"சிங்களப் பாடசாலைகளுக்குப் பெருமை, சேர்க்கும் முஸ்லிம் மாணவர்கள்"
-ஏ.ஜி.எம்.தௌபிக்-
மேல் மாகாண முஸ்லிம்களின் கல்வித் தேடலை அவசரமாக விருத்தி செய்யும் நோக்கிலான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது குறித்து முன்னர் எழுதியிருந்ததை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள். இதன் அடுத்தகட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை 27.11.2015 கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனியா. பாடசாலையில் கொழும்பு முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்களுக்கான விசேட கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. அமைச்சர் ரிஷாட், எம்.பிக்களான இஷாக், முஜிபுர் ரஹ்மான், மரிக்கார் ஆகியோரின் பங்கு பற்றலில் இக்கூட்டம் நடந்தது.
கொழும்பு கைரியா ,ஸாஹிரா, ஹிக்மா, பாத்திமா, ஹிதாயா ஹுஸைனியா உள்ளிட்ட பல முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் பழைய மாணவர் சங்கத் தலைவர்கள், சமூக நலன் விரும்பிகளும் கலந்து கொண்டு கொழும்பு முஸ்லிம் மாணவர்களின் பிரச்சினைகளை முன்வைத்தனர். ஆனால், இக்கூட்டத்தில் பெற்றோர்களையும், ஒவ்வொரு பாடசாலைகளிலிருந்து ஒருசில மாணவர்களையும் அழைத்திருக்கலாம்.
மாணவர்களின் பிரச்சினைகளை அதிபர்கள், ஆசிரியர்கள் விளக்குவதை விட மாணவர்களிடம் நேரடியாகக் கேட்டறிவதே நடைமுறைச் சாத்தியமானதொன்று. உண்மையில் இக்கூட்டத்தில் பங்கேற்ற அதிபர்களின் கருத்துக்கள் பல பிரச்சினைகளின் விஸ்வரூபங்களையும் விபரீதங்களையும் வெளிப்படுத்தின. பாடசாலையில் பெளதிக வளங்கள் குறைபாடாக உள்ளமையே பொதுவான பிரச்சினையாக எடுத்துரைக்கப்பட்டது. எனினும் பெளதிக வளங்களுள்ள சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பொறுப்பின்றி பொழுது போக்கிற்காக கற்பித்தலில் ஈடுபடுவது மாணவர்களின் கற்கும் ஆற்றலைத் தூரப்படுத்தும் விடயங்கள் பற்றி சில பெற்றோர் கவலையுடன் தெளிவு படுத்தினர்.இந்நிலைமை ஏற்கனவே கற்றல் அறிவைத் தேடல் விடயங்களில் ஆர்வமின்றியுள்ள மாணவர்களின் மனோநிலையைப் பாதித்திருப்பது
அடையாளம் காணப்பட்டது. இன்னும் சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் தேவைக்கதிகமாகவும் வேறு சில பாடசாலைகளில் பற்றாக்குறையாகவும் உள்ளனர். இதை சமமாக பங்கிடாமல் பாடசாலைகளுக்கிடையே பரிமாற்றம் செய்வதற்கு சில நடைமுறை சட்டச் சிக்கல்கள் உள்ளமையும் இக்கூட்டத்தில் விளக்கப்பட்டன. மேலதிகமாக ஆசிரியர்கள் உள்ள பாடசாலைகளில் சில ஆசிரியர்கள் காலத்தையும் நேரத்தையும் கடமைக்காக கழிக்கும் மனோநிலையில் உள்ளமை இங்கு கருதிற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மகா¡ண பாடசாலைகளில் இவ்வாறான மனோநிலையில் ஆசிரியர்கள் இருப்பது மாணவர்களின் கல்வியைப் பெரிதும் பாதிக்காது. ஆனால் இயல்பாகவே கற்கும் விடயத்தில் நாட்டம் குன்றியுள்ள மாணவர்களையுடைய கொழும்பு முஸ்லிம் பாடசாலைகளில் இவ்வாறான ஆசிரியர்களின் மனோநிலை மாணவர்களைப் பெரிதும் பாதிக்கின்றது.
கொழும்பை பொறுத்தவரை வியாபாரம், சுயதொழில் முயற்சிக்கான சந்தர்ப்பங்கள், சூழல் காலடியில் கிடக்கின்றன. வியாபார சமூகத்தின் லாவகரமான வாழ்க்கை, சுகபோகம் என்பன இம்மாணவர்களின் கல்விக்கான நாட்டத்தைக் குறைக்கலாம். வெல்லம்பிட்டி பஞ்சிகாவத்தை கொலன்னாவ, வாழைத்தோட்டம், பொரளை, மருதானை பிரதேச மாணவர்களின் கல்விக்கான தேடல்கள், ஆற்றல்கள் விழிப்ப டையாமலிருக்க பல விடயங்கள் பங்காற்றுகின்றன.
