பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சண்டித்தனம்..!
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைகள் மேம்படவேண்டும்.
கடந்த ஆட்சியில் முஸ்லிம்கள் வெளியில் தாக்கப்பட்டார்கள். இன்று முஸ்லிம்களுக்கு எதிரான சண்டித்தனம் பாராளுமன்றத்திற்குள்ளும் முன்னெடுக்கப்படுகின்றதா? என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வரவு–செலவுத்திட்டத்தின் பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், இலங்கையில் நீதியானதாக அரசியல் நடத்துவதற்கு பாராளுமன்றம் உள்ளது. அதற்கு கொள்கை ரீதியாக உள்ளே வரவேண்டும். பாராளுமன்றத்திற்குள் எம்.பி. ஒருவர் மீது தாக்குதல் நடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் என்னிடம் பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த நாட்களில் முஸ்லிம்கள் வெளியில் தாக்கப்பட்டனர். இன்று பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சண்டித்தனம் முன்னெடுக்கப்படுகின்றதா? என்றே அந்தப் பொதுமகன் என்னிடம் கேள்வி கேட்டார்.
இச்சபையில் எவராவது பிழை செய்தால் அவர் தொடர்பில் அவர் சார்ந்த அரசியல் கட்சி விசாரணைகளை நடத்தி ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரம், முழுமையாக ஒழிக்கப்பட்டு பாராளுமன்ற பலத்தை அதிகரிக்க வேண்டும். இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் படுகொலை செய்யப்பட்ட தாஜுதீன் விவகாரம் தொடர்பில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே பெரும் கலகம் ஏற்பட்டிருந்தது. இதனால் பாராளுமன்றமே போர்க்களமாக மாறியது.
அன்றைய தினம் பாராளுமன்றத்தில் நாமல் ராஜபக்ச எம்.பி. உரையாற்றிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட சர்ச்சையாலேயே பெரும் அமளி துமளி ஏற்பட்டது. மஹிந்த ஆதரவு அணி எம்.பிக்களுக்கும் ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி.க்களுக்குமிடையில் கைகலப்பு நிலைமை ஏற்பட்டது. அத்துடன் ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீது சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தவும் முயற்சிக்கப்பட்டது.
சபையில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச எம்.பி. சர்வதேச மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகரின் விசாரணையின் அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அமைச்சரவைக்கு அறிவித்தீர்களா? உங்களது ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களுக்கேனும் கூறினீர்களா? என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கேள்வி எழுப்பினார்.
இதன் போது எழுந்த ஐ.தே. க. எம்.பி. முஜிபுர் ரஹ்மான் தாஜுதீனின் படுகொலையும் திட்டமிடப்பட்டதுதான். இங்கு பல திட்டமிடப்பட்ட படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் லசந்த விக்கிரமதுங்க, பிரகித் எக்னெலிகொட, தாஜுதீன் ஆகியோரின் கொலைகளும் திட்டமிடப்பட்டதுதான் என்று கூறினார்.
இதனையடுத்தே மஹிந்த ஆதரவு அணியினர் அவரை தாக்க முற்பட்டனர். இதனாலேயே சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது. இந்த விடயம் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. சபாநாயகரிடம் முறையிட்டுள்ளார். தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்தே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் பாராளுமன்றத்திற்குள் முஸ்லிம்களுக்கு எதிரான சண்டித்தனம் இடம்பெறுகின்றதா? என்ற கேள்வியை முன்வைத்திருந்தார்.
மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிக்காலத்தில் நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு அந்த முறைமையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.
தம்புள்ளை பள்ளிவாசல் முதல் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் வரை தாக்குதலுக்குள்ளாகின. இதன் தொடர்ச்சியாக தர்கா நகர், பேருவளை, அளுத்கம ஆகிய நகரங்களில் முஸ்லிம் மக்களை அச்சுறுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனால் பெரும் சொத்தழிவுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முஸ்லிம் மக்கள் உள்ளாக்கப்பட்டனர்.
