இலங்கை பெண்ணுக்கு மரண தண்டனை, நேற்று பாராளுமன்றத்தில் எதிரொலித்த விடயங்கள்..!
சவூதியில் கல்லெறிந்து மரணதண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணைக் காப்பாற்றுவதற்கான அதிகூடிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதி அமைச்சர் மற்றும் கூட்டம், ஒழுங்கு அமைச்சர் மீதான குழுநிலை விtவாதத்தில் உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கூற்று தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,
சவூதியில் கல்லால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றுமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணுக்கு இதுவரை (வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி) அந்தத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அந்தப் பெண்ணைப் பாதுகாப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு என்ற வகையில் நானும் அதிகூடிய முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இராஜதந்திர உயர்மட்ட முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன என்றார்.
இப்படித்தான் ரிஸானா விடயத்தில் சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி. இந்தச் சபையில் கூறித்தான் அப்போதைய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு ரிஸானாவின் கழுத்து வெட்டப்பட்டமை தெரியவந்தது என நலிந்த ஜயதிஸ்ஸ கூறியபோது,
இல்லை இல்லை அது அந்த அரசு. எமது அரசு அப்படியல்ல. அதனைவிட அந்த நாடு இவ்வாறான தண்டனைகள் தொடர்பில் எமக்கு அறிவூட்டுவதில்லை என்று அமைச்சர் தலதா அதுகோரள பதிலளித்தார்.
Post a Comment