Header Ads



மகிந்தவின் பாதுகாப்பை குறைக்குமாறு, மைத்திரி அதிரடி உத்தரவு

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த- 500 இராணுவத்தினரைக் கொண்ட அணியினரை- உடனடியாக விலகிக் கொள்ளுமாறு  மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த அறிக்கையை அடுத்து, மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக 130 காவல்துறை அதிகாரிகள் தவிர, 500 இராணுவத்தினரும் பணியாற்றுவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு அனுமதியளிப்பதற்கான ஆவணம் காவல்துறை தலைமையகத்துக்கு வந்ததையடுத்தே, இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

எனினும், இராணுவத் தலைமையகத்திடமோ, பாதுகாப்பு அமைச்சிடமோ, படையினர் ஒதுக்கப்பட்டது குறித்த எந்த முறையான ஆவணங்களும் இல்லை என்று அரசாங்க தகவல் ஒன்று கூறுகிறது.

முன்னதாக,முன்னாள் அதிபருக்கான அரசாங்கம் எவ்வளவு நிதியை செலவிடுகிறது என்பது பற்றிய அறிக்கை ஒன்றை அமைச்சரவையிடம் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமையவே ரவி கருணாநாயக்க இந்த அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.

இதையடுத்து, மற்றொரு முன்னாள் அதிபரான சந்திரிகாவுக்கு வழங்குவதற்கு இணையான பாதுகாப்பு மற்றும் சலுகைகளையே மகிந்தவுக்கும் வழங்குமாறு சிறிலங்கா அதிபர் பணித்துள்ளார்.

No comments

Powered by Blogger.