Header Ads



தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் பொறுப்பும், கடமையும் காத்திருக்கின்றது

அல்ஹம்து லில்லாஹ்!
➡➡இனிமேல்தான் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் பொறுப்பும் கடமையும் காத்திருக்கின்றது
➡ஒரு பிரளயம் நடந்து முடியும் தருவாயில் இருக்கிறது
➡நான் இங்கே பிரளயம் என்று மழை வெள்ளத்தை குறிப்பிடவில்லை
“(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே....
(அல்குர்ஆன் : 31:18)
➡மனிதர்கள் மீது இரக்கம் காட்டுங்கள். அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.
- நபிகள் நாயகம் (ஸல்)
இந்த இரண்டு கட்டளைகளையும் நிறைவேற்றும் முகமாக ஒரு மனிதநேய பிரளயம் நடந்து முடிந்திருக்கிறது.
மிக சமீப காலத்தில் மாட்டுக்கறி பிரச்சனையில் சகிப்புத்தன்மைக்கு சவாலாக ஒரு உயிர் கொல்லப்பட்டதும்,
அதை தொடர்ந்து ஆமிர்கான் பந்தாடப்பட்டதும்,
இனி இந்தியாவில் மத சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் கேள்விக்குறிதான் என்ற நிலை ஏற்பட்ட போது நம் சொந்த நாட்டில் நாம் வாழ்வதற்கு நிறைய போராட வேண்டியிருக்கும் பல தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும் என்று சற்றே நமக்கு ஆயாசம் ஏற்பட்டது உண்மை.
உள்ளங்களை புரட்டக் கூடியவனாகிய அல்லாஹ் பத்தே நாட்களில் அத்தனையையும் புரட்டிப் போட்டு விட்டான்
பத்து நாட்களுக்கு முன்பு வரை இஸ்லாத்தை எத்தி வைக்க சகோதர சமுதாயத்திடம் நாம் சென்றபோது நம்மை குறித்து அவர்கள் கொண்ட எண்ணம் வேறாக இருந்திருக்கலாம்
பெரும்பாலோர் திருக்குர்ஆனை தீவிரவாதத்தின் கையேடு என்று நினைத்தார்கள்
அல்லாஹ்வுடைய தூதரைப் பற்றி நாம் சொன்னபோது அசுவாரஸ்யமாக கேட்டார்கள்
ஒரு வேளை இவர்கள் அப்படிப்பட்டவர்கள் தானோ என்று சில நல்லவர்களெல்லாம் கூட நினைக்க ஆரம்பித்திருந்த வேளையில் இன்றைக்கு அல்லாஹ் அது போன்ற எண்ணங்களை அடித்து நொறுக்கி விட்டான்.
ஆபத்திலிருந்தவனை எந்த மதம் என்று பார்க்கவில்லை,
எந்த ஜாதி என்று பார்க்கவில்லை,
ஏழையா பணக்காரனா என்று பார்க்கவில்லை,
தன் உயிரை துச்சமாக மதித்து காப்பாற்றினான்.
அசுத்தம் பார்க்காமல் குப்பையை மட்டுமல்ல மலத்தை கூட அள்ளினான்.
போதும் போதும் என்கிற அளவிற்கு பொருளாதாரத்தை அள்ளி கொண்டு வந்து கொட்டினான்.
சில பேர் மட்டுமே இதை செய்திருந்தால் இது செய்தியாகி இருக்காது. ஒரு சமுதாயமே வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் நின்றதால் உலகமே இன்றைக்கு திரும்பி பார்க்கிறது.
மனித இச்சைகள் மட்டும் இருந்திருந்தால் நிச்சயமாக இது சாத்தியமில்லை.
திருக்குர்ஆனின் கட்டளைகளும் இறைத்தூதரின் இனிய உபதேசங்களுமே இதற்கு காரணம் என்பதை இன்றைக்கு மக்கள் புரிந்துக் கொண்டு விட்டார்கள்.
மழை வெள்ளம் மனித நேயத்தை மட்டும் கொண்டு வரவில்லை. இனி மாமறையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வழியையும் இலகுவாக்கி கொண்டு வந்திருக்கிறது.
