Header Ads



கல்முனை புதிய நகர திட்டத்திற்கு எதிரான, தமிழர் ஆர்ப்பாட்டத்தின் பின்னணி..!

-பாதுஷா-

கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக தமிழ் அரசியல் தலைமைகளினால் இன்று (28) திங்கட்கிழமை கல்முனை நகரில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

"தமிழர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் கல்முனை புதிய நகரத் திட்டத்தை எதிர்ப்போம்" எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் ஏற்பாடு என்று ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் இதன் பின்னணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே இருக்கிறது என்பதை அவதானிக்க முடிந்தது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் டெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வன்னியில் இருந்து வந்து கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், தமிழ் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன், டெலோ செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன், கல்முனை மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் கே.ஏகாம்பரம் மற்றும் மாநகர சபையின் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களும் தமிழ் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதில் தமிழ் பெண்களும் பெரும் எண்ணிக்கையில் திரட்டி வரப்பட்டு கலந்து கொண்டிருந்தனர். கல்முனை பிள்ளையார் கோயில் முன்றலில் இருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கல்முனை நகரின் பிரதான நெடுஞ்சாலை ஊடாக கல்முனை மாநகர சபை வரை சென்று, அங்கு மாநகர முதல்வருக்கு முகவரியிடப்பட்ட மகஜர் கையளிக்கப்பட்டது.

கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்ட விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன மேல்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்ற சூழ்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கல்முனை தமிழ் பிரமுகர்களுடனான கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்ததன் எதிரொலியாகவே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ் பிரமுகர்களுக்கு கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் தெளிவான விளக்கங்கள், அவர்களின் காணிகளுக்கான உத்தரவாதங்கள் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்துடன் நேரடியான தொடர்பைக் கொண்டுள்ள கல்முனை மாநகர சபையின் முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான நிசாம் காரியப்பர் இந்த சந்திப்புக்கு அதன் ஏற்பாட்டாளரான பிரதி அமைச்சர் ஹரீசினால் அழைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அறிய முடிகின்றது.

நிசாம் காரியப்பரைப் பொருத்தவரை கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்திற்கு அங்கு வாழ்கின்ற தமிழர்களின் இணக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு நகர அபிவிருத்தி அதிகாரி சபையின் பணிப்பாளர் நாயகம், பொறியியலாளர் மற்றும் தொழில் நுட்பவியலாளர்களைக் கொண்டு தெளிவுகளை ஏற்படுத்தி வந்திருந்தார்.

புதிய நகர அபிவிருத்தி திட்டத்திற்கான வயல் காணிகள் சுவீகரிப்பில் தமிழருக்கு எந்த வகையிலும் அநீதியிழைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதம் அவரினால் பகிரங்கமாக வழங்கப்பட்டிருந்ததையும் தமிழ் தரப்பினால் முன்வைக்கப்பட்டிருந்த ஆலோசனைகளையும் உள்வாங்கி உத்தேச நகர அபிவிருத்தித் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அவர் உடன்பட்டிருந்தார் என்பதையும் ஊடகங்கள் மூலம் அறிய முடிந்தது. 

ஆனால் அமைச்சர் ஹக்கீம் முன்னிலையில் தமிழ் பிரமுகர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் அதற்கு மாறான கருத்துகள் பரிமாறப்பட்டு தமிழர்களின் நம்பிக்கை சிதறடிக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் இத்திட்டத்திற்கு இணங்க மறுத்துள்ளதுடன் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு வந்துள்ளனர். இதனை தமிழ் அரசியல்வாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்த முற்பட்டிருப்பதையே இன்றைய ஆர்ப்பாட்ட பேரணி எடுத்துக் காட்டுகின்றது.

2 comments:

  1. முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் வடபகுதியிலும் முஸ்லிம்களின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளனர் .முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறையிலும் முஸ்லிம்களின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளனர் .இவர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்கின்ற இந்த பொன்னான காலத்தை வீணடிப்பார்கள் .எனவே எமது முஸ்லிம் பிரதேசங்களை தைரியமாக துணிவுடன் அபிவிருத்தி செய்யக்கூடிய தலைமைத்துவமே தற்போது முஸ்லிம்களுக்கு தேவை .

    ReplyDelete
  2. பல வருடங்களாக ஒற்றுமையாக வாழ்ந்த சமூகத்தை பிரிச்சிடாதிங்க.
    உங்கட அடிதடி அராசியல உங்களோடையே வைச்சிகங்க அது நிரந்தரமில்லாத அரசியல் தனி ஒருவரின் அரசியல் லாபத்துக்காக நடக்கும் மாயை.
    பிரபாகரனுக்கு ஏற்பட்ட நிலை நமக்கு பாடம்.

    அன்னன் அமிர்தலிங்கம் ஈழத்தை பெற்று தராவிட்டால் தம்பி அஸ்ரப் பெற்று தருவன் என்று கூறிய தலைவனை உருவாக்கிய மன்.

    2சமூகமும் பாதிக்கப்பட்ட சமூகம் ஒருவரை மிதித்து வாழ எத்தேவையயுமில்லை. இல்லை எனின்ன் ரிசாட் போல கோர்ட் வாசலிலேயே காலம் போகும்.
    மகிந்தவின் காலம் முடிந்து விட்டது அதில் பழகிய சிலர் இன்னும் முடித்ததாக இல்லை.

    சமரசம் செய்து பிரச்சினையை முடிக்க பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.