மகிந்தவின் பிள்ளைகள் வசீம் தாஜூடீனின் நண்பர்கள் என்றால், ஏன் மரண வீட்டிற்குச் செல்லவில்லை..? ரஞ்சன்
ரக்பி வீரர், வஸிம் தாஜடீனின் கொலை தொடர்பில் 04-12-2015 நாடாளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.
தாஜூடீன் கொலை செய்யப்பட்டவிதம் குறித்தும் அவரின் மரணம் கொலை என்றும் இலங்கையின் நீதிமன்றத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று இந்தப்பிரச்சினையை எழுப்பிய பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தாஜூடீனின் கொலையின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளிநாட்டு செய்தியாளர் ஒருவருக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
அதில், அவர் தாமும் தமது இரண்டு சகோதரர்களும் தாஜூடீனின் சிறந்த நண்பர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். தாம் அடிக்கடி சந்தித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்..
எனினும் தாஜூடீனின் மரண வீட்டுக்கு நாமல் ராஜபக்சவும் அவருடைய சகோதரர்களும் ஏன் செல்லவில்லை என்று ராமநாயக்க கேள்வி எழுப்பினார்.
தாம் தமது நண்பர் மரணமானால் அங்கு சென்று நீண்ட நேரத்தை செலவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது எதிர்த்தரப்பில் இருந்து ராமநாயக்க மீது விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.
இந்தவேளையில் மஹிந்த ராஜபக்சவின் மனைவியான சிராந்திக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வழங்கிய வாகனத்தின் புகைப்படத்தை சபையில் காண்பித்த ராமநாயக்க, இந்த வாகனத்தின் மூலமே தாஜூடீன் கடத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
எனினும் இந்த புகைப்படம் தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பப்பட்டபோதும், ஏற்கனவே இந்த விடயத்தை சீஐடியினர் நீதிமன்றத்தில் கூறியிருப்பதால் அது ஒழுங்குப் பிரச்சினையல்ல என்று பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.
இதனையடுத்து கருத்துரைத்த ரஞ்சன் ராமநாயக்க கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் குறிப்பிட்டார்.
Post a Comment