சீனாவின் குழிக்குள் விழுந்த மஹிந்த, அமெரிக்காவின் பொறிக்குள் சிக்கியுள்ள மைத்திரி + ரணில்
-ஹரிகரன்-
இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றி ஒரு ஆண்டை நிறைவு செய்யப் போகின்ற நிலையிலும், வெளிவிவகாரக் கொள்கையை தீர்மானிப்பதில், குறிப்பாக இந்தியா, சீனா, பாகிஸ்தானுடனுடனான, பிராந்திய உறவுகள் குறித்து முடிவெடுக்கும் விடயத்தில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் குழப்ப நிலையிலேயே இருக்கிறது.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இலங்கை அரசாங்கம் சீனாவின் கைக்குள்ளிருந்து விடுபட்டுப் போயிருக்கிறது என்பது உண்மை. அதுபோல, அமெரிக்காவின் கைக்குள் வந்திருக்கிறது என்பதும் உண்மை. இந்த இரண்டும் தவிர்ந்த, பிராந்திய உறவுகளைக் கையாளும் விடயத்தில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துக்கு இன்னமும் தெளிவான நிலைப்பாடு ஒன்று உருவாகவில்லை என்றே தெரிகிறது. நாங்கள் நடுநிலையானவர்கள், அணிசேராதவர்கள் என்று கூறிக் கொண்டே முன்னைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், கண்ணை திறந்து கொண்டே குழிக்குள் விழுவது போன்று சீனாவின் பக்கத்தில் போய்ச் சேர்ந்திருந்தது. இதனால், அங்கிருந்து இலங்கையை வெளியே கொண்டு வருவதே, அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளின் பொது நிகழ்ச்சி நிரலாக இருந்தது.
ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலில் அதற்குத் தெளிவான வெற்றி கிடைத்தது. ஓகஸ்ட் மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தல் அந்த வெற்றியை உறுதிப்படுத்தியிருந்தது. சீனாவின் பக்கத்திலிருந்து வெளியேறிய இலங்கையின் தற்போதைய அரசாங்கமும், அணிசேராக் கொள்கை என்ற போர்வையைத் தான் போர்த்திக் கொண்டிருக்கிறது.
யாருக்கும் சார்பில்லாத, பொது நிலைப்பாட்டில் இருந்து கொண்டு வெளிவிவகாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தப் போவதாக புதிய அரசாங்கம் அறிவித்தது. இருந்தாலும், சர்வதேச அளவில், இலங்கை தற்போது அமெரிக்காவின் கைக்குள் அகப்பட்டிருப்பது தெளிவான விடயம்.
அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரிகள் வேறெந்த நாட்டின் மீதும் செலுத்தாத அளவுக்கு, இலங்கை மீது அக்கறை செலுத்துகின்றனர். இந்த ஓராண்டு காலத்தில், அமெரிக்க உயரதிகாரிகள் வரிசையாக கொழும்புக்கு வந்து போயிருக்கின்றனர். ஒபாமா மட்டும் தான் வரவில்லை என்று பாராளுமன்றத்தில் கிண்டலடித்திருந்தார் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும. வேறெங்கும் இல்லாதபடி, இலங்கைக்கு மட்டும் அமெரிக்க அதிகாரிகள் பயணம் மேற்கொள்வதன் நோக்கம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
எது எவ்வாறாயினும், சர்வதேச அளவில், இலங்கை இப்போது அமெரிக்காவுக்கு நெருக்கமான நிலையில் இருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் பிராந்திய அளவில் தான், இலங்கையின் நிலை என்ன என்ற கேள்வி இருக்கிறது. இந்தியா-, சீனா,- பாகிஸ்தான் என்று, இந்தப் பிராந்தியத்தில் முப்பெரும் சக்திகள் இருக்கின்றன. இவற்றில் சீனாவும் பாகிஸ்தானும் ஒரே அணியில் இருப்பவை. இந்தியா இன்னொரு அணியில் இருக்கிறது.
