Header Ads



எல்லை மீள்நிர்ணயத்தில், முஸ்லிம் சமுகத்தின் அக்கறை

-றவூப் ஸெய்ன் -

இலங்கையில் நடைமுறையிலுள்ள அனைத்து வகைத் தேர்தல்களிலும் 1978 இன் அரசியலமைப்புப் பிரகாரமே நடாத்தப்படுகின்றது. 2010 இல் இலங்கையின் தேர்தல் முறைமையை மாற்றுவது குறித்த விவாதங்கள் மேற்கிளம்பின. மஹிந்தவின் ஆட்சியின்போது இன்றுள்ள மஹிந்தவாதிகள் நிலவும் தேர்தல் முறையை மாற்றியமைக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்தனர்.

1978 இல் ஜே.ஆர். இனால் அறிமுகம் செய்யப்பட்ட விகிதாசார தேர்தல் முறைமையில் சில பிரதி கூலங்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்திருந்த சில கூட்டுக் கட்சிகள் சுட்டிக் காட்டின.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன, ஜாதிக ஹெல உறுமய செயலாளர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்டோரே இவ்யோசனையை முன்வைத்தனர். அதன் நிமித்தம் மஹிந்த தினேஷ் குணவர்தன தலைமையில் தேர்தல் மீளாய்வுக் குழுவொன்றை நியமித்தார். அக்குழு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி புதிய தேர்தல் முறையொன்றைப் பரிந்துரை செய்தது.

2011 இல் இது குறித்து மிக விரிவான விவாதங்கள் நடந்தன. எனினும், மஹிந்தவின் தேர்தல் தோல்வியோடு தேர்தல் முறை சீர்திருத்தம் குறித்த விவாதங்களும் அமைதியடைந்தன.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற மைத்திரிபாலவின் நல்லாட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டமை நாம் அறிந்ததே. அவர்களில் அதி தீவிர மஹிந்த வாதிகளும் உள்ளடங்குகின்றனர்.

கட்சிக் கூட்டங்களில் தேர்தல் முறை சீர்திருத்தம் குறித்து அவர்கள் முன் வைத்த ஆலோசனைகளை ஜனாதிபதி மைத்திரிபால ஏற்றுக்கொண்டதனால் மீண்டும் தேர்தல் முறை மாற்றம் பற்றிய விவாதங்கள் அரங்கிற்கு வந்தன.

நடைமுறையிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை எந்தெந்த நியாயங்களின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற கேள்வி ​தௌிவற்றதாகவே உள்ளது. அதற்குரிய வலுவான காரணங்கள் இதுவரை முன்வைக்கப்படவில்லை. விருப்பு வாக்குகள் விவகாரம் மாத்திரமே இது குறித்த விவாதங்களில் முக்கியத்துவம் பெற்றது. இனங்களுக்கிடையிலான அமைதி, சமத்துவம், அடிப்படை உரிமைகளைப் பேணல் தொடர்பில் மறுசீரமைப்பு எவ்வகையான அனுகூலங்களைக் கொண்டு வரும் என்பதும் பேசுபொருளாகவில்லை. ஜே.ஆர். இனால் கொண்டு வரப்பட்ட முறைமை ஐ.தே.க.வின் அதிகாரத்தைத் தக்கவைக்கும் வகை யிலான ஒரு பொறிமுறை என்றே ஐ.ம. சு.மு கருதியது. அதன் விளைவாகவே மறுசீரமைப்பை அது பரிந்துரைத்தது.

இருக்கும் முறைமை சிறுபான்மை சமூகங்களுக்கு அபரிமிதமான உரிமைகளை வழங்குவதாகவும், அது சிங்கள சமூகத்திலுள்ள சிறு கட்சிகளின் அரசியல் களத்திற்கு பிரதிகூலமாக அமைவ தாகவும் பாட்டாளி சம்பிக்க ரணவக்க பலமுறை பகிரங்கமாகச் சுட்டிக் காட்டியிருந்தமை நினைவுகூரத்தக்கது.

சுதந்திரத்திற்குப் பின்னர் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் உரிமைகளை தந்திரமான வழிமுறைகளைக் கையாண்டு அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த கட்சிகள் பல்வேறு மூலோபாயங்களைப் பயன்படுத்தி வந்தன. குறிப்பிட்ட கட்சியின் அதிகாரத்தை நீடிக்கச் செய்வதும், சிறு பான்மைக்கு ஏதோ ஒருவகையில் அநியாயம் இழைப்பதுமே அதன் சாரம்சமாக இருந்துள்ளது.

தற்போது பேசப்படுகின்ற உள்ளூராட்சித் தேர்தல் மறுசீரமைப்பு, அதற்குரிய எல்லை மீள்நிர்ணயம் குறித்தும் இந்தக் கண்ணோட்டத்தில் நாம் நோக்கலாம். ஏற்கனவே அமுலில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் காலம் நிறைவுற்று, அவை மாகாண சபை செயலாளர்களின் கீழ் தொடர்ந்தும் இயங்கி வருகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை மிகக் கிட்டிய எதிர்காலத்தில் நடத்தி முடிக்க வேண்டிய அவசரம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 2016 மார்ச் மாதம் இதற்கான தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

ஆனால் அது தற்போது நடைமுறை யிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடைபெறுமா அல்லது உத்தேச மறுசீரமைப்பு நடைமுறையின் கீழ் நடைபெறுமா என்பது மக்களை குடைந்துகொண்டிருக்கும் கேள்வியாகும்.

தற்போது இலங்கையில் 335 உள்ளூராட்சி சபைகள் இயங்குகின்றன. அதில் 23 மாநகர சபைகளும் 41 நகர சபைகளும் 271 பிரதேச சபைகளும் அடங்கும். மைத்திரி அரசாங்கம் உத்தேசித்துள்ள புதிய உள்ளூராட்சித் தேர்தல் முறைமையினை அறிமுகப் படுத்தும் நோக்கில் தற்போதுள்ள பிரதேசங்களை மீள்நிர்ணயம் செய்யும் குழுவொன்றை நியமித்தது.

மாவட்ட செயலாளர், மாகாண ஆளுநர், புள்ளிவிபரவியல் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட தேர்தல் ஆணையாளர் ஆகியோரை உள்ளடக்கிய இந்தக் குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமது அறிக்கையை உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சிடம் ஒப்படைத்தது. மாவட்ட மட்டத்திலான வட்டார மீள்நிர்ணயக் குழு பரிந்துரை செய்த எல்லைகள் தேசிய மட்டத்தில் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

மாவட்ட ரீதியான ஆணைக்குழுவின் எல்லை நிர்ணயம் பல தரப்பினருக்கும் அநீதி இழைப்பதாக சுட்டிக்காட்டப் பட்டதை அடுத்தே தற்போது மீளாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டு, மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கோரப்பட்டன. இதுவரை 400 முறைப்பாடுகள் இக்குழுவிற்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

உள்ளூராட்சிமன்ற வட்டாரங்களின் எல்லைப் பிரிப்புக் குறித்து முறையீடு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை ஜனவரி 15 இல் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சிடம் கையளிக்கவுள்ளது.

டிசம்பர் 04 ஆம் திகதியிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளைப் பரிசீலனை செய்து வருவதாக இக்குழு தெரிவித்துள்ளது. புதிய தேர்தல் மறுசீரமைப்புக்கான எல்லை நிர்ணயம் மூன்று அம்சங்களைக் கருத்திற் கொண்டுள்ளது என அமைச்சு கூறுகின்றது.

குறித்த உள்ளூராட்சி நிர்வாக எல்லைகளில் வசிக்கும் இன, சனத் தொகையை அடிப்படையாகக் கொண்டு பிரதிநிதிகளை உறுதி செய்தல்.

குறித்த பிரதேசத்தின் பௌதிக காரணிகளைக் கருத்திற் கொள்ளல்.

பொருளாதார அபிவிருத்தியை கணக்கிற் கொள்ளல்.

இம்மூன்று அடிப்படையிலுமே எல்லை மீள்நிர்ணயம் நடைபெற்றுள்ள போதும், அது சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு சாதகமாய் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சிறுபான்மைச் சமூகங்கள் ஏற்கும் விதத்தில் எல்லை நிர்ணயம் அமையவில்லை என சிறுபான்மைக் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் புதிய எல்லை மீள் நிர்ணயம் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் என எச்சரிக்கப்படுகின்றது. பெரும்பான்மை யினர் முஸ்லிம்களின் வாக்குகளால் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொண்டு, சிறுபான்மையினரை ஓரங்கட்டுவதற்கு இம்மீள்நிர்ணயம் உதவுவதாக விமர்சிக்கப்படுகின்றது.

இலங்கையின் அனைத்து உள்ளூராட்சி சபைகளும் 4838 வலயங்களாகப் பிரிக்கப்படவுள்ளன. அதில் 4583 வலயங்களிலிருந்து ஒரு பிரதிநிதி என்ற வகையிலும் 241 வலயங்களிலிருந்து 2 பிரதிநிதிகள் என்ற வகையிலும் 9 வலயங்களிலிருந்து 3 பிரதிநிதிகள் என்ற வகையிலும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மொத்தமாக 592 உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவு செய்யப்படுவர்.

மஹிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தேர்தல் காலங்களில் எதிர்கொண்ட பின்னடைவுகளை முன்னிறுத்தியே இச்சீர்திருத்தம் முன்வைக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

No comments

Powered by Blogger.