Header Ads



சாதி பாகுபாட்டினால் மனமுடைந்த அதிகாரி - உடனடியாக ஓய்வுபெற்று, இன்றே இஸ்லாத்தை தழுவினார்

(India) ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளராக பதவி உயர்வுக்கு தன்னை பரிசீலிக்காத காரணத்தினால் அம்மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் தலித் வகுப்பைச் சேர்ந்தவருமான உம்ராவ் சலோதியா தான் விருப்ப ஓய்வு பெறுவதாக எழுதிக் கொடுத்ததோடு இஸ்லாம் மதத்தையும் தழுவினார்.

உம்ராவ் சலோதியா என்ற தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் 1978-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். அவர் சீனியாரிட்டியின் படி இன்று 31.12.2015 (வியாழக்கிழமை) மாநிலத்தின் தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வசுந்தரா ராஜே அரசு ஏற்கெனவே உள்ள தலைமைச் செயலாளர் சி.எஸ். ராஜன் என்பவரின் பதவிக்காலத்தை 2016 மார்ச் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் தான் தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்காக சாதிப்பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று குற்றம்சாட்டிய உம்ராவ் சலோதியா, இது குறித்து ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு எழுதிய கடிதத்தில், “நாடு விடுதலையடைந்த பிறகு SC/ST பிரிவைச் சேர்ந்த நான் முதல் முறையாக மாநிலத்தின் தலைமைச் செயலாளராக வியாழக்கிழமையான இன்று சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் நடப்பு தலைமைச் செயலாளர் சி.எஸ்.ராஜனின் பதவிக்காலம் 2016 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனக்கான வாய்ப்பை மறுப்பதாகும்.

ஆகவே 3 மாதகால நோட்டீஸ் அடிப்படையில் நான் அனைத்திந்திய பணி அலுவல் விதிமுறைகளின் படி பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுகிறேன். எனக்கு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும், ஏனெனில் ஜூனியர் அதிகாரியின் கீழ் நான் பணியாற்ற விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

இதனினும் ஒருபடி மேலே போய் உம்ராவ் சலோதியா இஸ்லாம் மதத்தையும் இன்று தழுவுவதாக அறிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, “இஸ்லாம் மதத்தில் மனிதர்களிடையே பாகுபாடு கிடையாது, இந்து மதம் சாதி அடிப்படையில் பாகுபாடு உடையது. மதம் மாறிய பிறகு எனது பெயர் உம்ராவ் கான்.” என்றார்.

ராஜஸ்தான் மாநில அரசு மறுப்பு:

இவரது அதிரடி அறிவிப்பை அடுத்து ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர ராத்தோர், கூறும்போது, “சலோதியா அரசுக்கு எதிராக பேசியதன் மூலம் சட்டத்தை மீறியுள்ளார். அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. ராஜஸ்தான் அரசு சாதிப்பாகுபாடு அடிப்படையில் செயல்பட்டிருந்தால் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தலைவராக SC/ST பிரிவைச் சேர்ந்த கைலாஷ் மேக்வால் இருந்திருக்க முடியாது.

இது குறித்து ராஜஸ்தான் அரசு விசாரணை செய்து, அதன் முடிவுகளின் அடிப்படையில் சலோதியா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

பாஜக அரசு மீது காங்கிரஸ் தாக்கு:

தலித் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக ராஜஸ்தான் மாநில பாஜக அரசு நடந்து கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று கூறிய சச்சின் பைலட், “சலோதியா விருப்ப ஓய்வு கேட்டுள்ளது ராஜஸ்தான் ஆளும் கட்சியான பாஜக-வின் செயல்கள் மீது கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், பாஜக அரசின் அலட்சியப்போக்கினால் மூத்த அதிகாரி இஸ்லாம் மதத்தை தழுவ நேரிட்டுள்ளது வருந்தத்தக்கது” என்றார்.

உம்ராவ் சலோதியா ராஜஸ்தான் மாநில போக்குவரத்துக் கழகத்தின் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. May Almighty Allah fortify the feet of this official in Islam and oblige him to overcome all the hitches he seems to encounter here after. This occurrence is just a corroboration that Islam never ever discriminate people and there is no lower echelon in this impeccable religion. Allah is the greatest.

    ReplyDelete

Powered by Blogger.