இந்த நாடுகளுக்கிடையிலான உறவுகளில் சமநிலைக் கொள்கையை கடைப்பிடிப்பதில் தான் இலங்கை தெளிவான குழப்பத்தில் இருக்கிறது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் நெருக்கம் அதிகரித்தது. ஆனால் இப்போதைய நிலையில், அப்படியானதொரு நிலை இருக்கிறதா என்ற கேள்வி இராஜதந்திர மட்டங்களில் இருக்கவே செய்கிறது. காரணம், இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகள், பிராந்திய நலன்களை மட்டும் கவனத்தில் கருத்தில் கொண்டு செயற்பட முடியாத இக்கட்டானதொரு நிலை இலங்கைக்கு இருக்கிறது.
இந்தியாவை மட்டும் நம்பியிருக்க முடியாத, சீனாவும் பாகிஸ்தானும் தேவை என்ற கொழும்பின் நிலைப்பாட்டை புதுடில்லி முழுமையாக அங்கீகரிக்கத் தயாராக இல்லை என்பதே முக்கியமான சிக்கல். இப்போது, பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்களை வாங்கும் கொழும்பின் திட்டமும், சீனாவினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கத் தயாராகியுள்ளதும், புதுடில்லியைக் குழப்பமடைய வைத்துள்ளது.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று ஆரம்பத்தில் இருந்தே இந்தியா வலியுறுத்தி வந்திருந்தது. அதை கருத்தில் கொள்ளாமல் தான், முன்னைய அரசாங்கம் அனுமதி கொடுத்தது. தற்போதைய அரசாங்கம் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் முடக்கி வைத்திருக்கிறது.
இப்போது சுற்றுச்சூழல் அறிக்கை சாதகமாக இருப்பதாகக் கூறி அதற்கு அனுமதி கொடுக்கத் தயாராகியுள்ளது. ஆனால், புதிதாக உருவாக்கப்படும். நிலப்பரப்பில், 20 ஹெக்ரெயர் நிலப் பகுதியை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் சீனாவின் திட்டத்துக்கு மட்டும் அரசாங்கம் அனுமதி கொடுக்கத் தயாராக இல்லை. உடன்பாட்டில் உள்ள இந்த விடயத்தை நீக்கிவிட்டால், நாளையே கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடங்கலாம் என்ற நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கிறார். இந்த திட்டம் கைவிடப்பட்டால், இலங்கைக்கு பலமுனை இழப்புகளும் நெருக்கடிகளும் ஏற்படும்.
முதலாவது-, சீனாவின் அழுத்தங்களையும் விரோதத்தையும் சம்பாதிக்க நேரிடும், இரண்டாவது-, சீன நிறுவனத்துக்கு பெருந்தொகையான நட்டஈட்டைச் செலுத்த நேரிடும். மூன்றாவது,- இலங்கையின் பொருளாதார வாய்ப்புகளும், நன்மதிப்பும் சர்வதேச அளவில் கெட்டுப் போகும். எனவே, எப்படியாவது தமது நிபந்தனைகளுக்கு அமைய, திட்டத்தை நடைமுறைப்படுத்த சீனாவை இணங்க வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில், சீனாவுக்கு நில உரிமை கொடுக்கும் உடன்பாட்டு விதி மாற்றப்பட்டாலும் கூட இந்த திட்டம் நிறைவேற்றப்படுவதில் விருப்பமில்லை என்றே தெரிவிகிறது. இது புதுடில்லியின் குழப்பத்துக்கு ஒரு காரணம். அடுத்து, பாகிஸ்தானிடம் இருந்து ஜே.எப்--17 போர் விமானங்களை வாங்கும் இலங்கையின் திட்டம், இந்தியாவுக்குப் பிடிக்கவில்லை.
