அதிவேகமாகி விட்ட வாழ்க்கைச் சூழலில், வயிறு கலங்க வைக்கும் வயிற்றுப் பிரச்னைகள்!
அதிவேகமாகி விட்ட வாழ்க்கைச் சூழலில் சரியாக சாப்பிடவோ, தூங்கவோ யாருக்கும் நேரமில்லை. துரித உணவுகள், ஜங்க் உணவுகள் என கண்டவற்றையும் சாப்பிட்டு வயிற்றை குப்பைக் கூடையாக மாற்றிக் கொள்பவர்கள் அனேகம். இதனால் வயதானவர்களை தாக்கும் குடல், இரைப்பை, உணவுக்குழாய் பிரச்னைகள் எல்லாம், இப்போது 20 வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு? குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சி.சுகுமார் பேசுகிறார்.
இன்றைய மோசமான உணவுமுறைகளால் வயிறு சார்ந்து நிறைய பிரச்னைகள் வருகின்றன. குறிப்பாக GERD, இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய 4 பிரச்னைகளே அதிகம்.
GERD(Gastroesophageal reflux disease)
‘எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்துட்டேன். ஆனாலும், நெஞ்சு எரிச்சலும் வாயுப்பிடிப்பும் இருக்கு’ என்பார்கள். இது கேஸ்ட்ரோ ஈசோபாகல் ரெஃப்ளெக்ஸ் டிசீஸ் பிரச்னையின் அடையாளமே. இதில் உமிழ்நீரானது அதிக அளவு சுரந்து மேலேறி, உணவுக்குழாயின் அடிப்பகுதியை புண்ணாக்கி விடும். இதனால் நெஞ்சு அடைப்பதுபோல இருக்கும். முதுகைப் பிடிக்கும்... வலி இருக்கும். ‘உணர்வில்லாமல் இருக்கிறது’ என்பார்கள்.
முதுகை அழுத்திப் பிடித்தால் சிலருக்கு ஏப்பம் வரும். இந்தப் பிரச்னையால் உணவுக்குழாயும் உணவுப்பையும் சேரும் இடத்தில் ஸ்பின்டர் (Sphincter) என்ற தசை தளர்வடைந்துவிடும். இந்த தசை தளர்வடைந்தால் உமிழ்நீர் எளிதாக மேலேறி நெஞ்சுப் பகுதியில் அடைப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். நெஞ்சுப் பகுதியில் அடைப்பதால் இதை இதய நோய் என பலர் நினைத்து, அதற்கான பரிசோதனைகள் செய்வார்கள்.
மன அழுத்தம் அதிகமுள்ள வேலை முறை, சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் இருப்பது, காரமான, கொழுப்பான உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, பொரித்த உணவுகள், சீஸ் அதிகமுள்ள ஜங்க் உணவுகள் சாப்பிடுவது, போதிய உடல் உழைப்பும் உடற் பயிற்சியும் இல்லாமல் இருப்பது, மது, புகைப்பழக்கம், கோலா வகை பானங்கள் அதிகம் அருந்துவது போன்றவையே இந்தப் பிரச்னைக்கான முக்கியக் காரணிகள்.
கொழுப்புள்ள, காரமான உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துதல், வாயு அதிகமுள்ள குளிர்பானங்களை தவிர்ப்பதும் முக்கியம். நார்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள், அவித்த மீன் ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். பிராணாயாமம் போன்ற மூச்சுப்பயிற்சிகளை தினமும் 15 நிமிடம் செய்து வர வேண்டும். இதனால் ஸ்பின்டர் தசை வலுவாகும். தளர்வடையும் வாய்ப்பும் குறையும்.
காலையில் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை முக்கால் மணி நேரமாவது மேற்கொள்ள வேண்டும். இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டு சரியானவர்கள் இடது புறம் சாய்ந்து படுத்து உறங்குவது நல்லது. ஸ்பின்டர் தசை தளர்வடைந்து இருந்தால் லேப்ராஸ்கோபி முறையில் சிறிய அறுவை சிகிச்சை செய்து இறுக்கமாக்கி விடலாம்.
இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்
இன்றைய பணியிடங்களில் ஏற்படும் மன அழுத்தத்தின் விளைவாக அதிகம் பேருக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. சாப்பிட்டவுடன் மலம் கழிக்கத் தோன்றும். மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறி மாறி இருக்கும். இவர்கள் ஒழுங்கான நேரத்துக்கு சாப்பிட மாட்டார்கள். காலை உணவை மதியம்தான் சாப்பிடுவார்கள். இரவிலோ புரோட்டா, சிக்கன் என கலந்து அடிப்பார்கள். காலையில் போய் உட்கார்ந்தால் மலம் வராது அல்லது வயிற்றுப்போக்காக போகும். இப்படி பாதிக்கப்படுபவர்களின் உணவுப் பழக்கத்தை மாற்றச் சொல்வோம்.
செரிமானத்துக்கு மாத்திரைகள், பவுடர்கள் கொடுத்து சரிசெய்து விடுவோம். வயிற்றுப்போக்கைக் குறைக்க மருந்துகள் கொடுப்போம். தயிரில் காய்கறிகளை வெட்டிப்போட்டு சாப்பிடலாம். தயிரில் இயற்கையாகவே Probiotics உள்ளது. செரிமானமாக்கும் தன்மையை பெருங்குடலில் இந்த ப்ரோபயோடிக்ஸ் அதிகப்படுத்தும். நேரத்துக்குச் சாப்பிடவும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறையையும் ஏற்படுத்திக் கொண்டால் இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோமில் இருந்து தப்பிக்கலாம்.
மலச்சிக்கல்
துரித உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கும் நார்ச்சத்து இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். மலம் உருவாக போதிய அளவு நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் தேவை. அப்படி இல்லாத போது மலம் இறுகி கெட்டியாகி மலப்புழையை அடைத்துக் கொள்ளும். இதனைத் தவிர்க்க நாட்டு வாழைப்பழம், கேரட், வெள்ளரிப் பிஞ்சு, முள்ளங்கி, பீட்ரூட் ஆகியவற்றை பச்சையாக சாலட் மாதிரி சாப்பிட்டு வந்தால் போதிய அளவு நார்ச்சத்து கிடைத்து மலத்தை இளக்கி எளிதாக வெளியேற்றி விடும்.
அசைவ உணவுகள் சாப்பிடுவதையும் குறைத்துக் கொள்வதும் நல்லது. பாலீஷ் செய்யப்படாத அரிசியில் நார்ச்சத்து அதிகமுண்டு. அதில் சாதம் சமைத்து சாப்பிடலாம். மலச்சிக்கல் அதிகமுள்ளவர்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்ற பிறகே அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தாங்களாகவே மருந்துக் கடைக்கு சென்று மருந்து வாங்கிச் சாப்பிடுவது தீய விளைவுகளையே தரும்.
வயிற்றுப்போக்கு
பிளாட்பார கடைகளில் சரியாக சமைக்காத அசைவ உணவுகளை ஒரு வெட்டு வெட்டுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு எளிதாக வருகிறது. சரியாக சுத்தப்படுத்தப்படாத உணவுகளின் மூலம் பரவும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள்தான் வயிற்றுப்போக்குக்கு காரணமாகின்றன. அதிக காரம், சோடியம் மோனோ குளுட்டமேட் கலந்த துரித உணவுகள், சரியாக பதப்படுத்தப்படாத இறைச்சி வகைகளும் வயிற்றுப்போக்கை அதிகமாக்கும். உடலில் நீர்ச்சத்து குறைவதால் சோர்வு அதிகமாக இருக்கும். வயிறு உப்பி வீங்கிக் கொண்டு வலிக்கும். கை, கால் மூட்டுகளில் வலி இருக்கும்.
சுய மருத்துவம் செய்யாமல் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் மருத்துவரை பார்த்து தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சக்தி இழக்காமல் இருக்க உப்பு- சர்க்கரை கரைசலை அவ்வப்போது குடிக்கலாம். வாந்தி, மயக்கம் இருந்தால் மருத்துவமனையில் ஐ.வி. டிரிப் மூலம் குளுக்கோஸ் ஏற்றி உடல் நிலையை சரி செய்வார்கள். வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வந்தாலே வயிற்றுப் பிரச்னை உங்களை அணுகாது!
Post a Comment