Header Ads



நாளை நாடு திரும்பும் ஜனாதிபதி, வரவு செலவுத் திட்ட குறைகள் பற்றி கவனம் செலுத்துவார்..!

இம்முறை வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பாக அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் மத்தியில் உருவாகியுள்ள கொள்கை ரீதியான எதிர்வாதங்கள் மற்றும் சமூகத்தில் எழுந்துள்ள உரையாடல்கள்பற்றி ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  கவனம் செலுத்தியுள்ளார்.

பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற ரீதியிலும்  மக்கள்நேய அரசாங்கத்தின் பிரதானி என்ற ரீதியிலும் மாபெரும் கருத்தொற்றுமைக்கு மதிப்பளித்து, தொழிற்சங்கத்தினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் உருவாகியுள்ள கொள்கை ரீதியான கருத்து முரண்பாடுகளுக்கு செவிமடுப்பதற்கும், அது தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் அதன் பின்னர் இணக்கப்பாட்டுடன் கூடிய தீர்மானங்கள் எட்டப்படுவதன் முக்கியத்துவம்பற்றி ஜனாதிபதி  இங்கு வலியுறுத்தினார்.

மேற்குறிப்பிடப்பட்ட கொள்கைச் சட்டகத்திற்கு உட்பட்டு 2016ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பிரச்சினைகள் உருவாகியுள்ள துறைகள்பற்றிக் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அவர்கள் ஏற்புடைய தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அவ்வாறே தற்போது தொழிற்சங்கங்களினால் எழுப்பப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பாக  ஜனாதிபதி அவர்களின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கோரிக்கைகள் தொடர்பாக நீதியானதும் நடைமுறைச்சாத்தியமானதுமான தீர்வுகளை அடிப்படையாகக் கொண்டு கூடிய சீக்கிரம் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு  ஜனாதிபதி  எதிர்பார்க்கின்றார். 

ஜனாதிபதி அவர்கள் நாடு திரும்பியதும் குறித்த கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு எண்ணியுள்ளதுடன், ஜனாதிபதி அவர்கள் 2015 டிசம்பர் மாதம் 16ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

No comments

Powered by Blogger.