Header Ads



கதறினார் மொகமது ஆமீர், மனமிளகி மன்னித்த பாகிஸ்தான் வீரர்கள்

 பாகிஸ்தானுக்கு தான் ஆட தகுதியற்றவன் என்று மற்ற வீர்ர்கள் நினைத்தால் நான் அணியை விட்டு விலகுகிறேன் என்று பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீர் உருக்கமாகக் கூறியதையடுத்து அவருக்கு எதிர்ப்பு காட்டிய வீரர்கள் மனமிளகி அவரை ஏற்றுக் கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு களங்கம் கற்பித்தவர் என்ற வகையில் ஆமீர் மீண்டும் ஆட கடும் எதிர்ப்பு இருந்து வந்தது.

ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறைத் தண்டனையும், தடை உத்தரவையும் பெற்று கடந்து வந்துள்ள திறமை வாய்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீர் மீண்டும் பாகிஸ்தானுக்காக ஆடுவதை மொகமது ஹபீஸ், அசார் அலி ஆகியோர் கடுமையாக எதிர்த்து வந்தனர், அணிக்கு வெளியேயும் மாறுபட்ட கருத்துகள் நிலவி வந்தன.

இந்நிலையில் தலைமைப் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ், மற்றும் அணித்தேர்வுக் குழு தலைவர் ஹரூண் ரஷீத் ஆகியோர் வீரர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் மொகமது ஆமீரை பேச வைத்தனர்.

அதில், ‘பாகிஸ்தானுக்கு விளையாட நன் அருகதையற்றவன் என்றால் உடனே விலகி விடுகிறேன்’ என்று உருக்கமாக கூறினார் ஆமீர். மேலும் மனமுடைந்த நிலையில் கண்ணீர் முட்ட ஆமீர் அனைவரிடத்திலும் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்துக்கு ஆமீர் எதிர்பாளர்களான ஹபீஸும், அசார் அலியும் சற்றே தாமதமாக வந்தனர், ஆனால் அவர்களை முகத்துக்கு முகம் பார்த்த ஆமீர் அவர்களிடமும் மன்னித்து ஏற்குமாறு மன்றாடினார். இதில் மனமிளகிய ஹபீஸ், ஆமீரை அரவணைத்து மன்னித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாரித்துள்ள வீரர்கள் ஒப்பந்தத்தில், ஆமீர் அல்லது ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் தண்டனை அனுபவித்த வீரர்களுடன் விளையாட எந்த வீரரும் ஆட்சேபம் தெரிவிக்கக் கூடாது என்றும் அப்படி விளையாட மறுத்தால் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஒரு பிரிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதில் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. குற்றம்புரிந்த ஒருவன், எப்படியான சூழ்நிலையில் அதைப்புரிந்திருந்தான் என்பது அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வதிலே பெரும்பங்கை வகிக்கின்றது.

    ஆமிர் மிக இளம்வயதிலே தன்னுடைய அணித்தலைவரால் ஆசை காண்பிக்கப்பட்டு சூதாட்ட குற்றத்திற்கு துணைபோனவர். தவிர இன்னும் பல சாதனைகளை புரியக் காத்திருக்கும் திறமையான வீரர். அவரை புறக்கணிப்பதைவிட மன்னித்து ஏற்றுக்கொள்வதுதான் விவேகமானது.

    ReplyDelete

Powered by Blogger.