பச்சிளம் குழந்தைகளின் பகீர் மரணங்கள் - மர்மம் அதிர்ச்சிப் பின்னணி
‘மெல்பர்ன்’ என்றொரு ஈரானிய திரைப்படம்... ஈரானிலிருந்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு குடிபெயர இருக்கின்றனர் குழந்தையற்ற ஒரு தம்பதி. அவர்களிடம், சற்று நேரம் பார்த்துக் கொள்ளும் படி, பக்கத்து வீட்டுக் கைக்குழந்தையை ஒப்படைத்துச் செல்கிறாள் பணிப்பெண். இவர்களது பொறுப்பில் இருக்கும் அக்குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும்போதே திடீரென இறந்துவிடுகிறது. இதனால் பதற்றத்துக்கும் குற்ற உணர்ச்சிக்கும் ஆளாகும் அத்தம்பதி, அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே கதை.இத்திரைப்படத்தை மேற்கோள் காட்டியதற்கு முக்கியக் காரணம் இருக்கிறது. அக்குழந்தை ஏன் இறந்தது?
காரணம் தெரியாத இத்தகைய திடீர் மரணத்தை SIDS (sudden infant death syndrome) என்கின்றனர் மருத்துவர்கள். சிட்ஸ் எனும் பச்சிளம் குழந்தை திடீர் மரணம் ஏன் ஏற்படு கிறது? அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? குழந்தைகள் நல மருத்துவர் த.ஜெகதீஷ்வரனிடம் பேசினோம்...
‘‘அமெரிக்கா, இங்கி லாந்தில் 10 ஆயிரம் குழந்தைகளில் 2 குழந்தைகள் இந்த திடீர் மரணத்துக்கு ஆளாகின்றனர். 90களில் ஆயிரம் குழந்தைகளுக்கு 2 குழந்தைகள் இதற்குப் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவில் இது பற்றியான துல்லியமான கணக்கெடுப்பு நிகழ்த்தப்படவில்லை. ஒரு வயது வரை உள்ள குழந்தைகளையே நாம் பச்சிளம் குழந்தைகள் என்று குறிப்பிடுகிறோம்.
3-4 மாதங்கள் ஆன பச்சிளம் குழந்தைகளே இந்த திடீர் மரணத்துக்கு ஆளாகின்றனர். இவ்விஷயத்தில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் ஆசிய நாடுகளில் இந்த பச்சிளம் குழந்தை திடீர் மரணத்தின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.இந்த திடீர் மரணத்துக்கு மூன்று காரணங்கள் முக்கியமாகச் சொல்லப்படுகின்றன.
முதலாவது மரபணுக் கோளாறு. இரண்டாவது குழந்தைகள் தூங்கும் அறையில் புகைப் பிடித்தல். குளிர்பிரதேசங்களில் மூடிய அறையினுள்தான் புகைப் பிடிப்பார்கள். அந்தப் புகையிலிருக்கும் கார்பன் மோனாக்ஸைடு ஆக்சிஜன் ஓட்டத்தை தடைசெய்வதால் மூச்சுத்திணறி குழந்தை இறக்கக் கூடும். மூன்றாவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது. இந்த மூன்று காரணங்களில் எதனாலும் சிட்ஸ் ஏற்படலாம் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது.
ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவெனில் பச்சிளம் குழந்தை திடீர் மரணத்துக்கு மிக முக்கியக் காரணம் குழந்தைக்குக் கொடுக்கப்படுகிற பசும்பால்தான். 1994 நவம்பர் 5 அன்று வெளியான லான்செட் மருத்துவ இதழில் இது குறித்தான விரிவான கட்டுரை வெளியாகியிருக்கிறது. பசும்பாலில் கேசீன் (Casein), அல்புமின் (Albumin), க்ளோபுலின் (Globulin) ஆகிய முக்கியப் புரதங்களும், பல ஹார்மோன் புரதங்களும் இருக்கின்றன. உலகில் 50 சதவிகித மக்களுக்கு பசும்பால் புரத ஒவ்வாமை இருக்கிறது. தும்மல், ஆஸ்துமா, எக்ஸிமா உள்ளிட்ட சரும நோய்கள் போன்றவை இந்த ஒவ்வாமையால் ஏற்படுகிறது. மரபணுக்களால் ஏற்படுவதால் இதை மரபணுக் கோளாறு எனலாம்.
குழந்தையின் தூக்கத்தின்போது ஏற்படுகிற ஒவ்வாமையின் காரணமாகவும் திடீர் மரணத்துக்கு ஆளாகலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக பசும்பால்/பவுடர் பால் குடிக்கிற குழந்தைகளே இதில் சிக்குகின்றனர். காரணம் என்னவெனில், பசும்பாலில் உள்ள கேசீன் புரதத்திலிருந்து Caso morphine எனும் போதை தரக்கூடிய பொருள் வயிற்றில் உருவாகிறது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளைக் காட்டிலும் பசும்பால் குடிக்கிற குழந்தைகள் ஆழ்ந்த உறக்கத்துக்கு செல்லக் காரணம் இதுதான். ஆழ்ந்த உறக்கத்தில் ஒவ்வாமை ஏற்படும்போது கோழை சுரந்து மூச்சுப்பாதையை அடைத்துக் கொள்ளும். இதனால் மூச்சுத் திணறி குழந்தை இறந்து விடக்கூடும். தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தை ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்லாது. இந்த புரத ஒவ்வாமைக்கும் ஆளாகாது.
3-4 மாதங்கள் ஆன குழந்தைகளே இந்த திடீர் உயிரிழப்புக்கு ஆளாகிறார்கள். ஏன் என்றால் 3 வது மாதத்தில்தான் குழந்தைக்கு பசும்பால்/பவுடர் பால் கொடுக்க ஆரம்பித்திருப்பார்கள். பசும்பால் புரத ஒவ்வாமையின் காரணமாக 3 வது மாத இறுதியில் அல்லது நான்காவது மாதத்தில் சில குழந்தைகள் மரணத்தை சந்திக்கிறார்கள். உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் ஆசிய நாடுகளில் பெரும்பாலான குழந்தைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது. ஆகவேதான் இந்நாடுகளில் இந்த திடீர் மரணத்தின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
பசும்பால் மனிதனுக்கு ஆனதல்ல என்பதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வேறு பல பிரச்னைகளுக்கும் அடிகோலிடும் என்பதால், பசும்பாலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இரவு தூங்க வைக்கும் முன் பசும்பால் கொடுக்கவே கூடாது. குறைந்தது ஒரு வயது வரை அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும்படி காற்றோட்டமான இடத்தில் தூங்க வைக்க வேண்டும். வீட்டுக்குள் புகைப்பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதில் கவனத்துடன் செயல்படும்போது பச்சிளம் குழந்தை திடீர் மரணத்திலிருந்து நமது குழந்தையை காக்க முடியும்’’
என்கிறார் ஜெகதீஷ்வரன்.s
Dr... please explore the Al-Quran which is a blessing for the entire human being from the God. Allah apparently ordain about breastfeeding and its time-span in the Al-Quran for the benefits of the mortal.
ReplyDelete