Header Ads



வெள்ளத்தில் அடிபட்டு, மரத்தில் சிக்கியிருந்த சடலம் மீட்பு - திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்கான மத்தியஸ்த சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி சண்முகராஜா (வயது 55) வெள்ள நீருக்குள் இருந்து ஞாயிறு இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். 

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 

வழமையாக ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெறும் மத்தியஸ்த சபை செயற்பாடுகளில் கலந்து கொள்வதற்காக வெருகல்-மாவடிச்சேனையிலுள்ள அவரது வீட்டிலிருந்து மத்தியஸ்த சபை அமைந்துள்ள வெருகல் முகத்துவாரம் துவாரகா வித்தியாலத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் காலை எட்டு மணியளவில் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

எனினும், மாலையாகியும் அவர் வீடு வந்து சேராதது குறித்து உறவினர்கள் ஏனைய மத்தியஸ்த சபை உறுப்பினர்களிடம் விசாரித்துள்ளனர்.  இதன்பேது அவர் மத்தியஸ்த சபைக் கடமைக்கு சமுகளிக்கவில்லை என்ற விடயம் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. 

அதன் பின்னர் உறவினர்களும் ஏனைய மத்தியஸ்த சபை உறுப்பினர்களும் சேர்ந்து காணமல் போன விநாயகமூர்த்தி சண்முகராஜாவைத் தேட ஆரம்பித்துள்ளனர். 

அப்போது ஞாயிறு இரவு 10 மணியளவில் முத்துச் சேனைப் பாலத்தினருகே ஆழமான வெள்ள நீரில் அடிபட்டு அவரது சடலம் மரமொன்றில் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சக மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.