அறபு மொழியும், அறியாத உண்மைகளும்-
- அஷ்ஷெய்க் மன்சூர் மதனி-
மொழி என்பது ஒருவர் மற்றவருடன் தனது கருத்துக்கள் சிந்தனைகள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் ஊடகமாகும். மாத்திரமன்றி அது அல்லாஹ்வின் அற்புதங்களிலும் ஒன்றாகும். இது பற்றி திருமறை அல்குர்ஆன் பின்வருமாறு இயம்புகின்றது.
'அந்த அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றுதான் வானங்கள் பூமியைப் படைத்ததும், நீங்கள் மொழிகளிலும் நிறங்களிலும் பல்வேறுபட்டிருப்பதுமாகும்.' (அர்-ரூம் : 22)
அறபு மொழி என்பது அல்லாஹ்வால் அவனது இறுதி வேதமும், யுக முடிவு வரை நிலைத்திருக்கக் கூடியதுமான திருமறை அல்குர்ஆனின் மொழியாக தெரிவு செய்துள்ளான். அல் குர்ஆன் அற்புத வேதமாக திகழ்வது போலவே அது தாங்கி நிற்கும் மொழியும் அற்புதமாக விளங்குகின்றது. இவ்வுண்மையை ஏனைய மொழிகளுடன் ஒப்பிடுகையில் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
உலக வழக்கில் பார்க்கும் போது ஒரு மொழியானது, கால ஓட்டத்தில் பல மாற்றங்களையும், வீழ்ச்சிகளையும் சந்திக்கின்றது. இன்னும் சில வழக்கொழிந்து போவதைக் கூட காணலாம். ஆனால் இஸ்லாத்தின் பின்னரும் 1400 ஆண்டுகளைக் கடந்தும் அறபு மொழியானது எவ்வித மாற்றமும் இன்றி தன்னிகரற்று தலை நிமிர்ந்து நிற்பதைப் பார்க்கலாம்.
மேலும், இன்று இம்மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை 422 மில்லியனையும் கடந்துள்ளது.
மொழியியலாளர்களில் ஒருவரான ஜேர்மனியைச் சேர்ந்த சேர் 'பிரீடெக்' குறிப்பிடுகையில் 'அறபு மொழி உலக மொழிகளில் தன்னிறைவு கண்டது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
சேர் 'வில்லியம் வர்க்' குறிப்பிடுகையில் 'அறபு மொழியானது மென்மையும் நெகிழும் தன்மையும் கொண்டது. அதனால்தான் காலத்தின் தேவைக்கேற்ப அம்மொழியால் செயற்பட முடிகின்றது.' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அறபு மொழியை ஏனைய மொழிகளுடன் ஒப்பிடுகையில் அது தனிச் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது. அதன் எழுத்து உச்சரிப்புக்களை எடுத்துக் கொண்டால் பல நூற்றாண்டுகள் கடந்தும் கடுகளவும் மாற்றம் பெறாது காணப்படுகின்றது. இச்சிறப்பானது உலகில் காணப்படும் வேறெந்த மொழிகளிலும் காணமுடியாது.
பிற மொழிகளில் அறபு மொழியின் ஆதிக்கம் இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். உதாரணமாக பாரசீகம், உருது ஆகிய மொழிகள் அறபு மொழியில் தங்கியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. மேலும் ஐரோப்பிய மொழிகளிலும் அறபு மொழிச் சொற்கள் நிறைந்து காணப்படுவது இம்மொழியின் தனித்துவத்தை தொட்டுக் காட்டுகின்றது.
அறபு மொழியில் காணப்படும் சொற்செறிவை நோக்கும் போது ஏனைய பிரபல்யமும் செல்வாக்கும் பெற்ற மொழிகளையும் விட அறபு மொழிச் சொற்கள் பன்மடங்காக காணப்படுகின்றது.
பின்வரும் அட்டவணை இவ்வுண்மையை உணர்த்துகின்றது.
மொழி சொற்கள்
* அறபு மொழி : 12 302 912
*ஆங்கிலம் : 600 000
*பிரஞ்சு மொழி : 150 000
*ரஷ்ய மொழி : 130 000
இந்நிலையில் இம்மொழிக்கான ஒரு சர்வதேச தினம் உள்ளதென எவரும் கவனத்திற் கொள்வதில்லை. ஐ.நா. சபையும் நிருவாக செயற்பாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் அறபு மொழியும் ஒன்றாகுமென ஐ.நா. சபை 1973 டிசம்பர் 18ம் திகதி உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
அதே போல் உத்தியோக பூர்வ 06 மொழிகளில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சர்வதேச தினங்களும் ஒதுக்கப்பட்டன. இதற்கமைய அறபு மொழிக்கான சர்வதேச தினமாக டிசம்பர் 18 எனத் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு மார்க்க அடிப்படையிலும் சர்வதேச ரீதியிலும் சிறப்புப் பெற்ற அறபு மொழியின் சிறப்புக்கள் நீண்டுகொண்டே செல்லும். அது இவ்வையகம் வாழும் வரை நிலைக்கும் ஆற்றல் மிக்கது. அம்மொழியின் சொந்தக்காரர்களான நாம் அதன் மகிமையை உணர்ந்து அதன் வளர்ச்சியிலும் உயர்ச்சியிலும் பங்கெடுப்போமாக.
இந்த வகையில் சர்வதேச அறபு மொழி தினத்தை முன்னிட்டு காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியானது, கடந்த மாதம் சர்வதேச அறபு மொழி தினப் போட்டியினை நடாத்தியதோடு இத்தினத்தினத்தினை முன்னிட்டு சர்வதேச அறபு மொழி தினமான கடந்த 2015.12.18ம் திகதி எமது கல்லூரியானது விஷேட நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு-
அஷ்ஷெய்க். எம்.எம்.எம். மன்சூர் (மதனி)BA. பிரதி அதிபர்,மஃஹதுஸ்ஸுன்னா அறபுக் கல்லூரி,காத்தான்குடி.
Post a Comment