வசிம் தாஜூடின் கொலை, மகிந்தவின் சாரதியிடம் விசாரணை
ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை தொடர்பில் இராணுவ உயரதிகாரியான கப்டன் திஸ்ஸவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
புலனாய்வுப் பிரிவினர் கப்டன் திஸ்ஸ தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் பாதுகாப்புப் படைப் பிரிவிலும், மஹிந்தவின் சாரதியாகவும் கப்டன் திஸ்ஸ கடமையாற்றியுள்ளார்.
தாஜூடினின் வாகனம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது கப்டன் திஸ்ஸவிற்கு நிகரான ஒருவரை தாம் அவதானித்ததாக, சம்பவத்தின் வாக்கு மூலம் அளித்த சிலர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற போது தாஜூடினின் வாகனத்திற்கு அருகாமையில் இரண்டு டிபென்டர் ரக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், பொதுமக்கள் வாகனத்திற்கு அருகாமையில் நெருங்க அனுமதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாகனம் வெடித்துச் சிதறும் என்பதனால் அருகாமையில் செல்ல வேண்டாம் என பிரதேச மக்களுக்கு, டிபென்டர் ரக வாகனங்களில் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிருலப்பணை சந்தியில் கிடைக்கப்பெற்ற சீ.சீ.ரி.வி காட்சிகளில் தாஜூடினின் வாகனத்தை சில வாகனங்கள் பின்தொடர்ந்து செல்வது பதிவாகியுள்ளது.
பின்தொடரும் வாகனங்களை விட்டு விலகிச் செல்ல தாஜூடினின் வாகனம் முயற்சிப்பதனையும் அது தடுக்கப்படுவதும் சீ.சி.ரி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளன.
இந்தக் காட்சிகள் கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவினால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
கப்டன் திஸ்ஸ டிபென்டர் வாகனமொன்றில் சென்றிருக்கலாம் எனவும், இரண்டு வாரங்களில் சீ.சீ.ரி.வி. கமரா காட்சிகள் பற்றிய முழு விபரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பொலிஸ் தலைமையக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
Post a Comment