ஒருசில மாணவர்களிடம் விழிப்பு ஏற்பட்டாலும் அசமந்தப் போக்குள்ள ஆசிரியர்களின் மனோ நிலையால் மாணவர்கள் ஆர்வம் குன்றுவதாக ஒரு அதிபர் பிரச்சினையை எடுத்துரைத்தார். இவை கொழும்பு முஸ்லிம் பாடசாலைகளிலுள்ள பிரதான குறைபாடுகளாகும். மேலும் சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களின் நடைமுறைச் சிக்கல்கள் அம் மாணவர்களின் அடைவு மட்டத்தை பாதிக்கின்றமையும் கூட்டத்தில் விளக்கப்பட்டது.
றோயல், ஆனந்தா, நாலந்தா, டி. எஸ். போன்ற முன்னணிப் பாடசாலைகளில் கொழும்பு முஸ்லிம் மாணவர்கள் பலர் கல்வி கற்கின்றனர். இவர்கள் பொருளாதார பலம், அரசியல் பின்னணி, கல்வியில் இயற்கையான விருப்பம் உள்ளிட்ட குணாம்சங்களை கொண்டவர்கள். தமிழைத் தாய்மொழியாகவும் சிங்களத்தை பாடசாலை மொழியாகவுமுடைய இம் முஸ்லிம் மாணர்கள் பலர் போட்டிகளுக்கு மத்தியிலே முன்னேற வேண்டியுள்ளது.
திறமையுடைய இந்த மாணவர்களின் பெறுபேறுகள் சிங்கள மொழிப் பாடசாலைககளுக்கே பெருமை சேர்க்கின்றன. கைரியா, ஸாஹிரா, ஹிக்மா பாடசாலைகளில் இம் மாணவர்களைக் கொண்டுவிட்டாலும் அதே திறமை, விவேகங்களை வெளிக்காட்டக்கூடியவர்களே இவர்கள். எனினும் குடும்பப் பின்புலம், செல்வாக்கு, கெளரவம் என்பவற்றால் ஏனைய பாடசாலைகளை இவர்கள் ஏளனமாகப் பார்க்கின்றனர். இதேபோல வெளி மாகாண மாணவர்கள் கொழும்பு பாடசாலைகளில் கல்வி கற்பது வெளியிட முடியாத பல பிரச்சினைகளைக் கொண்டுவந்துள்ளது.
கொழும்பு முஸ்லிம் பாடசாலைகளின் ஐந்தாம் தரம், ஓ.எல், ஏ.எல் பரீட்சை பெறுபேறுகளை அவதானித்தால் கிழக்கு மாகாணத்தைப் பின்புலமாகக் கொண்ட மாணவர்களே அதிகமுள்ளனர். இன்னும் புத்தளம், யாழ்ப்பாணம் போன்ற மாணவர்களும் விசேட திறைமையுடையவர்களாக உள்ளனர்.
எனவே இம் மாணவர்களின் பிறப்பிடம் வேறாக இருந்தாலும் வாழ்விடம் கொழும்பை மையமாகக் கொண்டுள்ளது. ஆகையால் புறச் சூழல்கள், பொருளாதார நெருக்கடிகள் மாணவர்களின் கல்வி ஆற்றலை மழுங்கடிக்க முடியாது என்ற வாதமே எழுகின்றது. இறைவன் இயற்கையாக வழங்கும் திறமைகளோடு , கடுமையான சுய முயற்சிகள் அர்ப்பணிப்புக்கள் மாணவர்கள் முன்னேற்றங்களுக்கு வித்திடலாம்.
இதில் இரண்டாம், மூன்றாம் பங்குகளே பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டல்களாக இருக்க முடியும். இந்த யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு அமைச்சர் ரிஷாட் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மரிக்கார் ஆகியோர் கொழும்பு முஸ்லிம் முன்னேற்ற செயற்திட்டங்களை முன்மொழியவுள்ளனர். படித்துவிட்டு வேலையின்றியிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாண இளைஞர். யுவதிகளுக்கு தற்காலிக நிரந்தரம் வழங்குதல், வடபுல திறமைவாய்ந்த தமிழ் ஆசிரியர்களை பகுதி நேர, முழு நேர வகுப்புக்கள் நடாத்த நியமித்தல் மாணவரிடையே விழிப்புணர்வு கருத்தரங்குகள், கலை கலாசார நிகழ்ச்சிகளை நடாத்துதல் என்பன இவ்விசேட திட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.
அவசர நிதி உதவியாக ஒவ்வொரு கொழும்பு முஸ்லிம் பாடசாலைகளுக்கும் அமைச்சர் ரிஷாட் ரூபா 15 இலட்சத்தை வழங்க உறுதியளித்துள்ளார். மிக நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் கொழும்பு மாவட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் கல்வி விடயத்தில் அக்கறை காட்டுவது மகிழ்ச்சிக்குரியதே.
Post a Comment