Header Ads



ரணில் – மைத்திரி அரசின் இந்தியாவுடனான தேனிலவு முடிகிறதா..?

உபுல் ஜோசப் பெர்னான்டோ + நித்தியபாரதி-

பலாலி விமானப்படைத் தளத்தின் மீள்கட்டுமான ஒப்பந்தத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்திற்கு இந்தியா ஆசி வழங்கியதன் அடிப்படை நோக்காகும். பாரதீய ஜனதா கட்சியின் ஆசியுடன்,  சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தைத் தோற்கடித்து 2001ல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. ஐ.தே.க எவ்வாறு சிறிலங்காவின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது என்பதில் எவ்வித இரகசியமும் இல்லை.

இதேபோன்று, சில ஆண்டுகளின் பின்னர், கொழும்பிலுள்ள இந்திய உயர் ஆணையாளர் அலுவலகத்தின் உதவியுடன்,  ரணில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக ஐ.தே.க அரசாங்கத்தின் முக்கிய மூன்று அமைச்சுப் பொறுப்புக்களை சந்திரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள்  கொண்டு வந்தார்  என்பதும் வெளிப்படையான இரகசியமாகும்.

பலாலி விமானப்படைத் தளத்தின் மீள்கட்டுமான ஒப்பந்தத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்திற்கு இந்தியா ஆசி வழங்கியதன் அடிப்படை நோக்காகும். அப்போதைய பாதுகாப்புச் செயலர் ஒஸ்ரின் பெர்னாண்டோவால் எழுதப்பட்ட ‘My Belly is White’ என்ற நூலில் இந்த விடயம் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் காணப்படும் கீழே தரப்பட்டுள்ள பந்தியானது இந்தியாவின் தலையீட்டின் பின்னணியைத் தெளிவாக விளக்குகிறது.

‘மிலிந்த மொறகொடவின் தலையீட்டுடனோ அல்லது அது அன்றியோ  சந்திரிகா குமாரதுங்க பாதுகாப்பு அமைச்சை சட்டரீதியாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். இதனால் 2003 நவம்பர் 03ம் திகதியிலிருந்து உடனடியாக எனது பாதுகாப்புச் செயலர் பதவி பறிக்கப்பட்டது. சந்திரிக்காவால் ரணிலிடமிருந்து பாதுகாப்பு அமைச்சுப் பறிக்கப்படுவதற்கு இந்தியா தலையீட்டைச் செய்திருக்குமா என நான் இங்கு கூறவில்லை. ஆனால் இந்தியாவின் இத்தலையீடானது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் இந்தியாவின் உதவியுடன் பலாலி விமானத் தள மீள்புனரமைப்பு மேற்கொள்ளப்படுவதற்குக் காரணமாக அமைந்தது’

2004ல் தனது பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க பறிகொடுத்ததன் பின்னர் தற்போது தான் அதாவது மைத்திரிபால சிறிசேன அதிபர் தேர்தலில் வென்ற பின்னரே மீண்டும் ரணில் சிறிலங்காவின் பிரதமராக முடிந்துள்ளது. மைத்திரி அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இந்தியா ஆதரவாக இருந்ததாக மகிந்த தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டானது இன்னமும் உறுதிப்படுத்தப்படா விட்டாலும் கூட, இவ்வாண்டின் ஆரம்பத்தில் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட அதிபர் தேர்தலில் மைத்திரி வெற்றி பெறுவதற்கு இந்தியாவின் ஆசிகளும் நிச்சயமாகக் கிடைக்கப் பெற்றன.

தற்போது, 2003ல் இடம்பெற்றது போன்று, மைத்திரி-ரணில் அரசாங்கம் இம்முறையும் இந்தியாவிடமிருந்து சில எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளது. இந்தப் பிரச்சினையானது முன்னர் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவின் நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். தனது ஆட்சிக்காலத்தின் போது மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமானது பாகிஸ்தானுடன் போர் விமானக் கொள்வனவு தொடர்பில் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தது.

