அமெரிக்காவின் விமான தாங்கிக் கப்பலுக்கு அருகில், ஈரான் ரொக்கெட் குண்டுத் தாக்குதல்
வளைகுடாவுக்குள் நுழையும் அமெரிக்க விமான தாங்கிக் கப்பல் மற்றும் ஏனைய போர் கப்பல்களுக்கு அருகால் ஈரான் புராட்சிப் படை ஒரு சுருக்கமான முன்னறிவிப்புக்கு பின்னர் ரொக்கெட் குண்டுகளை ஏவியுள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் “ஆத்திரமூட்டும்’ செயல் என்று அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த ஈரானிய படையினர் அனுப்பிய குண்டு அமெரிக்க விமான தாங்கிக் கப்பலுக்கு சுமார் 1,500 மீற்றர்கள் அருகால் விழுந்ததாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி என்.பி.சி. தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த ரொக்கெட்டுகள் அமெரிக்க கப்பல் மற்றும் ஏனைய கப்பல்கள் மீது எறியப்படவில்லை. ஆனால் அவைகளுக்கு அருகில் விழுந்தன என்று அந்த செய்து குறிப்பிட்டது.
வெறும் 23 நிமிடங்களுக்கு முன்னதாக ஒரு முன்கூட்டிய அறிவிப்பிற்கு பின்னர் பல புரட்சிப் படை கப்பல்களில் இருந்து நெருங்கிய தூரத்தில் ரொக்கெட்டுகள் எறியப்பட்டன என்று அமெரிக்க கடற்படை கட்டளை தளபதி கைல் ரைன்ஸ் குறிப்பிட்டுள்ளார். முக்கியமான சர்வதேச வர்த்தக கடற்பாதையின் பாதுகாப்பில் ஈரானின் பொறுப்பு குறித்து பெரும் கேள்வி எழுகிறது. இந்த நடவடிக்கை பாதுகாப்பற்ற, முறையற்ற, ஆத்திரமூட்டு செயல் என்றும் ரைன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஹரி எஸ் ட்ரூமன் என்ற அமெரிக்க விமானதாங்கிக் கப்பல் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு எதிராக வான் தாக்குதல்களுக்கு உதவியாக மேலும் இரு போர் கப்பல்களுடன் ஹோர்முஸ் நீரிணை ஊடாக வளைகுடாவிற்குள் நுழையும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரொக்கெட் ஏவப்படும்போது அங்கு அமெரிக்காவின் பக்லி போர் கப்பலும் பிரான்ஸின் யுத்த கப்பல் ஒன்றும் இருந்திருப்பதாக என்.பி.சி. செய்தி குறிப்பிடுகிறது.
வளைகுடா பகுதியில் ஈரான் மற்றும் அமெரிக்க படை கடந்த காலங்களில் பல தடவைகள் மோதலில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக 1980களில் ஈரான்-ஈராக் யுத்தத்தின்போதும், 1973 இஸ்லாமிய புரட்சி காலத்திலும் மோதல்கள் தீவிரமடைந்திருந்தன.
எனினும் கடந்த ஜுலையில் ஈரான் அணுசக்தி விவகாரத்தில் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட உடன்பாட்டை அடுத்து இரு தரப்புக்கும் இடையில் சற்று சுமுக சூழல் ஏற்பட்டுள்ளது.
Post a Comment