Header Ads



வசீம் தாஜுதீன் தொடர்பில், முஜுபுர் ரஹ்மான் முழங்கிய அனைத்தும் நீக்கம்

மர்மமான முறையில் உயிரிழந்த றக்பி வீரர் வசீம் தாஜுதீன் குறித்த கருத்து முன்வைப்புகளால் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் தீவிர நிலை ஏற்பட்டது.

இதனால் இரண்டு தடவைகள் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டன.

ஜெனீவா பிரேரணை தொடர்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்த பிரேரணை தொடர்பில் அமைச்சரவையின் அனுமிதி பெற்றுக் கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் வழங்கிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அனைத்து அமைச்சர்களும் இந்த பிரேரணை குறித்து அறிவார்கள் என்று கூறினார்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான், றக்பி வீரர் வசீம் கொலை செய்யப்பட்டமை குறித்த கருத்துக்களை முன்வைத்தார்.

எனினும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு ஒன்று தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்ற முடியாது என்று தெரிவித்து, எதிர்கட்சிகளின் ஒரு பிரிவினர் கூச்சலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து நாடாளுமன்றம் 10 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டு, மீண்டும் அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் இந்த பிரச்சினை மீண்டும் நாடாளுமன்றத்தில் தீவிரநிலையை ஏற்படுத்தியதை அடுத்து, 4.50 அளவில் நாடாளுமன்ற மீண்டும் ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனை அடுத்து, தாஜுதீன் குறித்து முன்வைக்கப்பட்ட கருத்துக்களை நாடாளுமன்ற பதிவு புத்தகத்தில் இருந்து நீக்குவதற்கு சபாநாயகர் தீர்மானித்ததை அடுத்து, சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.