கடந்த காலங்களில், விடுதலைப் புலிகளுடன் போர் நடந்த காலத்தில், பாகிஸ்தானிடம் பெருந்தொகையான ஆயுதங்களை இலங்கை வாங்கிய போது எதிர்ப்புகள் எதையும் தெரிவிக்காத இந்தியா, இப்போது பாகிஸ்தானிய போர்விமானங்களை கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பது ஏன் என்ற கேள்வியும் இருக்கிறது. பாகிஸ்தானும், இந்தியாவும் நீண்டகால பகைமையைக் கொண்ட நாடுகளாக இருந்தாலும், போர் விமானக் கொள்வனவு விடயத்தில், புதுடில்லி அதிகளவுக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகவே தெரிகிறது. இந்த போர் விமானக் கொள்வனவுக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம், தொலைபேசி மூலம் நேரடியாகவே எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதற்குப் பின்னர், இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து இந்தியாவின் கரிசனையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 12ஆம் திகதி பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சியுடன் பேச்சு நடத்தியிருந்தார். இந்தியத் துணைத் தூதுவர் அரிந்தம் பக்சி, பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் பிரகாஷ் கோபாலன் சகிதம், பாதுகாப்பு அமைச்சுக்கு இந்தியத் தூதுவர் இந்த விடயமாகவே சென்று பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமன்றி, அடுத்த மாதம், சிறப்புத் தூதுவர் ஒருவரையும் கொழும்புக்கு அனுப்ப புதுடில்லி திட்டமிட்டுள்ளதாகவும் கூடத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயத்தில் இந்தியா கூடுதலான அழுத்தங்களைக் கொடுக்க முனைகிறது என்பதை இந்த நகர்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
இந்த இழுபறி நடந்து கொண்டிருக்கின்ற சூழலில், ரயில் இயந்திரங்கள், பெட்டிகள், பஸ் இயந்திரங்கள் மற்றும் உதிரிப்பாகங்களை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யும் ஒரு திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தி வைத்திருக்கிறார். இந்தியாவின் 800 மில்லியன் டொலர் கடன் திட்டத்தில் அவற்றை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் சமரப்பிக்கப்பட்டபோது. அமைச்சர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இவற்றை சீனாவிடமிருந்து வாங்குவது நல்லது என்று சில அமைச்சர்கள் வாதம் செய்தனர். இதனால், சீனாவா- இந்தியாவா என்று முடிவெடுக்கும் வரை அந்த திட்டத்தை ஜனாதிபதி இடைநிறுத்தி வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இந்தியாவின் இர்கோன் நிறுவனத்தின் பணிப்பாளர் குப்தா, இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இவையெல்லாம் புதுடில்லிக்கும் கொழும்புக்குமான உறவுகளில் குழப்பமான நிலை ஒன்று தோன்றி வருவதற்கான அறிகுறிகளாகவே தெரிகின்றன. சீனா, பாகிஸ்தான் குறித்து முடிவுகளை எடுக்கும் போது, இந்தியாவுடன் முரண்பாட்டை சந்திக்க வேண்டிய நிலை கொழும்புக்கு ஏற்படுகிறது. இது தான் இலங்கை எதிர்கொள்கின்ற சிக்கல்.
பொருளாதாரத் தேவைகளுக்காக சீனாவைக் கைவிட முடியாத நிலை இலங்கைக்கு உள்ளது, இதனை அமெரிக்கா புரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியா அந்தளவுக்குப் புரிதலைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவுக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் சமநிலையை பேணுவதில் இலங்கை உறுதியாக இருக்க வேண்டும் என்பதே அமெரிக்க நிலைப்பாடாக இருக்கிறது. எனினும், இந்த உறவுச் சமநிலையை எந்த அளவுகோலை வைத்து தீர்மானிப்பது என்ற குழப்பம் இலங்கைக்கு இருக்கிறது. இந்தக் குழப்பத்துக்கு கொழும்பு விடைகாணும் வரை, பிராந்திய ரீதியாக இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை சிக்கலுக்குரியதொன்றாகவே இருக்கப் போகிறது.
rubbish garbage
ReplyDelete