரித்து வழி நடத்திய பெருமை அவருக்குரியது. பொதுமக்களின் நலன்களைப் பேணிப் பாதுகாப்பதில் சேர். ராஸிக் பரீத் ஆற்றிய பணிகள் இவ்விடத்தில் குறிப்பிடப்பட வேண்டியவையாகும்.

கொழும்பில் அக்காலத்தில் பாவனையில் இருந்த காஸ் விளக்குகளுக்குப் பதிலாக மின்சார விளக்குகள் அமைக்கப்பட வேண்டுமென நகரசபையில் பிரேரணை கொண்டு வந்தவர் அவர். காஸ் கம்பனி பங்குகளில் 99 சதவீதத்தை உரிமை கொண்டாடிய வெளிநாட்டவர்கள் அப்பிரேரணையை தீவிரமாக எதிர்த்த போதிலும் ராஸிக் பரீத் அவர்களே வெற்றி பெற்றார்.

பெரும் சக்திகளுடன் அவர் இவ்வெற்றியைப் பெற்றிருந்தார். அவரது பணிகளை கௌரவிக்கும் பொருட்டு 1932ம் ஆண்டில் சமாதான நீதவான், உத்தியோகப்பற்றற்ற நீதிபதி ஆகிய கௌரவப்பதவிகளை அரசாங்கம் வழங்கியிருந்தது.

கொழும்பு நகர வரியிறுப்பாளர்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை அளப்பரியதாகும். அரசும் அவர் மீது நம்பி்க்கையும் பெருமதிப்பும் வைத்திருந்தது. இதனாலேயே அவர் அரச கழகத்தின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அன்னார் மறைந்து நீண்ட காலம் சென்ற போதிலும் இன்றும் கூட அவர் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார். இலங்கை மாதாவை தனது உயிரினும் மேலாக நேசித்த பெருந்தகை அவர்.

இஸட். தாஜுதீன். கல்விப் பணிப்பாளர் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவு
கல்வி அமைச்சு

No comments

Powered by Blogger.