கறுப்புக்கொடி ஏற்றச் சொல்கிறது பொது எதிர்க்கட்சி, தேசியக் கொடியை உயர்த்தச் சொல்கிறது அரசு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசினூடாக நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகின்றதை முன்னிட்டு ஜனவரி முதல் வாரத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சி வாரத்தை எளிமையான முறையில் கொண்டாடவேண்டும் என அரசு மக்களுக்கு அறிவித்தது.
ஜனவரி முதல் வாரத்தில் கறுப்புக்கொடியை ஏற்றி அரசுக்கு மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும் என பொது எதிர்க்கட்சி எனக் குறிப்பிடும் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் அனைவரும் தேசியக் கொடியை உயர்த்துமாறு அரசு பதிலடி கொடுத்தது.
அரச தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே ஐக்கிய தேசிய க் கட்சியின் பொதுச் செயலாளரும், அரச தொழில் முயற்சிகள் அமைச்சருமான கபீர் ஹாசிம் இவ்வாறு அறிவிப்பு விடுத்து பதிலடி கொடுத்துள்ளார்.
அவர், மேலும் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு அனைவருக்கும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளோம். இதன் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு ஜனவரி முதல் வாரத்தை நல்லாட்சி வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளோம். இக்காலப்பகுதியில் அரச நிறுவனங்கள், அமைச்சுகள் என்பவற்றில் தேசியக் கொடி பறக்கவிடப்படும். பொதுமக்களும் தேசியக் கொடியை உயர்த்துமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
நல்லாட்சி அரசு ஒருவருட காலத்துக்குள் என்ன செய்தது என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். நாங்கள் பல நல்ல விடயங்களைச் செய்துள்ளோம். நல்லாட்சி வாரத்தில் மக்களுக்கு இது தொடர்பில் விளக்கமளிக்கவுள்ள அதேவேளை, எமது எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சுகள் மட்டத்தில் ஆராயவுள்ளோம்.
மேலும், தேசிய அரசால் வழங்கப்பட்ட ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றியே நாம் நல்லாட்சி அரசின் ஒருவருட பூர்த்தியைக் கொண்டாடவுள்ளோம்'' - என்றார்.
Post a Comment