ஆகவே இந்தக் கொள்வனவை மேற்கொள்வதென தற்போதைய மைத்திரி-ரணில் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உயர் மட்ட இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து வெளிவரும் தகவல்களின் பிரகாரம், சிறிலங்கா அரசாங்கத்தால் பாகிஸ்தானிடம்  பத்து JF -17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் செய்யப்படுவதை இந்தியா பலமாக எதிர்த்துள்ளது. முன்னாள் விமானப் படைத் தளபதி ஜெயலத் வீரக்கொடி, பாகிஸ்தானிற்கான சிறிலங்காவின் உயர் ஆணையாளராகக் கடமையாற்றிய போதே இந்த இணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

ஒற்றை இயந்திரம் பொருத்தப்பட்ட,  இலகுரக, ரகத்தைச் சேர்ந்த இந்தப் போர் விமானங்கள் பல்நோக்குப் பயன்பாடு கொண்டவை. இவை பாகிஸ்தானிய விமான வளாகம் மற்றும் சீனாவின் செங்டு விமானக் கூட்டுத்தாபனம் ஆகிய இரண்டும் இணைந்து தயாரிக்கப்பட்டவையாகும். JF -17 போர் விமானங்கள் உளவு பார்ப்பதற்கும், போர்க் களங்களில் தாக்குதல்கள் நடத்துவதற்கும் விமானங்களை இடைமறிப்பு செய்வதற்கும் பயன்படுத்தப்பட முடியும். பாகிஸ்தானால் இந்த போர் விமானங்களுக்காகச் சூட்டப்பட்டுள்ள JF-17 என்ற பெயரானது பாகிஸ்தானிய இராணுவத்தினரின் தேவையை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ‘கூட்டுப் போர்விமானம் – 17′ (‘Joint Fighter-17′) என்பதன் சுருக்கமாகும்.

பாகிஸ்தானிடமிருந்து சிறிலங்கா இவ்வகைப் போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பில் இந்தியா தனது எதிர்ப்பைக் காண்பிப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தனிப்பட்ட ரீதியாகத் தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்ததாக இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் விக்கிரமசிங்க ஆகிய இருவரிடமும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட டோவல், பாகிஸ்தானுடனான சிறிலங்காவின் போர் விமானக் கொள்வனவை எதிர்ப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சிறிலங்கா தொடர்ந்தும் பாகிஸ்தானுடன் தொடர்பைப் பேணினால் இது தீவிர அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என டோவல் எச்சரித்திருந்தார். மறுபுறத்தே நோக்கும் போது, சிறிலங்கா மூன்று கடற்படைக் கப்பல்களை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்வதாக தெரிவித்திருந்தது. ஆனாலும் இந்தியா தனது நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கவில்லை. பாகிஸ்தானை விட வேறெந்த நாடுகளிலிருந்து சிறிலங்கா தனக்குத் தேவையான விமானங்களைக் கொள்வனவு செய்ய வேண்டும் என இந்தியா நிபந்தனை விதித்தது.

இவ்வாறானதொரு சூழலில், சிறிலங்கா தன்னிடமிருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்தால், பத்து F-7  விமானங்களை புதப்பித்து வழங்குவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 2016 ஜனவரியில் பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் செரீப் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளும் போதே இது தொடர்பாக அறிவிப்பதென அந்நாடு திட்டமிட்டுள்ளது. தற்போதைய சிறிலங்காவின் மைத்திரி-ரணில் அரசாங்கம் போன்றே 1970-1977 காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கமும் இந்தியாவுடன் நட்புறவைப் பேணியது.

