எரியும் நெருப்பில், எண்ணெய்யை ஊற்றிய டோனால்ட் ட்ரம்ப்
பிரித்தானியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அந்நாட்டு ராணுவத்தில் இணைவதை விட, ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவது அதிகம் என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான டோனால்ட் ட்ரம்ப் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறிவரும் டோனால்ட் ட்ரம்ப்பை பிரித்தானிய நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது என பிரித்தானிய பொதுமக்கள் கையெழுத்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
பிரித்தானிய அரசு வரலாற்றில் முதன் முதலாக அரசு இணையத்தளத்தில் அதிக எண்ணிக்கையில் கையெழுத்திட்டுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.
இதுவரை அரசு இணையத்தளத்தில் அதிக பட்சமாக 4,46,482 பேர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர்.
ஆனால், டோனால்ட் ட்ரம்பிற்கு எதிராக இதுவரை 5,00,650 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
பிரித்தானிய மக்கள் தனக்கு எதிராக கையெழுத்து போராட்டம் நடத்தி வருவது குறித்து, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் டோனால்ட் ட்ரம்ப் நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ‘பிரித்தானியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்வதை விட, ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போராடுபவர்களே அதிகம்’ என கருத்து கூறியுள்ளார்.
பிரித்தானிய லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான காலிட் மஹ்மூத் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், ‘பிரித்தானியாவில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் இயக்கத்தில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2,000 என்ற அளவில் அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே சமயம், பிரித்தானிய ராணுவத்தில் இணைந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 600 என்ற அளவில் இருந்துள்ளது என்ற இந்த இரண்டு தகவல்களையும் ஒப்பிட்டு தற்போது டோனால்ட் ட்ரம்ப் கருத்து கூறியுள்ளார்.
டோனால்ட் ட்ரம்பின் இந்த கருத்து வெளியானவுடன் அமெரிக்கா, பிரித்தானியா நாடுகளை சேர்ந்த அரசியல் விமர்சகர்கள் அவரை கடுமையாக சாடி வருகின்றனர்.
‘டோனால்ட் ட்ரம்ப் ஒரு இனவெறியாளர். ஜேர்மனியில் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரை விட கொடூரமானவர்’ என விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment