குழந்தைகளின் உடலில், முடி வளர்வது பாதிப்பானதா..?
பிறந்த குழந்தைகளின் தலையைத் தவிர்த்து பிற இடங்களில் வளரும் முடியால் அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கக்கூடும். இதற்கு முக்கிய காரணம் தாயின் உடல்நிலையே’’ என்கிறார் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பி மருத்துவர் ராம்குமார்.
‘‘தாயின் வயிற்றில் உள்ள சிசுவினுடைய உடலின் தட்பவெப்ப நிலையைப் பராமரிப்பதற்காக, இயல்பாகவே அதன் உடலில் ஆங்காங்கே முடி அதிகமாகக் காணப்படும். இந்த முடிக்கு Lanugo Hair என்று பெயர். தாயின் வயிற்றில் குழந்தை இதமான சூட்டில் இருக்கும்போது, அதன் சருமத்தைப் பாதுகாக்க Lanugo Hair தேவைப்படுகிறது. இவ்வகை முடி மென்மையாக இருக்கும். குழந்தை பிறந்த பிறகு, காதுகள், முதுகு, முன் நெற்றி ஆகிய இடங்களில் முடி இருக்கும்.
சில குழந்தைகளுக்கு மரபணு காரணமாகவும் முடி வளரும். நிறை மாதத்தில் குழந்தை பிறக்கும்போது இம்முடி தானாகவே உதிர்ந்துவிடும். குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு உடலில் உள்ள முடிகள் உதிர்வதற்கு நாள் பிடிக்கும். தாயின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தாலும், குடும்பத்தில் பாட்டி, தாத்தா என பரம்பரையாக யாருக்கேனும் உடலில் முடி அதிகமாக இருந்தாலும் பிறக்கும் குழந்தையின் உடலில் முடி இருக்கும்.
தாயின் POS (Polycystic Ovary Syndrome) பிரச்னையும், தாயின் ரத்தத்தில் காணப்படுகின்ற ஆண்ட்ரோஜென்ஸ் (Androgens) குழந்தைக்குப் பரவுவதாலும் அதன் உடலில் முடி வளா்கிறது. சில குழந்தைகளின் உடலில் முடி வளர்வதற்கு காரணமாக உள்ள ஆண்ட்ரோஜென் அதிக அளவில் உற்பத்தியாவதற்கு, CAH என்று சொல்லப்படும் Congenital Adrenal Hyperplasia மரபணு காரணமாகிறது. இந்த நிலையில், குழந்தையின் உடலில் Cortisol ஹார்மோன் குறைவாகவும், ஆண்ட்ரோ ஜென் ஹார்மோன் அதிகமாகவும் உற்பத்தியாகும்.
Cortisol ஹார்மோன் அளவு குறைவதால், குழந்தையின் உடலில் உப்பின் அளவு குறைந்து, குறை ரத்த அழுத்தம் ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே இதற்கான சிகிச்சையை குழந்தைகளுக்கு கொடுக்காவிடில் Adrenal Gland பெரிதாக மாறிவிடும். பிறப்புறுப்பில் காணப்படும் முடிக்கு (Pubic Hair Infancy) ஹார்மோன் சிறப்பு மருத்துவர்கள் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பரிசோதிப்பார்கள். பரிசோதனையில் காரணம் கண்டறிய முடியாவிட்டால் அதை Idiopathic என அழைப்பார்கள். அதற்கு சிகிச்சை தேவையில்லை. எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஒரு வருடத்தில் படிப்படியாக இந்த முடி உதிர்ந்துவிடும்.
இப்போது அனைத்து மருத்துவமனைகளிலும் New Born Screening Programme செய்யப்படுகிறது. அதாவது, குழந்தையின் குதிகால் பகுதியில் ரத்தம் சிறிது எடுக்கப்பட்டு 5 மரபணு நோய்கள் பரிசோதனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, குழந்தைகளுக்கு CAH, தைராய்டு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பல பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிகிறது’’ என்கிறார் ராம்குமார்.
Post a Comment