Header Ads



சென்னையில் வெள்ளம், இலங்கைக்கு அடித்து வரப்பட்ட சடலம், திருகோணமலையில் மீட்பு

திருகோணமலை கடற்கரையில் நேற்றுமுன்தினம் (06)  மாலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. பொலிசார், அதனை மீட்டு சோதனையிட்டனர். சட்டைப் பையில் ‘சென்னை சென்ட்ரல் கால் டாக்சி டிரைவர் அசோசியேஷன்’ என்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இருந்தது. 

அதில், என்.பூமிதுரை என்ற பெயருடன், முகவரி ‘13/15, என்ஜிஓ காலனி, காமராஜர் நகர், சூளைமேடு, சென்னை-94’ என்றும் இருந்தது. இதையடுத்து, கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம், பொலிசார் தகவல் தெரிவித்தனர். திருகோணமலை வைத்தியசாலையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து இலங்கை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சென்னையில் பெய்த கனமழையால் இவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். வங்கக்கடலில் வெள்ளநீரோடு இவரது உடல் சென்று, நீரோட்டத்தின் போக்கில், இந்தியப் பெருங்கடலுக்கு இழுத்து வரப்பட்டு, இங்கு கரை ஒதுங்கியிருக்கிறது. 

உடற்பகுதிகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளனர்,’’ என்றார், என தமிழக ஊடகமான தினகரன் குறிப்பிட்டுள்ளது. 

தகவல் அறிந்து சூளைமேடு பொலிசார் விசாரணை நடத்தியதில் பூமிதுரை கோவையில் டாக்சி டிரைவராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. எனவே அவரது அடையாள அட்டையை வேறு ஒருவர் பயன்படுத்தி வந்திருக்கலாம். அவர் உடல்தான் இலங்கையில் மீட்கப்பட்டுள்ளது என உறுதியானது. இதையடுத்து அவர் யார் என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.