ஆம்...
எந்த தோற்றத்தில் தீவிரவாதியாக கண்டார்களோ அதே தோற்றத்தில் இப்போது திருக்குர்ஆனை கொண்டு செல்லுங்கள்.
முகம் மலர உங்களை வரவேற்பார்கள் பாருங்கள்
கொடுங்கள்... கொடுங்கள்... என்று ஆவலோடு வாங்கி வாசிப்பார்கள் பாருங்கள்...
ஆன்மீகத்தை கொண்டு ஒரு சமுதாயத்தையே மனித நேயர்களாக மாற்ற முடியுமென்றால் அந்த மாமனிதரின் வாழ்க்கையை நாங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டுவார்கள் பாருங்கள்.
ஆகவேதான் சொன்னோம்
இனிமேல்தான் நமக்கு மிகப் பெரும் பொறுப்பும் கடமையும் இருக்கிறது.
நம் மீதான மக்களின் பார்வை மாறியிருக்கிறது.
துன்பம் என்று வந்து விட்டால் தோள் கொடுப்பான்
மனித உயிர்களுக்கு மதிப்பளிப்பான்
நிவாரண களத்தில் ஆயிரம் வாய்ப்புகள் இருந்தும் ஒரு சிறு துரும்பை கூட அபகரிக்க நினைக்க மாட்டான்.
இவன் ஏற்றுக் கொண்ட மார்க்கம் தான் உண்மையில் இவனை மனிதநேயனாக மாற்றியிருக்கிறது என்று மக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
இனி இதை பொறுத்துக் கொள்ளாமல் தீவிரவாதிகளுக்கும் மேலாக நம்மை சித்தரித்து நம் மீது திட்டமிட்ட பழிபாவங்களை சுமத்த தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்
இப்போது மக்கள் நம் மீது வைத்திருக்கின்ற பார்வையில் இனி ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் அப்படியே அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும்தான் இனி நமக்கு இருக்கிறது.
இயக்க சண்டைகள் போட்டு இந் நன்மதிப்பை இனி நாம் நாசமாக்கி விடக் கூடாது.
சகோதர சமுதாயத்தின் பிணங்களை சுமந்த நாம் இனி நம் சொந்த சகோதரனின் இறந்த உடலின் இறைச்சியை திங்கலாமா?
பிற மத மக்களின் மையத்துகளை சுமந்த என் சகோதரனின் மையத்தை அடக்கம் செய்ய கபரஸ்தானில் இடம் தர மாட்டேன் என்று இனி யாராவது சொன்னால் அவனை விட மனித குல விரோதி யார் இருக்க முடியும்?
வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவனே...
நீங்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையிலிருந்து வந்தவர்கள்...
➡இன்னலுறும் மக்களுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவை...
என்ற சத்திய செய்தியை மக்களுக்கு சொல்லும் பாதையை மழை வெள்ளத்தின் மூலம் அல்லாஹ் விசாலமாக திறந்து வைத்து விட்டான்.
அற்பமான உலக வாழ்க்கையில் மனிதர்களுக்கு நாம் செய்த சேவை இறைநம்பிக்கையின் ஒரு பகுதி
➡இனி நிரந்தர மறுமை வாழ்க்கையில் நரக நெருப்பு குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதுதான் இந்த மக்களுக்கு நாம் செய்யும் உண்மையான சேவை.
இனி வாருங்கள்...
பல இயக்கங்கள் இருந்தால் என்ன? இருந்து விட்டு போகட்டும்
அதனால் பாதகம் ஒன்றும் இல்லை.
➡இறை திருப்தி சேவையில் இயக்கங்களை மறந்தது போல்...

➡ஓரிறைக் கொள்கை சத்திய பிரச்சாரத்தில் ஒரு புதிய களம் காண்போம் நாம்...
இன்ஷா அல்லாஹ்!!

1 comment:

Powered by Blogger.