அளவு தாண்டினால், ஆபத்து ஆரம்பம்...!
பருமன் அறுவை சிகிச்சை மருத்துவரான ராஜ்குமார் பழனியப்பன் சமீபத்திய கொலஸ்ட்ரால் ஆய்வு கருத்துகளில் இருந்து மாறுபடுகிறார்.‘‘நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் போன்ற Major nutrients, வைட்டமின், தாதுக்கள் போன்ற Minor nutrients என 2 வகைகள் இருக்கிறது. இவை இரண்டும் இருந்தால்தான் நமக்குச் சக்தி கிடைக்கும். உணவில் இருந்து கிடைக்கும் தேவைக்கு அதிக சக்தியே கொழுப்பாகத் தங்கிவிடுகிறது.
அதுவே, ரத்த ஓட்டத்தில் கலந்து ஓடும்போது கொலஸ்ட்ரால் என்கிறோம். ரத்த ஓட்டத்தில் கலப்பது நல்ல கொலஸ்ட்ராலாக இருந்தால் மற்ற உறுப்புகளுக்கு சக்தி கிடைக்கும். கெட்ட கொலஸ்ட்ரால் கலந்தால் ரத்த நாளத்தில் அடைத்துக்கொண்டு இதய நோய்கள் உள்பட பல நோய்களையும் உண்டாக்கும். பொதுவாகவே, பலவற்றுக்கும் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசும் பழக்கம் நமக்கு இருக்கிறது. இது தவறான ஒப்பீடு. கொழுப்புச்சத்தை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் இந்தியர் உடலுக்கு இயல்பிலேயே அதிகம். இதய நோய்கள் வருவதற்கும், நீரிழிவு வருவதற்கும் எளிதான காரணமாக கொலஸ்ட்ராலே இருக்கிறது.
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கொழுப்புச்சத்தை கிரகிக்கும் தன்மை குறைவு. அவர்கள் நிறைய சாப்பிட்டாலும் அதற்கேற்ற உடல் சார்ந்த செயல்பாடுகள் இருக்கும். நாமோ விளையாடவோ உடல் செயல்பாடுகளுக்கோ இடம் தருவதே இல்லை. இந்த நேரத்தில் கொலஸ்ட்ராலால் ஆபத்து இல்லை என்று நினைத்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்திருந்தால் நிச்சயம் ஆபத்து தான். கொழுப்பை அளவோடு சாப்பிட்டு, அதற்கேற்றார்போல உடல் உழைப்பு இருந்தால் மட்டுமே பிரச்னை இல்லை.
ஆய்வில் குறிப்பிட்டபடி, அதிக சர்க்கரையும் கார்போஹைட்ரேட் உணவுகளும் ரத்த நாளங்களில் அடைத்துக்கொண்டு இதய நோயை உண்டாக்குகிறவைதான். கொலஸ்ட்ராலை மட்டுமே மேலோட்டமாகக் குறை சொல்லாமல் கெட்ட கொலஸ்ட்ரால் வரும் வழிகளைத் தடை செய்துவிட்டால் பிரச்னை இல்லை என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். சமோசா, பானி பூரி, போண்டா, பஜ்ஜி, பகோடா போன்ற நொறுக்குத் தீனிகள் போன்ற தவறான நடவடிக்கைகளால்தான் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்கிறது.
இரவு உணவை 8 மணிக்கு முன்பே சாப்பிட்டுவிட வேண்டும். அதன்பிறகு, ஓய்வுக்கு உடல் தயாராக இருப்பதால் உணவை செரிக்கும் நிலையில் (Metabolism) இருக்காது. ஆனால், இங்கு 10 மணிக்கு சாப்பிடுகிறவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் மதுப்பழக்கம் உள்ளவர்களின் நிலை இன்னும் மோசம். ஏற்கனவே மதுவில் அதிக கலோரி, அதனுடன் சைட் டிஷ்கள், அதன் பிறகு சாப்பாடு, உடனே தூக்கம் என்று இருக்கும் ஒருவருக்குக் கெட்ட கொலஸ்ட்ரால் எந்த அளவு சேரும்?இன்றைய வாழ்க்கை முறையில் மன அழுத்தமும் கெட்ட கொலஸ்ட்ராலை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மன அழுத்தத்தால் கண்ட நேரங்களில் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, செரிமானக் குறைபாடுகள் போன்ற பல காரணங்களால் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்கிறது. இயற்கையாகக் கிடைக்கும் தாவர உணவுகளில் ஆபத்தான கொலஸ்ட்ரால் இல்லை. மிருகங்களில் இருந்து பெறப்படும் கொழுப்புகள், எண்ணெயை சூடு பண்ணி சமையல் செய்வது போன்ற காரணங்களில்தான் கெட்ட கொலஸ்ட்ரால் உருவாகிறது. மிகவும் அதிகமான கொதிநிலையில் எண்ணெயை சூடு செய்யும்போது பாலி ஹைட்ரோ கார்பன் என்ற வேதிப்பொருள் உருவாகும். இது புற்றுநோயை உண்டாக்கும்.
அதனால் எண்ணெயில் பொரித்து சாப்பிடும் ஆபத்தைத் தவிர்த்து, முடிந்தவரை தண்ணீரில் சமைத்து சாப்பிடுவதே பாதுகாப்பானது. அதற்காக, ‘சைஸ் ஸீரோ’ என்கிற அளவுக்கு கொழுப்புச் சத்தே இல்லாமல் இருப்பதும் ஆபத்து. இன்று பாலியல் தொடர்பான பல குறைபாடுகளுக்கு தேவையான கொழுப்புச்சத்து உடலில் இல்லாததும் காரணமாக இருப்பதைப் பார்க்கிறோம். 200 mg/dl என்ற சராசரி அளவைப் பராமரிக்க வேண்டும். அறிவியல் ஆய்வுகள் மாறிக் கொண்டே இருப்பவை. இதன் அடுத்த கட்டம் என்ன என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்!’’
Post a Comment