மிகவும் திட்டமிட்ட வகையிலேயே முஸ்லிம் மக்களுக்கான செயற்பாடுகள் அன்றைய காலத்தில் அரங்கேற்றப்பட்டன. தற்போது புதிய ஆட்சி மலர்ந்ததையடுத்து நிலைமை மாறியுள்ளது. புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதிலும் புதிய ஆட்சியை அமைப்பதிலும் சிறுபான்மை முஸ்லிம்களின் பங்கு அளப்பரியதாக அமைந்திருந்தது.
தற்போதைய நிலையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவாத செயற்பாடுகள் இல்லாது போயுள்ளது. இந்த நிலையில் பாராளுமன்றத்திற்குள் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாட்டில் மஹிந்த அணியினர் ஈடுபட முனைந்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு அல்ல.
றக்பி வீரர் மொஹமட் தாஜுதீனின் மரணம் படுகொலை என்று தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலை தொடர்பான சி.சி.ரி.வி. பதிவு சாட்சியங்களும் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் இந்த விசாரணையில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் மஹிந்த ஆதரவு தரப்பின் எம்.பி. நாமல் ராஜபக்ச படுகொலைகள் தொடர்பில் உரையாற்றிய போது தாஜுதீன் மரணமும் திட்டமிடப்பட்டதொன்று என்றே முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றத்தில் தமது மக்களின் கருத்துக்களையும் எண்ணக் குமுறல்களையும் வெளிக்காட்டுவதற்கு அந்தந்த எம்.பி.க்களுக்கு உரிமை உள்ளது. இந்த உரிமையினை யாரும் அச்சுறுத்தல்கள் மூலமோ அடாவடித்தனங்கள் மூலமோ தடுப்பதற்கு முனையக்கூடாது.
பாராளுமன்றம் என்பது ஜனநாயக விழுமியங்களை கட்டிக்காப்பதற்கான உயர்ந்த இடமாகும். இங்கு இனவாதத்தையும் மத வாதத்தையும் கிளப்புவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. உயர்ந்த மக்கள் சபையில் சகல மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையிலான செயற்பாடுகளே இடம்பெற வேண்டும்.
இதனைவிடுத்து தமது மக்களின் எண்ணக் குமுறல்களை வெளிப்படுத்த முயலும் சிறுபான்மையின எம்.பி.க்கள் மீது அச்சுறுத்தல் விடுக்க பேரினவாத சக்திகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஒருபோதும் முனையக்கூடாது.
தற்போது இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கும் சட்டவரைவொன்று கடந்த 11ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டக்கோவை மற்றும் தண்டனை சட்டக்கோவைகள் திருத்தப்பட்டு இந்த சட்டவரைவு பாராளுமன்றத்தில் விவாதத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்படும். இனம் மற்றும் மதக் குழுக்களுக்கிடையே மத, இன ரீதியாக அல்லது தேசிய ரீதியில் குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவது, உரையாடுவது, எழுதுவது அல்லது செய்கை மூலம் தெரிவிப்பது ஆகிய செயற்பாடுகள் இதன் மூலம் தடுக்கப்படும்.
இனம், மதம் அல்லது இனக்குழுக்களிடையே அதிருப்தி அல்லது குரோதத்தை ஏற்படுத்தல், இதற்காக முயற்சிப்பது அல்லது அதனை தூண்டுவது ஆகியனவும் இதன் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தி குற்றவாளியாக காணப்பட்டால் கடூழிய சிறைத்தண்டனையோ அல்லது சாதாரண சிறைத்தண்டனையோ விதிக்க முடியும் என்று இந்த சட்டவரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலையில் இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்புவோருக்கு எதிராக இத்தகைய சட்டவரைவு கொண்டு வரப்பட்டமை வரவேற்கத்தக்கதாகும். இன, மத வாதத்தால் எமது நாடு இதுவரை சின்னாபின்னமாக்கப்பட்டுவிட்டது. இனியும் அவ்வாறானதொரு நிலைக்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு கொண்டுவரப்படவுள்ள சட்டமானது அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் ஏற்கத்தக்க வகையில் அமைய வேண்டும். ஏனெனில் சட்டங்களை அங்கீகரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களே இன, மதவாதத்தை பரப்பி சுயநல அரசியல் இலாபம் பெறுவதற்கு இனியும் அனுமதிக்கக் கூடாது.
இவ்விடயம் குறித்து அனைவரும் சிந்திப்பது நல்லது.
Post a Comment