என் மீது தற்கொலைத் தாக்குதலில் மூளையாகச் செயற்பட்டவரை,சந்தித்தது ஒரு விசித்திர நிகழ்வு - பொன்சேகா
தன் மீதான தற்கொலைத் தாக்குதலுக்குத் திட்டமிட்டவர் என்று கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரை, விடுவிப்பதற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
2006 ஏப்ரல் 25ஆம் நாள் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குள் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில், இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா படுகாயமடைந்தார்.
இந்த தாக்குதலை மேற்கொண்ட பெண் தற்கொலைக் குண்டுதாரியை அழைத்து வந்தவர் என்று கூறப்பட்டு, கைது செய்யப்பட்ட மொறிஸ் என்ற விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரை விடுவிக்க சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சரத் பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்கு அவர், “1971இலும், 1987-89 வரையிலும் வன்முறைகளுக்குப் பொறுப்பான தெற்கிலுள்ள இளைஞர்கள் புனர்வாழ்வுக்குப் பின்னர் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வடக்கிலுள்ள இளைஞர்கள் அவ்வாறு விடுவிக்கப்படக் கூடாது என்ற கூறுவதில் அர்த்தம் இல்லை.
தெற்கில் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட சோமவன்ச போன்ற முக்கியமான பலர், புனர்வாழ்வு அளிக்கப்படாமல் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது.
அவர்கள் அரசியல் கட்சியை நடத்தவும், அனுமதிக்கப்பட்டது. அவர்களில் சிலர் அமைச்சர்களாகவும் இருந்தனர்.
2006 ஏப்ரல் 25ஆம் நாள் என் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் மூளையாகச் செயற்பட்டவரை நான் சந்தித்தது ஒரு விசித்திரமான நிகழ்வு.
நான் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த போது, நானும் அவரும் ஒரே வாங்கில் (bench) அமர வேண்டியிருந்தது. நாம் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டோம்.
மொறிஸ் காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில், தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்த போது தான் காலிமுகத்திடலில் இருந்ததாக கூறியிருந்தார்.
ஆனால், அவர் தான் அப்போது இராணுவத் தலைமையகத்துக்குள் இருந்ததாக என்னிடம் நம்பிக்கையாகத் தெரிவித்தார்.
புனர்வாழ்வு அளித்து அவர்களை சமூகத்துடன் இணைப்பது எமது கடமை என்று பலமாக நம்புகிறேன்.” என்று பதிலளித்துள்ளார்.
Post a Comment