Header Ads



இலங்கையிலுள்ள மலையக மக்கள், இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவு வழங்குவது பிழை கிடையாது

தொண்டமான் நிதியத்திற்காக கடந்த ஆட்சி காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிக்கு என்ன நேர்ந்தது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.
 
மலையக மக்களின் பிறப்பு சான்றிதழில் இன்றும் “இந்திய தமிழர்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாக விஜித்த ஹேரத் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மலையக மக்கள் நாட்டின் பிரஜைகள் என்பதோடு, அவர்களின் பிறப்பு சான்றிதழிலுள்ள இந்திய தமிழர் என்ற வசனம் மாற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார்.

பிறப்பு சான்றிதழில் இந்திய தமிழர் என குறிப்பிடப்பட்டுள்ளமையினாலேயே இந்திய கிரிக்கெட் அணி போட்டிகளில் வெற்றி பெறும் போது, அதனை மலையக தமிழர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர் என விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

மலையக மக்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவு வழங்குவதில் எவ்வித பிழையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய தமிழர் என்ற பெயரை மாற்றும் பொறுப்பு அரசாங்கம் வசமே காணப்படுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

அத்துடன், பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலத்தில் அவர்களுக்கென்று ஒரு காணியை வழங்க வேண்டும் எனவும், அந்த நடவடிக்கை இன்றும் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.