ஆனால் பங்களாதேஸ் யுத்தத்தின் போது பாகிஸ்தானியப் போர் விமானங்கள் கொழும்பில் எரிபொருளை நிரப்புவதற்கு சிறிமாவோ பண்டாரநாயக்க அனுமதித்த போது இந்தியா எரிச்சலுற்றது. அணிசேரா கோட்பாடு தொடர்பாக எழுதப்பட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் பத்தியானது இந்த விடயத்தை மேலும் தெளிவுபடுத்துகிறது. 1971ல் இந்திய-பாகிஸ்தானிய யுத்தம் இடம்பெற்ற போது, இது தொடர்பில் சிறிலங்கா எவ்வித தலையீடும் செய்யவில்லை. இந்த யுத்தம் முடிந்ததன் பின்னர், 1971 மார்ச் வரை பங்களாதேசை சிறிலங்கா இராஜதந்திர ரீதியாக அங்கீகரிக்கவில்லை.

ஆனாலும் பாகிஸ்தானியப் போர் விமானங்களுக்கு சிறிலங்கா தனது நாட்டில் எரிபொருள் நிரப்புவதற்கான அனுமதியை வழங்கியதானது இந்தியாவை எரிச்சலடையச் செய்துள்ளது என்பதை அறிந்த சிறிலங்கா குழப்பமுற்றது. இது தொடர்பாக பிரபல இந்தியப் பாதுகாப்பு ஆய்வாளர் ஆர்.சுப்பிரமணியம் ‘இந்தியாவும் அதன் வெளியுறவு மீள்பார்வையும்’ என்கின்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ‘இந்தியா மற்றும் அதன் அயல்நாடுகள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பரஸ்பரம் உதவிகளைப் பெற்று வருகின்றன. இதுபோன்றே சிறிலங்காவின் பண்டாரநாயக்க அரசாங்கமானது தனது நாட்டில் ஜே.வி.பி கிளர்ச்சி ஏற்பட்ட போது இந்தியாவின் உதவியை நாடியது.

ஆனால் இதற்குப் பிரதியுபகாரமாக பங்களாதேசில் பாகிஸ்தானியப் படையினர் தமது இனப்படுகொலைகளைப் புரிவதற்குப் பயன்படுத்திய விமானங்களைத் தனது நாட்டில் தரித்து நிற்பதற்கு சிறிமாவோ அனுமதித்தார்’ இதற்கு முன்னர் 1971ல் கொழும்பின் ஊடாக டாக்காவிற்கு பாகிஸ்தானியப் படைகள் கொண்டு செல்லப்பட்டனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில் 1965ன் முற்பகுதியில் இந்திய வட்டாரங்களுக்குள் இதையொத்த சந்தேகங்கள் தோன்றிய போது, பாகிஸ்தானிய இராணுவ விமானங்கள் கொழும்பின் ஊடாகவே தமது நாட்டின் மேற்குப் பகுதியிலிருந்து கிழக்குப் பகுதிக்குச் சென்றன.

தனது நாட்டின் துறைமுகங்கள், விமானநிலையங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஏனைய நாடுகள் தமது இராணுவப் படைகள் மற்றும் போர் சார்ந்த ஆயுத தளபாடங்களைக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா ஒருபோதும் அனுமதிக்காது என சிறிலங்கா மிகத் தெளிவாக அறிவித்த பின்னரும் கூட, மருத்துவ வழங்கல்களுடன் பாகிஸ்தானிய விமானம் கொழும்பின் ஊடாகப் பறப்பில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டது. சிறிலங்காவின் இந்த வரலாற்றையும் 2003 பலாலி விமானத் தளம் தொடர்பான சம்பவங்களையும் ஆராயும் ஒருவர், இந்தியாவுடன் தொடர்பைப் பேணுவதில் விழிப்புடன் செயற்படுவார்.

இந்த உண்மையை மகிந்த உணரத் தவறிவிட்டார். மைத்திரிக்கு அப்பால், 2004ல் இந்தியாவின் தலையீட்டால் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட ரணில் இந்தியாவிடமிருந்து சிறிலங்கா கற்றுக்கொண்ட பாடத்தை மீளவும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையிருக்காது.

No comments

Powered by Blogger.