வாபஸ் பெற்ற சட்டத்தை மீண்டும் கொண்டுவந்து, உடனடியாக நிறைவேற்றுங்கள் - மஸ்தான்
நாட்டில் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்த பகைமை உணர்வைத் தூண்டும் அனைத்து நடவடிக்கைகளையும் தடைசெய்யும் சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அதில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. இருப்பினும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் எனும் அடிப்படை உரிமையை ஒரு கேடயமாக வைத்து பொறுப்பற்ற வகையில், உண்மைக்குப் புறம்பாக சில இனக்குழுக்களை அல்லது சமயங்களை அல்லது சமயத் தலைவர்களை இலக்காகக் கொண்டு துவேசப் பிரச்சாரங்களை முன்னெடுக்கப்படுவதை நல்லாட்சிக்கான தேசிய அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது.
1900 தொடக்கம் இலங்கையில் இனங்கள் மற்றும் சமயக் குழுக்களுக்கிடையே நல்லுறவைச் சிதைத்து பிரிவினைகளை ஏற்படுத்த காலத்துக்குக் காலம் பல சக்திகள் உருவாகி எமது தேசத்துக்கும், தேசிய ஒற்றுமைக்கும் ஈடுசெய்ய முடியாத பல சேதங்களை ஏற்படுத்தியதன் விளைவை நாம் இன்று அனுபவிக்கின்றோம்.
அநாகரிமான முறையில் எவ்வித தடைகளும் இன்றி வளரவிடப்பட்ட இனவாதம் மற்றும் தீவிரவாதத்தின் பிடியில் இன்று எமது பொருளாதாரம் சுமார் 50 வருடங்களால் பின்னடைந்துள்ளது. மேலும், 'நாம் இலங்கையர்' என்ற ஒரே குடையின் கீழ் மக்களை ஒன்றுதிரட்டுவதில் இன்று பாரிய நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகிறோம்.
எனவே இலங்கை கைச்சாதிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சாசனத்தின் (ICCPR), 20(2) ம் சரத்துக்கு அமைய பகைமை உணர்வைத் தூண்டும் அனைத்து நடவடிக்கைகளும் இலங்கையில் தடைசெய்யப்பட வேண்டும்.
ஜோ்மனி, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா உட்பட பொதுவாகவே அனைத்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளும், எமது அயல் நாடான இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட உலகில் பொரும்பாலான நாடுகளில் பகைமை உணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளைத் தடைசெய்யும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றன.
எனவே நாட்டில் நிலையான இனநல்லிணக்கத்தை உருவாகி மீண்டும் பயங்கரவாதம் மற்றும் இனப்பிரச்சினைகள் தோன்றாமல் இருக்க, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றவியல் தண்டனை (திருத்தம்) சட்டமூலம் உடனடியாக நிறைவேற்றப்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களையும், தேசிய அரசாங்கத்தையும் வேண்டிக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment